பெரியம்மா பெண்ணை விரும்பலாமா ? என கவிஞர் வைரமுத்து சர்ச்சையாகப் பேசியதாகப் பரவும் போலிச் செய்தி !

பரவிய செய்தி
பிரியமான பெண்ணை விரும்பலாமா? பெரியம்மா பெண்ணை விரும்பலாமா?.. கலைஞர் கருணாநிதி கவியரங்கில் கவிஞர் வைரமுத்து சர்ச்சை பேச்சு! – பாலிமர் செய்திArchive Link
மதிப்பீடு
விளக்கம்
சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியின் கலையரங்கில் ஜூன் 04 அன்று திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. “இன்முகத் தலைவரைப் பாடும் இசை படு கவியரங்கம்” எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஏற்பாடு செய்துள்ளார்.
இதில், கலைஞர் கருணாநிதியைப் புகழ்ந்து கவிஞர் வைரமுத்து, பா.விஜய், கபிலன் மற்றும் விவேகா ஆகியோர் கவிதையெழுதி கொடுக்க இசையமைப்பாளர் பரத்வாஜ் தலைமையில் இசை குழுவினர் மேடையிலேயே பாடலை உருவாக்கினர்.
இந்நிலையில், கலைஞர் கருணாநிதியின் கவியரங்கில் “பிரியமான பெண்ணை விரும்பலாமா? பெரியம்மா பெண்ணை விரும்பலாமா?” என கவிஞர் வைரமுத்து சர்ச்சையாகப் பேசியதாகக் கூறி பாலிமர் செய்தியின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️ pic.twitter.com/ogloShNhRc
— Saravanaprasad Balasubramanian 🇮🇳 (@BS_Prasad) June 6, 2023
உண்மை என்ன ?
கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டைக் கொண்டாட “இன்முகத் தலைவரைப் பாடும் இசை படு கவியரங்கம்” எனும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியின் முழு தொகுப்பை சன்நியூஸ் ஊடகம் தன்னுடைய அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் கடந்த ஜூன் 04 அன்று நேரடி ஒளிப்பரப்பு செய்துள்ளதை காணமுடிந்தது.
அவ்வீடியோவின் 1:37:10 மணி நேரத்தில் தனது பேச்சை தொடங்கிய கவிஞர் வைரமுத்து, “ஒரு பாடல் உருவாக்கத்தில் ஒலிப்பதிவின் போது கவிஞர்கள் நாங்கள் உடனிருப்பது அவசியம் என நான் கருதுவேன். நான் என்னுடைய பாடல் பதிவில் 90 விழுக்காடு, ஊரில் இருந்தால், வேறு நிகழ்ச்சிகள் குறிக்கிடாமல் இருந்தால், எனக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தால் ஒழிய நான் ஒலிப்பதிவிற்கு செல்லாமல் இருக்க மாட்டேன்.
மேலும் இன்றைய நிகழ்ச்சி மேடையில் கலைஞர் குறித்து பேசுகையில் ஒரு சொல் தவறிவிட்டது. கபிலன் எழுதிய பாட்டில் “அண்ணாவைப் போன்றவர். ஐந்தாண்டு ஆண்டவர்” என்று ஒரு வரி வந்தது. கபிலன் நான் சொல்வது போல ஒலிப்பதிவிற்கு சென்றிருந்தால் அந்தப் பிழையைத் திருத்தியிருப்பார்.
அவர் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்றால் “நான் ஐந்து ஆண்டு என்று எழுதவில்லை. ஐந்து முறை என்று எழுதியிருப்பேன். அண்ணாவை போன்றவர். ஐந்து முறை ஆண்டவர் என்று இல்லையென்றால் தமிழ் மட்டும் மாறிவிடாது, வரலாறே மாறி விடும், கலைஞரின் பெருமை மாறி விடும் என்று கபிலன் சொல்லியிருப்பார்” என்று பேசினார்.
இவ்வாறு ஒலிப்பதிவு கூடத்திற்கு செல்வது குறித்து மேலும் தொடர்ந்த அவர், இதற்காகத் தான் நான் “கிளிண்டன் வீட்டில் பெண் கேட்கலாம் தப்பில்லை. கிளியின் சிறகை கடன் கேட்கலாம் தப்பில்லை. பிரியமான பெண்ணை ரசிக்கலாம் தப்பில்லை” என்று எழுதியிருந்தேன். நான் தாமதமாக ஒலிப்பதிவிற்கு போகிறேன். உள்ளே ஒரு வட இந்திய பாடகர் பாடி கொண்டிருக்கிறார். “கிளியின் சிறகை கடன் கேட்கலாம் தப்பில்லை. கிளிண்டன் வீட்டில் பெண் கேட்கலாம் தப்பில்லை. பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம் தப்பில்லை” என்று தவறாக பாடிக்கொண்டிருக்கிறார். இதனால் கவிஞர்கள் பாடல் ஒலிப்பதிவில் பக்கத்தில் இருக்க வேண்டியது முக்கியமானது.” என்று அவர் பேசியதை காண முடிந்தது.
இதுகுறித்து பாலிமர் செய்தியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தேடியதில், “மைக்ரோசாப்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் தமிழர்கள் பணிபுரிய கருணாநிதியே காரணம்” என்று வைரமுத்து பேசியுள்ள வீடியோவை அவர்கள் நேற்று (ஜூன் 05) பதிவிட்டுள்ளதை காண முடிந்தது. மாறாக வைரமுத்து “பெரியம்மா பெண்ணை விரும்பலாமா?” என்பது குறித்து பேசியதாக எந்த நியூஸ் கார்டும் இடம்பெறவில்லை.
View this post on Instagram
முடிவு:
நம் தேடலில், கவிஞர் வைரமுத்து பிரியமான பெண்ணை விரும்பலாமா? பெரியம்மா பெண்ணை விரும்பலாமா? என சர்ச்சையாகப் பேசியதாகப் பரப்பப்படும் செய்தி தவறானது.
அவர், வடநாட்டு பாடகர் ஒருவர் தன்னுடைய பாடல் வரிகளை பாடிய பொழுது,”பிரியமான பெண்ணை விரும்பலாமா?” என்பதற்கு பதில் “பெரியம்மா பெண்ணை விரும்பலாமா?” என்று தவறாக பாடியுள்ளதையே சுட்டிக் காட்டியுள்ளார் என்பதை அறிய முடிகிறது.