This article is from Jan 08, 2020

JNU-வில் தாக்கப்பட்டவர் ஒரே நாளில் குணமடைந்ததாக பொய் பரப்புரை!

பரவிய செய்தி

நேத்து டெல்லியில் மண்டை உடஞ்சு போச்சுன்னு சொல்லி ஆஸ்பதிரியில படுத்தவனுக்கு இன்னைக்கு கேரளாவில் மரியாதை!தலையில சிறு காயம் கூட இல்லை.

Facebook link | archived link 

மதிப்பீடு

விளக்கம்

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதியில் முகமூடி அணிந்த கூட்டம் மாணவர்களை இரும்பு ஆயுதங்களை கொண்டு தாக்கிய சம்பவம் நாடு முழுவதிலும் கண்டனங்களை பெற்றது.

இச்சம்பவத்தில் தாக்கப்பட்ட ஸ்டுடென்ட் ஃபெடரேஷன் ஆப் இந்தியா (SFI) அமைப்பைச் சேர்ந்தவர் தலையில் கட்டுடன் இருக்கும் புகைப்படங்கள் முதன்மை ஊடங்களில் கூட வெளியாகி இருந்தன. அவர் தலையில் கட்டுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் அடுத்த நாளிலேயே உடலில் கட்டுகள் இல்லாமல் இருப்பதாக என சில புகைப்படத்தை இணைத்து சமூக வலைதளங்களில் எதிர்மறையான கருத்துக்களுடன் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

archived link 

ஜே.என்.யு பல்கலைக்கழக பகுதியில் கடுமையாக தாக்கப்பட்ட எஸ்.எப்.ஐ தலைவர் சூரி கிருஷ்ணன் அடுத்த 24 மணி நேரத்திலேயே குணமடைந்த பிறகு அவருக்கு திருவனந்தபுரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டதாக ABVP அமைப்பைச் சேர்ந்தவர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் என பலரும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

தமிழிலும் சூரி கிருஷ்ணன் உடைய புகைப்படங்கள் பகிரப்பட்டு, அடுத்த நாளில் தலையில் சிறு காயம் கூட இல்லை எனக் கூறியுள்ளனர். இப்படி இந்திய அளவில் சமூக வலைதளங்களில் வலதுசாரிகளால் சூரி கிருஷ்ணன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது மற்றும் சமூக வலைதளங்களில் தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.

உண்மை என்ன ? 

Comrade என்ற முகநூல் பக்கத்தில், ” ஜேஎன்யு-வின் ஹாஸ்டல் வளாகத்தில் எஸ்எப்ஐ ஆர்வலர் தோழர் சூரி கிருஷ்ணன் ஏபிவிபி குண்டர்களால் கடுமையாக தாக்கப்பட்டார். இந்த வீடியோவில், தன்னை பற்றி பரப்பப்படும் தவறான பிரச்சாரங்கள் குறித்தும் மற்றும் பொய்யான காயத்துடன் இல்லை என்பதையும் விளக்குகிறார் ” எனக் குறிப்பிட்டு வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

archived link

வீடியோவில் பேசும் சூரி கிருஷ்ணன், ” ஜே.என்.யு-வில் பெரியார் விடுதிக்கு முன்னால் 8 ஏபிவிபி குண்டர்களால் நான் தாக்கப்பட்டேன். அவர்கள் என்னை இரும்பு கம்பிகளால் அடித்தார்கள். இப்பொழுது எனக்கு ஏற்பட்ட காயங்களை உங்களிடம் காட்டுகிறேன் ” எனக் கூறியுள்ளார். அதன்பிறகு, நெற்றியில் உள்ள காயங்களை காண்பித்த பிறகு தலையில் இருக்கும் காயத்தை காண்பித்து உள்ளார். அதில், தையல் போட்டு இருப்பதை காணலாம்.

தனது கைகளில் அடிபட்டது மற்றும் பேண்டேஜ் குறித்து கூறுகையில், ” என்னால் எனது இடது கையை நகர்த்த முடிகிறது, ஆனால் வலது கையில் வீக்கம் உள்ளது. தலையில் ஏற்பட்ட காயத்திற்கு டின்கள் பொருத்தப்பட்டு உள்ளதால், பேண்டேஜ் மூலம் மூடத் தேவையில்லை என மருத்துவர்கள் கூறினார்கள் ” எனத் தெரிவித்து உள்ளார்.

ஜனவரி 5-ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் சூரி கிருஷ்ணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. அவர் தொடர்பான மருத்துவ அறிக்கையில், உச்சந்தலையில் காயம் இருப்பதை உறுதி செய்கிறது. மேலும், அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக குறிப்பிடவில்லை.

சூரி கிருஷ்ணன் தலையில், கையில் கட்டுகள் இல்லாமல் இருக்கும் புகைப்படங்கள் கேரளாவில் எடுக்கப்பட்டவையே. ஜனவரி 7-ம் தேதி வெளியான செய்தியில், சூரி கிருஷ்ணனுக்கு அப்பகுதியைச் சேர்ந்த எஸ்எப்ஐ உறுப்பினர்கள் வரவேற்றதாக வெளியாகி இருக்கிறது. அப்போழுது செய்திகளுக்கு அவர் அளித்த பேட்டியில், தனக்கு நேர்ந்த காயம் குறித்தும், தன்னுடைய இடது கை நன்றாக உள்ளதாகவும் தெரிவித்ததாக வெளியாகி இருக்கிறது.

முடிவு : 

ஜேஎன்யு-வில் தாக்கப்பட்ட எஸ்.எப்.ஐ ஆர்வலர் சூரி கிருஷ்ணன் பொய்யான காயத்துடன் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது பொய்யான பரப்புரை என்பதை அறிய முடிகிறது. ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த பலரும், வலதுசாரி ஆதரவாளர்கள் இப்பொய்யான பரப்புரையை மேற்கொண்டுள்ளனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader