JNU மாணவ அமைப்பு தலைவரின் கையில் போலியான கட்டா ?| உண்மை என்ன.

பரவிய செய்தி
JNU மாணவர்கள் நடத்திய நாடகம் பாரீர். பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் போது வலது கையில் கட்டு.! கனிமொழியை சந்திக்கும் போது இடது கையில் கட்டு.!
மதிப்பீடு
விளக்கம்
டெல்லி ஜே.என்.யு மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு நாடு முழுவதிலும் கண்டனங்கள் எழுந்தன. குண்டர்கள் நடத்திய மாணவர்கள் மீதான தாக்குதலில் ஜே.என்.யு-வின் மாணவர் அமைப்பின் தலைவர் ஆய்ஷி கோஷ் கடுமையாக தாக்கப்பட்டு இருந்தார். ஆனால், ஆய்ஷி கோஷ் போலியான காயத்துடன் நாடகமாடி வருவதாக சமூக வலைத்தளங்களின் சில புகைப்படங்கள் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
அதாவது, ஆய்ஷி கோஷ் பத்திரிகையாளர்களை சந்திக்கும் பொழுது வலது கையில் கட்டுடன் இருக்கிறார், திமுக எம்பி கனிமொழியை சந்திக்கும் பொழுது இடது கையில் கட்டுடன் இருக்கிறார் என சில புகைப்படங்களை பதிவிட்டு உள்ளனர். எனவே, இதன் உண்மைத்தன்மை குறித்து அறிய ஆராய்ந்து பார்த்தோம்.
உண்மை என்ன ?
ஜனவரி 7-ம் தேதி NDTV-ல் வெளியான செய்தியில், ஜே.என்.யு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களின் பெயர்கள் காவல்துறை தரப்பில் வெளியிடப்படவில்லை. மாறாக, தாக்குதலுக்கு உள்ளான ஜே.என்.யு மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஆய்ஷி கோஷ் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆய்ஷி கோஷ் தாக்கப்பட்ட சம்பவத்தை புகைப்படத்துடன் பல செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு இருந்தனர்.
ஆய்ஷி கோஷ் பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கும் பொழுது அவரின் வலது கையில் கட்டு உள்ளதாக பரவும் செய்தியில் கூறியுள்ளனர். ஆனால், ஜனவரி 6-ம் தேதி இந்தியா டுடே செய்திக்கு ஆய்ஷி கோஷ் பேட்டி அளிக்கும் பொழுது, அவரின் இடது கையில் கட்டு இருப்பதை காணலாம்.
ஜனவரி 10-ம் தேதி TNIE சேனலில் வெளியான பத்திரிகையாளர்கள் சந்திப்பு வீடியோவில், ஆய்ஷி கோஷ் தனது இடது கையில் அடிபட்ட காரணத்தினால் வலது கையை அசைத்து பேசுவதை காணலாம். இதுமட்டுமின்றி, பல செய்திகளில் ஆய்ஷி கோஷ் உடைய இடது கையிலேயே கட்டு உள்ளது.
Delhi: DMK MP Kanimozhi meets Jawaharlal Nehru University Students’ Union President Aishe Ghosh in the campus. #JNUViolence pic.twitter.com/VJm7Ocyoyg
— ANI (@ANI) January 8, 2020
திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஜே.என்.யு வழக்கத்தில் மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஆய்ஷி கோஷை சந்தித்த பொழுது ஆய்ஷி கோஷ்-யின் இடது கையில் கட்டு இருப்பதாக கூறும் புகைப்படங்கள் ANI உள்ளிட்ட முன்னணி செய்திகளிலேயே வெளியாகி இருக்கிறது.
ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்புரை செய்வது போன்று ஜே.என்.யு மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஆய்ஷி கோஷ் வலது கையில் கட்டுடனும், கனிமொழியை சந்திக்கும் பொழுது இடது கையில் கட்டுடனும் இருக்கவில்லை. இரண்டிலுமே இடது கையில் கட்டுடன் இருந்துள்ளார்.
மேலும் படிக்க : பாஜக அமைச்சர் கை உடைந்தது போன்று நாடகமாடுகிறாரா ?| உண்மை அறிவோம்!
போட்டோ மிரர் எனக் கூறுவது போன்று அவரின் புகைப்படத்தினை திருப்பி வலது கையில் கட்டு இருப்பது போன்று மாற்றியுள்ளனர். இதுபோல், போட்டோ மிரர் செய்து போலியான செய்தியை மக்களிடையே பரப்புவது முதல் முறை அல்ல. சில மாதங்களுக்கு முன்பு, மத்தியப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உடைந்து கையினை போன்று போலியான கட்டுடன் இருப்பதாக போட்டோ மிரர் செய்த புகைப்படங்களை வைரலாகினார்கள்.