இனி இந்தியர்கள் கைலாயம் செல்ல சீன அனுமதி தேவையில்லையா ?

பரவிய செய்தி
சபாஷ் மத்திய மோடி சர்கார். சீனாவின் கதறலுக்கு இதுதான் காரணமா. கைலாயம் சென்றுவர இனி சீன அனுமதி தேவையில்லை.
மதிப்பீடு
விளக்கம்
” சபாஷ் மத்திய மோடி சர்கார். சீனாவின் கதறலுக்கு இதுதான் காரணமா. கைலாயம் சென்றுவர இனி சீன அனுமதி தேவையில்லை. டில்லியிலிருந்து கைலாஷ் மானசரோவர் 750 கி.மீ தூரம் பயணம் செய்தாலே போதும், ஹிந்துக்களின் கனவுத் திட்டத்தை நனவாக்கிய இந்திய ராணுவம். ஹெலிகாப்டரில் டாங்கி மற்றும் பீரங்கிகளை கயிறு கட்டி மலை உச்சிக்கு எடுத்துச் சென்று பாறைகளை உடைந்து பளிங்கு போன்று சாலை அமைத்து விட்டது இந்திய ராணுவம். இனி டில்லியிலிருந்து காரிலேயே 654 கீ மீ தூரத்திலுள்ள லிபு லேக் என்ற இடத்துக்கு ஜில் லுன்னு கடந்து விடலாம் அங்கிருந்து மானசரோவருக்கு வெறும் 97 கீ மீ தூரத்தை வாகனத்தில் பயணம் செய்தால் போதும் ஈசனை தரிசித்து விடலாம் ஒவ்வொரு ஹிந்துவும் ராணுவத்தினருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் ” என பரவி வரும் முகநூல் பதிவுகளை காண நேரிட்டது.
கடந்த சில மாதங்களாக இத்தகவல் பரவி வருகிறது. இதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது. ஆகையால், இது குறித்து ஆராய்ந்து பார்க்க தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
சிவன் வாழும் இடம் கைலாயம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. கடல் மட்டத்தில் இருந்து 6,638 மீட்டர் உயரத்தில் அமைந்து இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் கைலாய யாத்திரைக்கு செல்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக அதன் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
கூகுளில் கைலாஷ் மானசரோவர் என்கிற பெயரை டைப் செய்தாலே அது எங்கு இருக்கிறது என எளிதாக அறிந்து கொள்ள முடியும். கைலாஷ் மானசரோவர் சீன கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத் பகுதியில் உள்ளது. யாத்திரை மேற்கொள்பவர்கள் இந்தியப் பாதையில் சென்ற பிறகு சீனாவின் வசம் இருக்கும் திபெத் பகுதி பயணிக்க அந்நாட்டின் விசா அவசியமாகிறது.
கடந்த ஆண்டில் இந்தியா லடாக் பகுதியை தனி யூனியன் பிரதேசமாக அறிவித்த பிறகு கைலாஷ் மானசரோவர் செல்லும் பக்தர்களுக்கு விசா வழங்குவதை தாமதப்படுத்தி உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இந்தியப் பக்தர்களுக்கு எப்போதும் போல் விசா வழங்கப்பட்டு வருவதாகவும், அதில் எந்தவித பிரச்சனையும் இல்லை என சீன தூதரகம் தெரிவித்து இருந்ததாக செய்திகளில் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் சாலை திட்டம் :
2020 மே மாதத்தில், கைலாஷ்-மானசரோவர் யாத்திரை நேரத்தைக் குறைக்கும் 80 கி.மீ நீளம் கொண்ட சாலையை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் துவங்கி வைத்தார் என்கிற செய்தி கிடைத்தது.
கைலாஷ்-மானசரோவருக்கு பயணம் மேற்கொள்ள பயன்படுத்தப்படும் சிக்கிம் நேபாளம் வழித்தடங்களில் 2-3 வாரங்கள் வரை பயணம் மேற்கொள்ள வேண்டும். லிபுலேக் வழித்தடமானது 90 கி.மீ அதிக உயரம் கொண்ட மலை ஏறும் பயணமாக இருப்பதால் வயதான பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
தற்போது இந்திய துவங்கி உள்ள சாலை உத்தரகாண்ட் மாநிலத்தின் கட்டியாபாகரில் தொடங்கி கைலாஷ்-மானசரோவர் நுழைவாயிலான லிபுலேக் பாஸ்ஸில் முடிவடைகிறது. இந்த 80 கிமீ நீள சாலையால் செங்குத்தான மலைப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய ஆபத்தான யாத்திரை பயணத்தை பக்தர்கள் தவிர்க்க முடியும்.
” சிக்கிம் மற்றும் நேபாளம் வழியாக செல்லும் பயணம் தோராயமாக 20 சதவீதம் இந்திய சாலை வழிப்பயணமாகவும், 80 சதவீதம் சீன நிலப்பரப்பு பயணமாகவும் இருக்கும். கட்டியாபாகர்-லிபுலேக் சாலை ஆனது தொடங்கப்பட்டால் பயண விகிதம் தலைகீழாக மாறவிடும். இனி மானசரோவர் செல்லும் பக்தர்கள் இந்திய பாதையில் 84 சதவீதமும், வெறும் 16 கி.மீ தூரம் மட்டுமே சீன நிலப்பரப்பில் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இந்த சாலையால் யாத்திரை ஒரு வாரத்திலேயே முடிவடைந்து விடும் ” என ராஜ்நாத் சிங் தெரிவித்து இருந்தார்.
உத்தரகாண்ட் மாநில சுற்றுலாத்துறை இணையதளத்தில் கைலாஷ்-மானசரோவர் சீன ஆக்கிரமித்த திபெத் பகுதியில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. கைலாஷ்-மானசரோவர் யாத்திரைக்கு ஏற்பாடுகளை செய்யும் சுற்றலா நிறுவனங்கள் கூட தங்களின் செலவுகள், ஆவணங்கள் பட்டியலில் சீனாவின் விசாவும், அதற்கு கட்டணமும் வசூலிப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
இந்தியா தொடங்கி உள்ள கட்டியாபாகர்-லிபுலேக் சாலையால் பக்தர்களின் யாத்திரை பயணம் குறைவதாகவும், இதனால் 80% தூரம் இந்திய நிலப்பரப்பிலேயே இருப்பதாக அறிய முடிகிறது. அந்த சாலை திட்டத்தை வைத்தே சீனாவின் அனுமதி தேவையில்லை என தவறாகப் பரப்பி வருகிறார்கள். ஆனால், மீதமுள்ள சீன நிலப்பரப்பில் பயணம் செய்ய சீனாவின் விசா தேவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சீனாவின் அனுமதி தேவையில்லை என எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
முடிவு :
நமது தேடலில், இந்திய பக்தர்கள் கைலாயம் சென்றுவர இனி சீன அனுமதி தேவையில்லை என பரப்பப்படும் தகவல் தவறானது என்பதை அறிய முடிகிறது.
Update :
மேற்காணும் வைரல் பதிவில் 10% உண்மை தகவல் மட்டுமே உள்ளது. இந்திய ராணுவத்தினர் மலையை குடைந்து சாலை அமைத்தார்கள், சீனாவின் அனுமதி தேவையில்லை என தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். தவறான தகவல்களை பகிர வேண்டாம்.