கைலாசா நாட்டின் கரன்சி என பரவும் ஃபோட்டோஷாப் புகைப்படம் !

பரவிய செய்தி
கைலாச நாட்டு நோட்டு அறிமுகம். இந்து நாடாக அறிவிப்பு. வாழ்த்துக்கள் நித்தி.
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவின் தேடப்படும் குற்றவாளி பட்டியலில் உள்ள நித்தியானந்தா கைலாசா எனும் நாட்டை உருவாக்கி வாழ்ந்து வருவதாக வீடியோவை வெளியிட்டார். இன்றளவும், நித்தியானந்தாவை கைது செய்யாத நிலை நீடித்து இருக்க, நாட்டில் நிகழும் சம்பவங்கள் மற்றும் முக்கிய விசயங்கள் தொடர்பாக வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும், கைலாசா நாடு குறித்த அறிவிப்புகள் வெளியிடுவதும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், கைலாசா நாட்டின் கரன்சி நோட்டினை வெளியிட்டு உள்ளதாக நித்தியானந்தாவின் முகம் பொறிக்கப்பட்ட மேற்காணும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நித்தியானந்தாவிற்கு ஆதரவு தெரிவித்தும், கைலாசா நாட்டின் கரன்சியில் தமிழ் இடம்பெற்றதாக மீம்ஸ்களும் பரவி வருகின்றன. இதுகுறித்த உண்மைத்தன்மை குறித்து ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டது.
உண்மை என்ன ?
நித்தியானந்தா கைலாசா நாட்டிற்கு கரன்சி நோட்டுகள் மற்றும் ரிசர்வ் பேங்க் அப் கைலாசா உள்ளிட்டவையை அறிமுகம் செய்ய உள்ளதாகவும், வெளிநாட்டு பரிவர்த்தனைக்கு ஒரு கரன்சியும், உள்நாட்டுக்கு ஒரு கரன்சியும் வெளியிட உள்ளதாகவும், 300 பக்கத்தில் நாட்டின் பொருளாதார கொள்கை தயாராக உள்ளதாகவும் தமிழ் செய்திகளில் வெளியாகின. எனினும், விநாயகர் சதுர்த்தி அன்று கரன்சி நோட்டு உள்ளவை வெளியாகும் என்றே செய்திகளில் வெளியாகி இருக்கின்றன.
அதன்படி பார்த்தால் கூட, அதற்கு முன்பாகவே மேற்காணும் கரன்சி புகைப்படம் வைரல் செய்யப்பட்டு வருகிறது. கைலாசா உடைய இணையதளம் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் கூட வைரலாகும் புகைப்படம் குறித்த எந்தவொரு தகவலும் இல்லை.
கைலாசா மற்றும் நித்தியானந்தா தொடர்புடைய சமூக வலைதள பக்கங்கள் அனைத்திலும் ” Kailasa ” என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், வைரலாகும் புகைப்படத்தில் ” Reserve Bank of Kailasha ” என இடம்பெற்று உள்ளது. ஃபோட்டோஷாப் செய்தவர்கள் கைலாசாவின் சரியான ஆங்கில எழுத்தை பொறிக்கத் தவறியுள்ளனர்.
முடிவு :
நம் தேடலில், நித்தியானந்தா வெளியிட்ட கைலாசா கரன்சி என வைரலாகும் புகைப்படம் உண்மையானது அல்ல, ஃபோட்டோஷாப் செய்யப்பட்டவை என்பதை அறிய முடிகிறது.