விபத்தில் பாதிக்கப்பட்டவரை காப்பாற்றாமல் வீடியோ எடுக்கும் பத்திரிகையாளர் ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி

சாலையில் விபத்து ஏற்பட்டு கீழே விழுந்து தவிக்கும் பெண்ணை காப்பாற்றாமல் வீடியோ எடுக்கும் பத்திரிகையாளர் டிஜிட்டல் இந்தியா..!! மனிதாபிமானம் இல்லாத மிருக ஜென்மங்கள்.

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

சாலையில் விபத்துக்குள்ளான பெண்ணைப் பத்திரிகையாளர்கள் இருவர் சாலையை கடந்து வந்து உதவாமல் வீடியோ எடுத்த கொடுமை என்றும், டிஜிட்டல் இந்தியாவின் அவலநிலை எனக் கூறியும் கீழ்காணும் வீடியோ இந்திய சமுக வலைதளத்தில் ஆயிரக்கணக்கில் ஷேர் ஆகி வைரலாகி வருகிறது. இது எங்கு நிகழ்ந்தது, இதன் உண்மைத்தன்மை என்னவென்று அறிய தேடிப் பார்க்கத் தீர்மானித்தோம்.

Advertisement

உண்மை என்ன ?  

வைரல் வீடியோவில், இருசக்கரவாகனத்தில் விபத்துக்குள்ளாகி சாலையில் விழுந்து கிடக்கும் நபருக்கு உதவ யாரும் முன்வராத நிலையில் எதிரே இருந்து வந்த இரண்டு பேர் வீடியோ கேமராவில் படம் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். பாதிக்கப்பட்டவர் வலியில் துடித்துக் கொண்டிருக்க உதவால் வீடியோ எடுக்கிறார்கள். சாலையில் நிகழ்ந்த சம்பவத்தை மாடியில் இருந்து ஒருவர் வீடியோ எடுத்து இருக்கிறார். எனினும், இச்சம்பவம் எங்கு நிகழ்ந்தது, உண்மை என்னெவென்று தெரியாமல் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் இந்தியாவில் நிகழ்ந்ததாக சமூக வலைதளங்களில் மட்டுமே வெளியாகி இருக்கிறது. அதிகாரப்பூர்வ செய்திகள், இணையதளங்கள் எதிலும் இவ்வீடியோ குறித்த செய்திகள் ஏதும் வெளியாகவில்லை. ஆகஸ்ட் 3-ம் தேதி ஜே.கே ஸ்டேட் நியூஸ் எனும் முகநூல் பக்கத்தில் கூட வைரல் வீடியோ என்றேக் குறிப்பிடப்பட்டுள்ளது, எங்கு நிகழ்ந்தது எனக் குறிப்பிடப்படவில்லை. ஆகஸ்ட் 3-ம் தேதியில் இருந்தே இந்திய மொழிகளில் இவ்வீடியோ அதிகம் வைரல் செய்யப்பட்டு உள்ளது.

Advertisement

வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் பல பதிவுகள் கிடைத்துள்ளன. எனினும், ஆகஸ்ட் 2-ம் தேதியே நேபாளம் நாட்டைச் சேர்ந்த ” Nepal news Nepal Khabar ” எனும் முகநூல் பக்கத்தில் இவ்வீடியோ பதிவாகி இருப்பதை காண முடிந்தது. இவ்விரு பதிவிலும் பத்திரிகையாளர்கள் செயல் என்றேக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

நேபாள நாட்டு முகநூல் பக்கங்களில் வெளியானதை வைத்து இந்த சம்பவம் நேபாள நாட்டில் நிகழ்ந்து இருக்கக்கூடும், இந்தியாவில் இல்லை என அறிய முடிகிறது. இருப்பினும், இந்த விபத்து சம்பவம் உண்மையா அல்ல, ஷூட்டிங் எடுக்கப்பட்ட சம்பவமா என சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது. வீடியோவின் தொடக்கத்தில், விழுந்து கிடக்கும் நபருக்கு நேராக ஒரு நபர் ஸ்டான்ட் வைத்து நிற்பதை பார்க்க முடிந்தது. வீடியோவின் முதல் சில நொடிகளில் அந்த நபர் எதிரே கேமரா உடன் இருக்கும் இருவரையும் அழைப்பதையும் பார்க்க முடிகிறது.

சாலையில் விழுந்து கிடக்கும் நபருக்கு பெரிதாய் அடிபட்டது போன்றோ, அப்பகுதியில் இரத்தத்தின் அடையாளமோ தென்படவில்லை. பத்திரிகையாளர் எனக் கூறப்படும் இரு நபர்கள் வருவதற்கு முன்பே அங்கிருந்த மற்ற யாரும் உதவ முன்வரவில்லை. ஆகவே, இது ஷூட்டிங் நடைபெற்ற போது மாடியில் இருந்து யாரோ எடுத்த வீடியோ எனப் புரிந்து கொள்ள முடிந்தது.

முடிவு : 

நம் தேடலில், சாலையில் விபத்து ஏற்பட்டு கீழே விழுந்து தவிக்கும் பெண்ணை காப்பாற்றாமல் வீடியோ எடுக்கும் பத்திரிகையாளர் டிஜிட்டல் இந்தியா எனக் கூறி வைரல் செய்யப்படும் வீடியோ இந்தியா அல்ல, நேபாளத்தில் எடுக்கப்பட்டது என்றும், அவ்வீடியோ ஷூட்டிங் நிகழ்ந்த போது எடுக்கப்பட்டது என்றும் அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button