கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் மகன் இரவு பள்ளிக்குள் நுழைவதாக பரவும் சிசிடிவி காட்சி.. உண்மை என்ன ?

பரவிய செய்தி

பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் மகன் இரவு நேரத்தில் பள்ளிக்குள் நுழையும் காட்சி. ஏன் வந்தான்..?

மதிப்பீடு

விளக்கம்

கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவி உயிரிழந்த தனியார் பள்ளி தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

அவற்றில் மாணவி உயிரிழந்த அன்று பள்ளி தாளாளரின் மகன் நள்ளிரவில் பள்ளிக்குள் சென்ற காட்சி என ஜூலை 13-ம் தேதி 10.30 மணியளவில் பதிவான சிசிடிவி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மை ஆராயப்பட வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மை என்ன ?  

வைரல் செய்யப்படும் வீடியோ குறித்து தேடுகையில், இது தவறான வீடியோ. பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல்துறையின் முகநூல் பக்கத்தில் வைரல் வீடியோ குறித்து பதிவிடப்பட்டு உள்ளது

Facebook link 

காவல்துறை பதிவில், ” கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் இறந்துபோனது சம்மந்தமாக நள்ளிரவில் பள்ளியில் மர்மநபர் ஒருவர் நடந்து செல்வது போன்ற வீடியோ காட்சி சமூகவளைதளத்தில் பரவிவருகிறது. இது சம்மந்தமாக விசாரணை செய்த போது இந்த வீடியோ சேலம் மாவட்டம், வாழப்பாடி காவல் நிலையம், சிங்கபுரம் அரசு பள்ளியில் உள்ள மடிக்கணினியை திருடமுயற்சி செய்த சம்பவம் தொடர்பான CCTV வீடியோ என்று தெரியவருகிறது .

இந்த சம்பவத்தை வேறு விதமாக திசைதிருப்பி கனியாமூர் சக்தி பள்ளியில் நடந்த சம்பவத்தோடு தொடர்புபடுத்தி பொய்செய்தியை, மக்கள் மத்தியில் கிளர்ச்சியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பரப்பி வருகின்றனர். இதுபோன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வகுமார் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார் ” எனக் கூறப்பட்டுள்ளது.
.
இதுகுறித்து சேலம் வாழப்பாடி காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்ட போது, பள்ளியில் 2 மடிக்கணினிகள் திருட முயன்ற சம்பவம் நிகழ்ந்தது உண்மைதான். அந்த சிசிடிவி வீடியோ பள்ளி தரப்பில் பகிரப்பட்டதாக இருக்கலாம் ” என உறுதிப்படுத்தி இருந்தனர்.
.
முடிவு : 
.
நம் தேடலில், கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல்துறை அளித்த தகவலின்படி, மாணவி உயிரிழந்த கள்ளக்குறிச்சி பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் மகன் இரவு நேரத்தில் பள்ளிக்குள் நுழையும் காட்சி எனப் பரவும் சிசிடிவி வீடியோவானது சேலம் மாவட்டம் சிங்கபுரம் அரசு பள்ளியில் மடிக்கணினியை திருட முயற்சி செய்த சம்பவத்தின் போது பதிவான சிசிடிவி காட்சி என அறிய முடிகிறது.
Please complete the required fields.




Back to top button
loader