This article is from Sep 04, 2019

42 வருட திட்டம் ஒரே நாளில் உடைந்தது | எலிகள் துளையிட்டதாக பாஜக அரசு தகவல்.

பரவிய செய்தி

42 வருட கால திட்டம் 2,176 கோடி செலவில் பாஜக அரசால் கட்டப்பட்டு திறந்த 24 மணி நேரத்தில் உடைந்தது. எலிகள் துளையிட்டதாக ஜார்க்கண்ட் மாநில பாஜக அரசு தகவல்.

மதிப்பீடு

விளக்கம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசால் திறந்து வைக்கப்பட்ட 42 ஆண்டு கால திட்டம் ஒரே நாளில் உடைந்ததாகவும், அதற்கு எலிகள் துளையிட்டதே காரணம் என ஆளும் பாஜக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளதாக இந்தியா7 நியூஸ் என்ற முகநூல் பக்கத்தில் செப்டம்பர் 2-ம் தேதி பதிவான நியூஸ் கார்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று பரவியுள்ளது.

செய்தியின் உண்மைத்தன்மை குறித்து தெரிந்து கொள்ள ஆராய்ந்த பொழுது ஆகஸ்ட் 28-ம் தேதி ஹிந்துஸ்தான் டைம்ஸ் இணையதளத்தில் ” 41 years on, Jharkhand’s Konar irrigation project inauguration today ” என்ற தலைப்பில் வெளியான செய்தி கிடைத்தது. வைரலாகும் நியூஸ் கார்டில் உள்ள புகைப்படம் செய்தியிலும் இடம்பெற்று இருக்கிறது.

” 1978-ம் ஆண்டில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 11.43 கோடி மதிப்பில் கோனார் நீர்ப்பாசனத் திட்டதிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நீர்ப்பாசனத் திட்டத்தின் மூலம் மூன்று மாவட்டங்களின் 62,995 ஹெக்டேர் விவசாய நிலம் பயனடையும் எனக் கூறப்படுகிறது. எனினும், திட்டமானது பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு 41 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.2,176.25 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டது “.

ஹசாரிபாக்கில் உள்ள பிஷ்ணுகர் பகுதியில் கோனார் நீர்ப்பாசனத் திட்டத்தில் ஒரு பகுதியை ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ரகுபர் தாஸ் திறந்து வைக்க உள்ளதாக செய்தியில் வெளியாகி இருக்கிறது.

ஒரே நாளில் உடைந்தது :

ஆகஸ்ட் 30-ம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் இணையதளத்தில் ” 42 years in making, Jharkhand canal collapses 24 hours after opening ” என்ற தலைப்பில் வெளியான செய்தியில் கோனார் நீர்ப்பாசனத் திட்டத்தின் ஒரு பகுதியான கால்வாய் பகுதிகள் திறந்து வைக்கப்பட்ட ஒரே நாளில் உடைந்து உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அம்மாநிலத்தின் கூடுதல் தலைமை செயலாளர்(நீர் வளத்துறை) அருண் குமார் சிங் கூறுகையில், ” விரைவில் நீர் வளத்துறையின் முதன்மை பொறியாளர் தலைமையில் ஆய்வு குழு அமைக்கப்படும். முதற்கட்ட தகவல்களின் படி, கால்வாயின் கான்கீரிட் இல்லாத பகுதிகளில் இருந்த எலி துளைகளால் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது மற்றும் அதுவே உடைந்து போக காரணமாகியுள்ளது ” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

கோனார் நீர்ப்பாசனத் திட்டத்தின் முழு பணிகளும் முடிவடையவில்லை. திட்டத்தின் முழு பணிகளும் 2021-ல் முடிவையும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளனர். அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக திறந்து வைக்கப்பட்ட கால்வாய் பகுதியே உடைந்து உள்ளது.

முடிவு :

நம்முடைய தேடலில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 42 ஆண்டுகள் கால திட்டம் ஒரே நாளில் உடைந்தது, அதற்கு காரணம் எலிகளின் துளைகளின் எனக் கூறும் நியூஸ் கார்டு செய்தி உண்மையே. ஜார்க்கண்ட் மாநில அரசு அதிகாரிகள் ஊடகங்களுக்கு அளித்த செய்தியில் அவ்வாறே தெரிவித்து உள்ளனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader