இந்துக்களுக்கு எதிராக தீர்ப்பு கூற காங்கிரஸ் தன்னை நியமித்ததாக நீதிபதி ஜோசப் கூறினாரா ?

பரவிய செய்தி
நான் ஒரு கிறிஸ்தவன் என்பதால் இந்துக்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கவே என்னை காங்கிரஸ் ஆட்சியில் நீதிபதியாக அமர்த்தினார்கள், பாஜக ஆட்சியில் அது சாத்தியமில்லாமல் போனது – உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் ஒப்புதல் வாக்குமூலம்.
மதிப்பீடு
விளக்கம்
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் முந்தைய காங்கிரஸ் அரசிற்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைத்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் செய்தி உடன் ஓர் பதிவு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. முகநூல் குரூப் மற்றும் Youturn போஸ்ட்களின் கமென்ட்களிலும் பரவிய செய்தியை பகிர்ந்து அதன் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி இருந்தனர்.
இது தொடர்பான தேடலின் முதலில் ” We felt then-CJI was being remote-controlled: Justice Kurian Joseph ” என்ற தலைப்பில் டைம்ஸ் ஆப் இந்தியா நீதிபதி குரியன் ஜோசப் பற்றிய செய்தியை கண்டுபிடித்தோம். ஆனால், அச்செய்தியானது சமீபத்தில் வெளியானவை அல்ல, 2018 டிசம்பர் 3-ம் தேதி வெளியான செய்தியாகும்.
செய்தியில் இருப்பது ?
2018-ல் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் 4 பேர் ஒன்றுக்கூடி செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி தீபக் மிஸ்ரா மீது அதிருப்தியை முன்வைத்தனர். அது தொடர்பாக நீதிபதி குரியன் ஜோசப் டைம்ஸ் ஆப் இந்தியா செய்திக்கு அளித்த பிரத்யேக பேட்டியே பரவி வரும் பதிவுகளுடன் இணைக்கப்பட்ட செய்தித்தாளில் இடம்பெற்று இருக்கிறது.
நீதிபதிகளின் அதிருப்தி :
2018-ல் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வரர், ரஞ்சன் கோகாய் , மதன் பி லோகூர் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர், ” உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறிப்பிட்ட சில முக்கிய வழக்குகளை மூத்த நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு ஒதுக்காமல், தனக்கு வேண்டிய சில நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு ஒதுக்குவதாக புகார் தெரிவித்தனர் “.
அது தொடர்பாக இரண்டு மாதங்களுக்கு முன்பாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு எழுதிய கடிதத்தை செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டனர்.
2018-ல் உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா மீது அதிருப்தி தெரிவித்த நான்கு மூத்த நீதிபதிகளில் ஒருவராக இருந்த ரஞ்சன் கோகாய் தற்பொழுது இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ளார்.
முடிவு :
நமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் காங்கிரஸ் அரசிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை என்பதை அறியலாம். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீதான 4 நீதிபதிகள் தெரிவித்த அதிருப்தி தொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு அளித்த பேட்டியே இணைக்கப்பட்டு உள்ளது.
நீதிபதி குரியன் ஜோசப் தன்னை கிறிஸ்தவர் எனக் கூறிக் கொள்ளவில்லை, இந்துக்களுக்கு எதிரான வழக்குகள் குறித்தும் ஏதும் தெரிவிக்கவில்லை. மதம் சார்ந்த கருத்துக்கள் அங்கு இடம்பெறவில்லை என்பதே உண்மை.
தொடர்பில்லாத செய்தியைக் கொண்டு மதம் சார்ந்தும், கட்சி சார்ந்தும் புரளியை பரப்பி உள்ளனர் என்பது தற்பொழுது நிரூபணமாகி உள்ளது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.