This article is from Jun 12, 2019

அரசின் தவறுகளை கேள்வி கேட்டதால் பத்திரிகையாளர் தாக்கப்பட்டாரா ?

பரவிய செய்தி

அரசின் தவறுகளை கேள்வி கேட்டதற்கு பாஜக குண்டர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட மும்பை ஊடகவியலாளர் நிகிதா ராவ்.

மதிப்பீடு

விளக்கம்

மும்பையில் ஊடகவியலாளர் நிகிதா ராவ் என்பவர் அரசின் தவறுகளை கேள்வி கேட்டதற்கு பாஜக குண்டர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு உள்ளார் என்ற செய்தியுடன் முகத்தில் காயங்களுடன் இருக்கும் ஓர் பெண் உடைய புகைப்படம் சமீபத்தில் வைரலாகி வருகிறது.

இச்செய்தி உண்மையா ? என்ற ஆய்வில் மும்பை பத்திரிகையாளர் நிகிதா ராவ் என்பவர் தாக்கப்பட்டாரா என கூகுளில் தேடிப் பார்க்கையில் பூம்லைவ் தவிர வேறெங்கும் இடம்பெறவில்லை.

அதில், காணாமல் போன இந்திய விமானப் படையின் விமானத்தை பற்றி கேள்வி எழுப்பியதற்காக பத்திரிகையாளர் நிகிதா ராவ் தாக்கப்பட்டார் என ஹிந்தி மொழியில் பரவிய போஸ்ட்கள் இடம்பெற்றதை பார்க்க முடிந்தது. இந்த செய்தி முற்றிலும் சமூக வலைத்தளங்களில் மட்டுமே பகிரப்பட்டு வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.

யார் இந்த நிகிதா ராவ் :

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் கல்யாண் பகுதியில் நிகிதா ராவ் பகுதி நேரம் பத்திரிகையாளராகவும், சமூக பணிகளிலும் தம்மை ஈடுபடுத்தி வருகிறார். கல்யாண் பகுதியில் ஒரு கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதாக வாக்குறுதி அளித்து உள்ளார். அதனை வழங்கும்படி கேட்டதற்கு உரிமையாளர் மறுக்கவே விவசாயிகளுக்கு ஆதரவாகவும், கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளருக்கு எதிராகவும் நிகிதா போராடி வந்துள்ளார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் அனுப்பிய குண்டர்கள் தாக்கியதில் நிகிதா ராவ்-க்கு முகத்தில், கையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. நிகிதா ராவ் காயங்களுடன் இருக்கும் புகைப்படங்களே தற்போது தவறான செய்தியுடன் பரவி வருகிறது.

” இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கும் புகைப்படம் என்னுடையது தான். நான்கு நாட்களுக்கு முன்பு குண்டர்களால் தாக்கப்பட்டேன். ஆனால், சமூக வலைதளத்தில் கூறப்படும் கூற்று தவறாகும். இந்திய விமானப்படையின் விமானம் காணாமல் போனதற்கு அரசை கேள்வி கேட்டதால் தாக்கப்படவில்லை ” என நிகிதா ராவ் பூம்லைவ்-க்கு தகவல் தெரிவித்து உள்ளார்.

முடிவு :

மும்பையில் நிகிதா ராவ் என்பவர் குண்டர்களால் தாக்கப்பட்டதும், பரவிய படங்களும் அவருடையது என்பதும் உண்மையே. ஆனால், விமானப்படை விமானம் காணாமல் போனதற்கு அரசினை எதிர்த்து கேள்வி கேட்டதற்கு பாஜக குண்டர்களால் தாக்கப்பட்டார் என்பது தவறான செய்தியாகும். நடந்த நிகழ்வு தவறாக திசை திருப்பப்பட்டுள்ளது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader