கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் தமிழ் பேச்சு எனப் பரவும் தவறான வீடியோ !

பரவிய செய்தி

ஸ்ரீமதி பள்ளியில் தமிழ் பேச்சு போட்டி. அட பாவிகளா இந்தப் பிள்ளையடா தற்கொலை பண்ணிக்க போகுது.

மதிப்பீடு

விளக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்ற பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், மாணவியின் உடல் மீண்டும் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், மாணவியின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவியின் இறப்பிற்கு நீதி வேண்டும் என சமூக ஊடகம் முழுவதும் பதிவுகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி பள்ளியில் தமிழ் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோ என வகுப்பறையில் மாணவர்களுக்கு நடுவே பள்ளி சீருடையில் மாணவி பேசும் 2 நிமிட வீடியோ ஒன்று வைரல் செய்யப்பட்டு வருகிறது.

Facebook link 

Archive link

தமிழ் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு இப்படி பேசும் மாணவியா தற்கொலை செய்து கொண்டது என பலரும் சமூக வலைதள பக்கங்களில் இவ்வீடியோவை பதிவிட்டு வருகிறார்கள். பிஸ்மில்லா கான் டிஎன்டிஜே எனும் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்ட இவ்வீடியோ 26 லட்சம் பார்வைகளுக்கு மேல் சென்றுள்ளது.

உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் வீடியோவில் பேசும் பள்ளி மாணவி கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த தனியார் பள்ளி மாணவி அல்ல. வைரல் செய்யப்படும் மாணவி பேசும் முழுமையான காணொளி 2020 மார்ச் 3-ம் தேதி ” எனது மொழியின் தொன்மையும் பெருமையும் தற்போதைய நிலையும் | உலகத் தாய்மொழி தின திருவிழா ” எனும் தலைப்புடன் கௌமார மடாலயம் யூடியூப் சேனலில் வெளியாகி இருக்கிறது.

கோவையின் சின்னவேடம்பட்டியில் உள்ள கௌமார மடாலயம் பள்ளியில் பயின்ற மாணவி பவதாரணி குணசேகரன் பேச்சுப் போட்டிகள் மற்றும் பள்ளியின் நிகழ்ச்சிகளின் போது உரையாற்றும் பல வீடியோக்கள் பள்ளி தரப்பிலும், யூடியூப் சேனல்களிலும் வெளியாகி உள்ளது.

கோவை பள்ளி மாணவி பவதாரணி குணசேகரன் பேசும் வீடியோ கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவி என சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பப்பட்டு வருகிறது.

முடிவு : 

நம் தேடலில், கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவி பள்ளியில் நடைபெற்ற தமிழ் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு பேசிய போது எடுக்கப்பட்டதாக பரவும் வீடியோ தவறானது. அந்த வீடியோவில் இருப்பது கோவையைச் சேர்ந்த வேறொரு பள்ளி மாணவி என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader