கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை தீக்குளிக்க முயற்சி எனப் பரவும் வதந்தி வீடியோ !

பரவிய செய்தி

மதிப்பீடு

விளக்கம்

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் மீண்டும் பிரேதப்பரிசோதனை நடந்து முடிந்தது. எனினும், பெற்றோர்கள் பிரேதப்பரிசோதனையில் கலந்து கொள்ளவில்லை. இந்த விவகாரத்தில் போலீசார் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது.

மாணவியின் தந்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க முயன்றதாக இவ்வீடியோ பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்ட நிலையில் இருக்கும் நபர், ” என்னை வாழவே விடமாட்டேன்கிறாங்க. கலெக்டரை பார்க்க வேண்டும். என் குடும்பத்தையே நாசம் பண்ணுறான் ” எனப் பேசிக் கொண்டே அழைத்துச் செல்லப்படும் காட்சி பதிவாகி இருக்கிறது.

உண்மை என்ன ? 

ஜூலை 13-ம் தேதி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியின்போது, திருமருகல் அருகே கீழப்பூதனூர் ஊராட்சி பெருநாட்டாந்தோப்பு மேலத்தெருவை சேர்ந்த தேவேந்திரன் என்பவர் திடீரென தனது உடலில் மண்ணென்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார்.

தேவேந்திரனுக்கு சொந்தமான நிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சிலர் வேலியை நகர்த்தி அடைத்துள்ளனர். இதைத் தட்டிக் கேட்ட அவரின் மகளையும் தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றுள்ளார் என செய்தியில் வெளியாகி இருக்கிறது.

Twitter link | Archive link 

இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல்துறை, ” வேறு இடத்தில் நடந்த வீடியோவை கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி சம்பவத்தோடு தொடர்புபடுத்தி பொய் செய்தியை, மக்கள் மத்தியில் கிளர்ச்சியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பரப்பி வருகின்றனர். பொது மக்கள் யாரும் நம்ப வேண்டாம் ” என சமூக வலைதள பக்கங்களில தெரிவித்து உள்ளனர்.

மேலும் படிக்க : கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் மகன் இரவு பள்ளிக்குள் நுழைவதாக பரவும் சிசிடிவி காட்சி.. உண்மை என்ன ?

முடிவு : 

நம் தேடலில், கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த பள்ளி மாணவியின் தந்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதாகப் பரப்பப்படும் வீடியோ வதந்தி என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader