கல்யாண் ராமன் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்ததாக தவறாக பரப்பிய செல்வ குமார் !

பரவிய செய்தி
அண்ணன் கல்யாண் ராமன் அவர்கள் அதிமுகவில் இணைந்ததற்கு வாழ்த்துக்கள். எங்கிருந்தாலும் கொண்ட கொள்கையில் உறுதியாய் இருப்பார் என நம்புகிறேன்.
மதிப்பீடு
விளக்கம்
பாஜகவின் சிந்தனையாளர் பிரிவு பொறுப்பாளர் கல்யாண் ராமன் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்ததாகவும், அவர் எங்கிருந்தாலும் கொண்ட கொள்கையில் உறுதியாய் இருப்பார் என நம்புவதாகவும் பாஜகவின் தொழிற்பிரிவு துணைத் தலைவர் செல்வ குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் கல்யாண் ராமனும் எடப்பாடி பழனிச்சாமியும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பாஜகவினர் பலரும் கல்யாண் ராமன் விலகியதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை என்ன ?
சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து திருச்சி சூர்யா, காயத்ரி ரகுராமன் ஆகியோர் விலகினர். தங்களது கட்சிக்குள் ‘வார் ரூம்’ என்ற பெயரில் சொந்த கட்சி நிர்வாகிகளைப் பற்றி தவறான செய்திகளைப் பரப்பி வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்த காயத்ரி ரகுராம், அண்ணாமலையின் தலைமையில் பாஜகவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனத் தெரிவித்தார்.
கல்யாண் ராமன் பாஜகவிலிருந்து விலகியதாகச் செல்வ குமார் கூறியது குறித்து கல்யாண் ராமன் டிவிட்டர் பக்கத்தில் தேடினோம். செல்வ குமார் பகிர்ந்திருந்த அதே புகைப்படத்தை கல்யாண் ராமன் ஜனவரி 10ம் தேதி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தபோது… @EPSTamilNadu pic.twitter.com/AGgK95zUbO
— Kalyan Raman (@KalyaanBJP_) January 10, 2023
அப்பதிவில், “முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தபோது” என குறிப்பிட்டுள்ளார்.
அவர் பதிவிலேயே மரியாதை நிமித்தமான சந்திப்பு எனக் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம். ஆனால், செல்வ குமாரின் பதிவினை தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த பலரும் கல்யாண் ராமன் பாஜகவில் இருந்து விலகியதாகவும், அதிமுகவில் இணைந்ததாகவும் சமூக வலைத்தளங்களில் பரப்ப தொடங்கினர்.
லட்சக்கணக்கான ஸ்வயம்சேவகர்களில் நானும் ஒருவன்
எனது மரியாதை நிமித்தமான சந்திப்புகள் அனைத்தும்
எனது கட்சியின் நலனுக்காக மட்டுமே இருக்கும்!தற்போது நாளைய கட்சியின் கூட்டத்தில் பங்கேற்க மதுரை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறேன் ,😃😃😃 2/2
— Kalyan Raman (@KalyaanBJP_) January 10, 2023
இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக கல்யாண் ராமன் ஜனவரி 10ம் தேதி மீண்டும் ஒரு டிவீட் செய்துள்ளார். அதில், ‘எனது 11வது வயதில் தொடக்கி இன்று வரை ஆர்.எஸ்.எஸ். தொண்டனாக, ABVP முழுநேர ஊழியனாக, விஜய பாரத எழுத்துப் பணி எனச் சித்தாந்தம், லட்சியம், கொள்கை, இயக்கம் மற்றும் கட்சிக்காக 100 சதவீதம் ஆத்ம திருப்தியுடன் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் பயணித்து வரும் லட்சக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவன். எனது மரியாதை நிமித்தமான சந்திப்புகள் அனைத்தும், எனது கட்சியின் நலனுக்காக மட்டுமே இருக்கும்! தற்போது நாளைய கட்சியின் கூட்டத்தில் பங்கேற்க மதுரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
தங்களுடைய நிலைபாட்டை தெளிவுபடுத்தியமைக்கு நன்றி @KalyaanBJP_ அண்ணா🙏 pic.twitter.com/2EJ1ODFkaG
— Selva Kumar (@Selvakumar_IN) January 11, 2023
கல்யாண் ராமனின் இவ்விளக்கத்தைத் தொடர்ந்து, “தங்களுடைய நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியமைக்கு நன்றி” எனச் செல்வ குமார் டிவீட் செய்துள்ளார். கல்யாண் ராமன், ஈ.பி.எஸ். மரியாதை நிமிர்த்தச் சந்திப்பை முதலில் தவறாகப் பதிவிட்டதே செல்வ குமார் தான். பின்னர் அந்த பதிவுவை நீக்கி இருக்கிறார். ஆனால், யாரோ தவறான செய்தி பரப்பியது போல, தெளிவுபடுத்தியதற்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
முடிவு :
நம் தேடலில், கல்யாண் ராமன் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்ததாக பாஜக தொழிற்பிரிவு துணைத் தலைவர் செல்வ குமார் கூறியது உண்மை அல்ல. அவர் மரியாதை நிமித்தமாகவே எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்ததாகத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளதை காண முடிகிறது.