அதிமுகவினர் மகளிர் உதவித்தொகையை வாங்க கூடாது என பழனிச்சாமி கூறியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !

பரவிய செய்தி
நன்றி விசுவாசம் இல்லாதவர்கள்! அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் யாரும், கருணாநிதி பெயரிலான திட்டத்தில் வழங்கப்படும் 1000 ரூபாயை கை நீட்டி வாங்கமாட்டார்கள். அப்படி வாங்குபவர்கள் புரட்சித் தலைவர் தொடங்கிய அதிமுகவுக்கு நன்றி விசுவாசம் இல்லாதவர்கள் – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
மதிப்பீடு
விளக்கம்
திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள படி, மகளிருக்கு மாதமாதம் 1000 ரூ வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று வெற்றிகரமாக துவங்கி வைத்தது. அதன்படி இத்திட்டத்திகு 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் “அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் யாரும், கருணாநிதி பெயரிலான திட்டத்தில் வழங்கப்படும் 1000 ரூபாயை கை நீட்டி வாங்கமாட்டார்கள். அப்படி வாங்குபவர்கள் புரட்சித் தலைவர் தொடங்கிய அதிமுகவுக்கு நன்றி விசுவாசம் இல்லாதவர்கள்” என்று அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி கூறியதாகக் கூறி புதியதலைமுறையின் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் நியூஸ் கார்டு குறித்து, புதியதலைமுறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடியதில் இந்த கார்டை அவர்கள் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது.
மேலும் இதுகுறித்து பழனிச்சாமி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில் ஏதேனும் அறிக்கை வெளியிட்டிருக்கிறாரா என்பது குறித்தும் தேடினோம். அவர் இறுதியாக செப்டம்பர் 15 அன்று அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளிற்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவும், ஆவினில் நெய் விலை உயர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பதிவும் தன்னுடைய பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
ஆனால் மகளிர் உரிமைத்தொகை குறித்து எந்த அறிக்கையும் அவர் வெளியிடவில்லை. எனவே சமூக ஊடகங்களில் பரவி வரும் புதியதலைமுறையின் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என்பதை உறுதிபடுத்த முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், கலைஞரின் பெயரில் உள்ள மகளிர் உரிமைத்தொகை திட்டத்திலிருந்து 1000 ரூ வாங்குபவர்கள் அதிமுகவிற்கு விசுவாசம் இல்லாதவர்கள் என பழனிச்சாமி கூறியதாகப் பரவி வரும் புதியதலைமுறையின் நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.