This article is from Sep 30, 2018

அடிக்கல் கூட நாட்டாத ஜியோவிற்கு உலக தரம் வாய்ந்த பல்கலைக்கழகம் தகுதி..!

பரவிய செய்தி

ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ பல்கலைக்கழகத்திற்கு உலக தரம் வாய்ந்த பல்கலைக்கழகம் தகுதி. முகவரி கூட இல்லாத பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுத்து உள்ளது மத்திய அரசு.

மதிப்பீடு

சுருக்கம்

இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட உலக தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களாக மாற்றப் போகும் பட்டியலில் 6 பல்கலைக்கழகங்களில் இன்னும் தொடங்கப்படாத ஜியோ பல்கலைக்கழகமும் இடம்பெற்றுள்ளது. ஜூன் 2017-ல் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது மத்திய அரசு.

விளக்கம்

2017-ல் பீகார் மாநிலத்தின் பட்னா பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதல் 500 இடங்களில் ஒரு இந்திய பல்கலைக்கழகம் கூட இடம் பெறவில்லை. ஆகையால், நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் 10 அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் 10 தனியார் பல்கலைக்கழகங்களை தேர்வு செய்து உலகத் தரம் வாய்ந்தவையாக மாற்றப் போவதாக அறிவித்தார்.

உலகின் சிறந்த 500 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இடம்பெறுவதற்காக இந்திய பல்கலைக்கழகங்களை தேர்வு செய்வதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பாக முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் கோபால்சாமி தலைமையில் குழு ஒன்றை அமைத்தனர். அக்குழு தேர்ந்தெடுத்த பல்கலைக்கழகங்கள் பற்றிய முடிவை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார்.

10 அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் 10 பல்கலைக்கழகங்களை தேர்வு செய்வதாக அறிவித்த நிலையில் 6 பல்கலைக்கழகங்களை மட்டுமே அக்குழு தேர்ந்தெடுத்து உள்ளது. அதில், பெங்களூர் அறிவியல் கல்வி நிறுவனம், மும்பை இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம், டெல்லி தொழில்நுட்ப கல்வி நிறுவனம் என 3 அரசு பல்கலைக்கழகங்களும், பிட்ஸ் பிலானி, மணிப்பால் உயர்நிலைக் கல்வி மற்றும் ஜியோ பல்கலைக்கழகம் ஆகிய 3 தனியார் பல்கலைக்கழகங்களும் தேர்வு செய்துள்ளனர். இதில், ஜியோ பல்கலைக்கழகம் மட்டுமே இன்னும் தொடங்கப்படாத பல்கலைக்கழகம்.

” இப்பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 30% வரை ஒதுக்கி கட்டணத்தை அவர்கள் விருப்பம் போல் நிர்ணயிக்கலாம். 25% அளவிற்கு வெளிநாட்டு ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம். உலகின் முன்னணியாக உள்ள 500 பல்கலைக்கழகங்களுடன் தன்னிச்சையாக ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம் “.

“ அறிவிக்கப்பட்ட 3 அரசு  கல்வி நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ரூ.1000 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் நிறுவனங்கள் அரசு நிதியுதவி பெற முடியாது.  “  

University grants commission அக்டோபர் 2017-ல் வெளியிட்ட அறிக்கையில் உயர் கல்வியில் அரசு, தனியார் மற்றும் தனியார் நிறுவனங்களின் புதிய பல்கலைக்கழகங்கள் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகமாக மாற விண்ணப்பங்கள் கீழ்க்கண்டவற்றின் அடிப்படையில் UGC ஏற்கிறது.

  • ஏற்கனவே இருக்கின்ற அரசு கல்வி நிறுவனங்கள்.
  • ஏற்கனவே இருக்கின்ற தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் தங்களை உலக தரம் வாய்ந்த பல்கலைக்கழகமாக மாற்றுக் கூடியவை.
  • புதிதாக அமைக்கப்பட உள்ள  தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் அல்லது கிரீன் பில்ட் வகையின் கீழ் நிதியளித்தல்.

2018 மார்ச் 11 PTI அறிக்கையில், “ ரிலையன்ஸ் குழுமம் தொடங்க உள்ள பல்கலைக்கழகம் குறித்து அறிக்கையை அரசு பகிர்ந்து உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் குழுமத்தின் “ திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி ” கடந்த 10 வருடங்களாக முதல் இடத்தில் உள்ளது. கல்வி நிறுவனத்தில் உள்ள இந்த அனுபவம் அவர்களுக்கு உதவியாக இருக்கும்” என்று தெரிவித்து இருந்தது.

ஜியோ பல்கலைக்கழகம் தேர்ந்தெடுத்தது குறித்து மத்திய அரசு அளித்த விளக்கத்தில், “ உயர் கல்வியில் தனியார் முதலீட்டை ஊக்குப்பதற்காக புதிய தனியார் பல்கலைக்கழகங்களுக்கு இந்த தகுதி தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதில் விண்ணப்பித்த 11 தனியார் நிறுவனங்களில் இருந்து ஜியோ தேர்வாகியதாக “ தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளத்தில் தவறான செய்திகள் பரவுவதாகவும், அது சம்பந்தமான விளக்கத்தை HRD அமைச்சகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அதில், ஜியோ பல்கலைக்கழகம் பற்றியும் விளக்கியுள்ளனர்.

கிரீன் பீல்ட் வகையில் 11 விண்ணப்பங்கள் வந்தன, அதில் ஜியோ மட்டுமே தகுதி வாய்ந்ததாக இருந்தது என்கிறது அமைச்சரவை. அந்த நான்கு தகுதிகள்:

  • நிலம் இருக்க வேண்டும்
  • மிக அதிக அனுபவம் உள்ள முதன்மை குழுவை வைத்திருத்தல் .
  • நிறுவனம் அமைக்க தேவையான நிதியினை வைத்திருத்தல்.
  • தெளிவான திட்டமிட்ட பார்வை.

ஜியோ பல்கலைக்கழகம் ரூ.9600 கோடியில் அடுத்த 3 ஆண்டுகளில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இன்னும் தொடங்கப்படாத நிறுவனத்தை உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகமாக மாற்ற முயற்சி மேற்கொள்ள போகிறார்கள். எனினும், இந்தியாவின் மிகப்பெரிய தனியார் குழுமம் கல்வியில் முதலீடு செய்து உலகின் சிறந்த பல்கலைக்கழகத்தை உருவாக்க நினைத்தாலும், அதில் பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே இடம்  கிடைக்கும் என்பதே நிதர்சனம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader