மாநகராட்சியில் வாகன ரிப்பேர் செலவு ரூ51.64 கோடி.. அதிமுக ஆட்சியில் நடந்ததை திமுக எனப் பரப்பும் அதிமுக, பாஜகவினர்.

பரவிய செய்தி

வாகன ரிப்பேர் செலவு ரூ.51.64 கோடி… – மிரள வைக்கும் மதுரை மாநகராட்சி கணக்கு! விடியல் என்றால் சும்மாவா

Facebook link

மதிப்பீடு

விளக்கம்

திமுக ஆட்சியில் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள வாகனங்களை ரிப்பேர் செய்ய ரூ.51.64 கோடி செலவு செய்யப்பட்டு இருப்பதாக விகடனின் நியூஸ் கார்ட் ஒன்றினை அதிமுக மற்றும் பாஜகவினர் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் பரப்பி வருகின்றனர். 

Archive link

Twitter link 

உண்மை என்ன ?

இது குறித்து விகடன் பக்கத்தில் தேடினோம். 2022 அக்டோபர் 12ம் தேதி “வாகன ரிப்பேர் செலவு ரூ.51.64 கோடி… மிரள வைக்கும் மதுரை மாநகராட்சி கணக்கு!” என்ற தலைப்பில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த கட்டுரையின் முதல் வரியிலேயே “ஐந்து ஆண்டுகளில் வாகனப் பராமரிப்புக்காக ரூ.51.64 கோடி” என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வழக்கறிஞர் கட்டணமாக 3.5 கோடி ரூபாயும், ஆடிட்டர் கட்டணம் 4.44 கோடி ரூபாயும் மதுரை மாநகராட்சியில் செலவு செய்யப்பட்டு இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் கணக்குக் காட்டியுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதில் 5 ஆண்டுகள் என்பது  2015 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தினை குறிப்பதாகக் கட்டுரையின் உள்ளே குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நிதி ஆண்டுகளில் தமிழ்நாட்டினை ஆட்சி செய்தது அதிமுக

அக்கட்டுரையில், மதுரை மாநகராட்சி இணையதளத்தில் 2015-16 முதல் 2019-2020 வரையிலான வரவு செலவு விவரம் பதிவேற்றப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மாநகராட்சியில் 2016-2020 நிதியாண்டுகளில் மொத்தமாக ரூ.2,228.76 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. 

அதில் வாகனப் பழுது நீக்குவதற்காக மட்டும் ரூ.51.64 கோடி செலவிடப்பட்டிருப்பதாக சமூக ஆர்வலர் ஹக்கீம் விகடனில் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக மதுரை மாநகராட்சி இணையதளத்தில் உள்ள வரவு செலவு அறிக்கையினை தேடினோம். அத்தளத்தில் 2015-16, 2016-17 ஆகிய ஆண்டுகளுக்கான வரவு செலவு மட்டுமே பதிவேற்றப்பட்டுள்ளது.

அதில், 2015-16ம் ஆண்டில் வாகன பழுது பார்ப்பு செலவு ரூ.7,50,45,037 (Light Vehicle Maintenance Rs.22,98,829 + Heavy Vehicles Maintenance Rs.7,27,46,208). அதேபோல், 2016-17ம் ஆண்டில் ரூ.15,43,74,186 (L.Vehicle Maintenance Rs.85,86,319 + H.Vehicles Maintenance Rs.14,57,87,867) வாகன பழுது பார்ப்பு செலவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2015-16 மற்றும் 2016-17 ஆகிய இரண்டு நிதி ஆண்டில் மட்டும் ரூ.22.94 கோடி வாகன பழுது பார்ப்பிற்காகச் செலவு செய்யப்பட்டுள்ளது. 

இதில், விகடன் வெளியிட்ட சமூக வலைதள பதிவுகளிலும் எந்த ஆட்சி அல்லது எந்த வருடம் என்பதை நேரடியாக குறிப்பிடாமல் கிளிக் பைட் ஆக தலைப்பை வைத்து உள்ளனர். 

விகடன் வெளியிட்டுள்ள கட்டுரையின் முதல் வரியினை படித்திருந்தாலே இது அதிமுக ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்தது என்பதை புரிந்து கொண்டிருக்கலாம். ஆனால், தலைப்பினை மட்டும் படித்து விட்டு, திமுக ஆட்சியில் நடந்ததாக அதிமுக கட்சியினரும், பாஜக கட்சியினரும் தவறாகப் பரப்பி வருகின்றனர். 

முடிவு :

நம் தேடலில், திமுக ஆட்சியில் வாகன ரிப்பேர் செலவு ரூ.51.64 கோடி எனப் பரப்பப்படுவது திமுக ஆட்சியில் நடந்தது அல்ல என அறிய முடிகிறது. இது 2015-16 முதல் 2019-2020 வரையில் மதுரை மாநகராட்சியில் செய்யப்பட்ட வாகன பழுது பார்ப்பு செலவாகும். அந்த காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அதிகாரத்திலிருந்தது குறிப்பிடத்தக்கது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader