ஜேஎன்யூ-வில் ஏபிவிபி மாணவியிடம் இருந்து துப்பாக்கியை போலீஸ் கைப்பற்றியதா ?

பரவிய செய்தி
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ABVP அமைப்பைச் சேர்ந்த மாணவியிடம் கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தது டெல்லி காவல்துறை.
மதிப்பீடு
விளக்கம்
ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் ராம நவமியை முன்னிட்டு அசைவ உணவு சமைக்க கூடாது என பாஜகவின் ஏபிவிபி மாணவர் அமைப்பிற்கும், இடதுசாரி ஆதரவு மாணவர் குழுவிற்கு இடையே ஏற்பட்ட மோதல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஜே.என்.யூ பல்கலைக்கழக வளாகத்தில் ஏபிவிபி மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவி ஒருவரிடம் இருந்து கைத்துப்பாக்கியை போலீசார் கைப்பற்றியதாக 16 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ABVP அமைப்பைச் சேர்ந்த மாணவியிடம் கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தது டெல்லி காவல்துறை. pic.twitter.com/ZInHJPotJK
— குரங்கு மனிதன் (@thiravidan1984) April 13, 2022
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை பிரித்து எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், உத்தரப்பிரதேசத்தில் ஆசிரியர் ஒருவரிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கியை போலீசார் கைப்பற்றியதாக ஏப்ரல் 13-ம் தேதி NDTV செய்தியில் அதே வீடியோ உடன் வெளியாகி இருக்கிறது.
” உத்தரப்பிரதேசத்தின் ஃபைரோசாபத் நகரில் உள்ள பள்ளி ஆசிரியரான கரிஷ்மா சிங் யாதவ் என்பவர் தன்னுடைய வேலை காரணமாக மையின்பூரி பகுதிக்கு சென்ற போது போலீசார் நாட்டுத் துப்பாக்கி இருப்பதை கண்டுபிடித்ததாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது”.
उक्त प्रकरण में जांच उपरांत ज्ञात हुआ कि तमंचा के साथ पकड़ी गई महिला शिक्षिका नही है। तमंचा कहां से लेकर आयी थी ,किस प्रयोजन के लिए लायी थी इस संबंध में थाना कोतवाली में अभियोग पंजीकृत कर जांच की जा रही है।
— MAINPURI POLICE (@mainpuripolice) April 13, 2022
இதுகுறித்து அப்பெண் மீது கோடவாலி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக மையின்பூரி காவல்துறை ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறது.
முடிவு:
நம் தேடலில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவியிடம் கைத்துப்பாக்கியை டெல்லி காவல்துறை பறிமுதல் செய்ததாக பரவும் தகவல் தவறானது. அந்த வீடியோ உத்தரப்பிரதேசம் மையின்பூரி பகுதியில் எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.