சீமான் சாவிற்காக தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள் என கல்யாணசுந்தரம் கூறியதாக வதந்தி !

பரவிய செய்தி
சீமான் சாவுக்காக நான் மட்டும் இல்லை தமிழக மக்களை காத்துக் கொண்டிருக்கிறார்கள் – கல்யாணசுந்தரம் நாம் தமிழர் கட்சி.
மதிப்பீடு
விளக்கம்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கும், பேராசிரியர் கல்யாணசுந்தரத்திற்கும் இடையே உருவான உட்கட்சி விவகாரம் சமூக வலைதளங்களில் பெரிதாய் விவாத பொருளாய் மாறியது. சீமான் தன் பேட்டியின் போது, தன் சாவிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுகுறித்து கல்யாணசுந்தரமும் தொடர்ந்து பல யூடியூப் சேனல்களில் பேசி வருகிறார். செப்டம்பர் 10-ம் தேதி நாம் தமிழர் கட்சியை விட்டு விலகுவது தொடர்பான கடிதத்தை அனுப்பி உள்ளதாக தன் முகநூல் பக்கத்தில் கல்யாணசுந்தரம் பதிவிட்டு இருக்கிறார்.
இந்நிலையில், சீமான் சாவுக்காக நான் மட்டும் இல்லை தமிழக மக்களே காத்துக் கொண்டிருக்கிறார்கள் என கல்யாணசுந்தரம் கூறியதாக தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. அது போலியான நியூஸ் கார்டு என அறிய முடிகிறது. சீமான் சாவுக்காக நான் மட்டும் இல்லை தமிழக மக்களை காத்துக் கொண்டிருக்கிறார்கள் எனும் வாக்கியத்தில் ” மக்களே ” என்பதற்கு பதிலாக ” மக்களை ” என எழுத்துப்பிழையுடன் எடிட் செய்து இருக்கிறார்கள்.
2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு முன்பாக தந்திடிவியின் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் ” நாம் தமிழர் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என கல்யாணசுந்தரம் ” பேசிய வீடியோ 2019 ஏப்ரல் 13-ம் தேதி தந்திடிவி-யில் வெளியாகி இருக்கிறது. அதிலுள்ள முகப்பு புகைப்படத்தை எடுத்து ஃபோட்டோஷாப் செய்திருக்கிறார்கள்.
மேலும் படிக்க : சீமான் தன் வங்கி கணக்கிற்கு கட்சி நிதியை வழங்குமாறு கேட்டதாக பரவும் போலியான அறிக்கை !
இதற்கு முன்பாக, புலம்பெயர்ந்து வாழும் கட்சி ஆதரவாளர்கள் நாம் தமிழர் கட்சியின் வங்கி கணக்கிற்கு பதிலாக தனது சொந்த வங்கி கணக்கிற்கு நிதியை அனுப்புமாறு சீமான் வெளியிட்ட அறிக்கை என போலியான அறிக்கை ஒன்று பகிரப்பட்டு குறிப்பிடத்தக்கது.