JIO அரிசி, பருப்பு வந்து விட்டதா ?| இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் உண்மையா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
புதிய வேளாண் சட்டத்தின் விளைவாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ லோகோ உடன் அரிசி, பருப்பு, கோதுமை போன்ற உணவு பொருட்களின் விற்பனை தொடங்கி உள்ளதாக ஜியோ சிம் பாக்கெட்டில் இருப்பது போன்ற வடிவமைப்பில் வெவ்வேறு வண்ணங்களில் இடம்பெற்ற மூட்டைகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
இதில், உணவு கிடங்கில் ” JIO ” லோகோ பொறிக்கப்பட்ட பைகளில் இருவர் உணவு தானியத்தை நிரப்பும் புகைப்படங்கள் இந்திய அளவில் வைரலாகி வருகிறது. மேலும், ஜியோ பிராண்ட்டில் ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள உணவு பொருட்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகியும் வருகிறது.
உண்மை என்ன ?
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தின் போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சிம் உள்ளிட்ட தயாரிப்புகளைப் புறக்கணிக்க வேண்டும் என்கிற முழக்கங்கள் எழுந்தன. இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ பிராண்டில் விவசாயப் பொருட்களின் விற்பனையைத் தொடங்கி இருப்பதாக இப்புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
ஆனால், வைரலாகும் இப்புகைப்படங்களில் இடம்பெற்று இருக்கும் லோகோ ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ பிராண்ட் அல்ல. இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இணையதளத்தின்படி ” JIO ” என்பது ஒரு டிஜிட்டல் துறை சார்ந்தது மட்டுமே. டிஜிட்டல் சார்ந்த முயற்சிகளுக்கு மட்டுமே ஜியோ உடைய லோகோ பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ரிலையன்ஸ் குழுமத்தின் ரீடைல் தொடக்கத்தின் குடையே ரிலையன்ஸ் ரீடைல். உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் சார்ந்த துறையில், ரிலையன்ஸ் ஃபிரெஷ், ரிலையன்ஸ் ஸ்மார்ட் மற்றும் ரிலையன்ஸ் மார்க்கெட் ஸ்டோர் போன்றவை இயங்கி வருகிறது. ஜியோ பிராண்ட் ஆனது டிஜிட்டல் வகை சார்ந்த துறைக்கு மட்டுமே. ஜியோ பிராண்ட் பெயரில் உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்வது இல்லை.
மக்கள் மத்தியில் ஒரு பிராண்ட் மிகப் பிரபலமாக இருந்தால் அதே பெயரில் அதே துறையில் அல்லது வேறு துறையில் பொருட்களை விற்பனை செய்வதுண்டு. மார்க்கெட்டிங் அதிகம் கிடைக்கும் என்பதற்காக பெரிய நிறுவனங்களின் பிராண்டில் சிறு சிறு விற்பனைகள் உலக அளவில் ஆங்காங்கே நிகழவும் செய்கிறது.
இதுவும் அவ்வாறான ஒன்றே. பிரபல ஜியோ rபிராண்ட் பெயரைப் பயன்படுத்தி விவசாயம் சார்ந்த பொருட்களை விற்பனை செய்கிறார்கள். ஆன்லைன் வணிகத்திலும் இதுபோன்ற போலியான பிராண்ட் விற்பனைகள் நடைபெறுகின்றன.
மேற்காணும் புகைப்படங்களில், ஜியோ லோகோ உடன் வெவ்வேறு வண்ணங்களில், வெல்வேறு டிசைன்களில் பாக்கெட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒருசிலவற்றில் விற்பனை செய்யும் நிறுவனத்தின் பெயரும் இடம்பெற்று இருக்கிறது.
எனினும், விவசாயத்துறையில் முகேஷ் அம்பானி முதலீடு செய்ய உள்ளார் என்ற செய்தி உண்மையே. டிஜிட்டல் துறையில் ஜியோவின் வெற்றிக்கு பிறகு, விவசாயம், கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் புதிய முதலீட்டை தொடங்க உள்ளதாக டெல்லியில் நடைபெற்ற Hindustan Times Leadership Summit-ல் முகேஷ் அம்பானி தெரிவித்ததாக 2017-ல் வெளியாகி செய்தி வெளியாகியது. ரிலையன்ஸ் JIOKrishi எனும் செயலி மூலம் ஜியோமார்டை இணைக்கும் சோதனை முயற்சியை அந்நிறுவனம் மேற்கொண்டது.
முடிவு :
நம் தேடலில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ பிராண்டில் அரிசி, பருப்பு, கோதுமை விற்பனை தொடங்கி இருப்பதாக வைரலாகும் புகைப்படங்கள் தவறானவை. ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ பிராண்டில் உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்வதில்லை. ரிலையன்ஸ் ரீடைல் என்பதன் கீழே அதை செய்து வருகிறது. போலியான ஜியோ பிராண்ட் லோகோ உடன் விற்பனை செய்யப்படும் மூட்டைகளின் புகைப்படங்களே சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.