காங்கிரஸ் ஆதரவால் ம.நீ.மய்யத்தில் இருந்து நிர்வாகிகள் விலகுவதாக பழைய செய்தியை பரப்பும் பாஜக செளதாமணி !

பரவிய செய்தி
கடைசியா இருந்த இரண்டு பேரும் வெளியே போயாச்சு. மய்யத்தோட லோகோவை சுருட்டி குப்பையிலே போடுங்கப்பா.
மதிப்பீடு
விளக்கம்
மக்கள் நீதி மய்யத்தின் பொருளாளர் சுரேஷ் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் சி.கே.குமரவேல் அக்கட்சியிலிருந்து விலகி விட்டதாக நியூஸ் 7 தமிழ் கார்டு ஒன்றை பாஜகவின் செயற்குழு உறுப்பினர் சௌதாமணி டிவீட் செய்துள்ளார்.
அந்த நியூஸ் கார்டினை பகிரும் பலரும், கமல்ஹாசன் திமுக ஆதரவாளர் எனத் தெரிந்ததும் இவர்கள் மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகி விட்டதாகப் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் திருமகன் ஈ.வே.ரா. இவர் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தார். அவர் ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அத்தொகுதிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது.
பிப்ரவரி 27ம் தேதி நடைபெறவுள்ள அத்தேர்தலில் திமுக – காங்கிரஸ் கட்சி கூட்டணி சார்பாகக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் வேட்பாளருக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து முடிவு செய்ததாக கமல்ஹாசன் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்தே அக்கட்சியின் பொருளாளர் சுரேஷ் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் சி.கே.குமரவேல் ராஜினாமா செய்ததாகப் பரப்பி வருகின்றனர்.
பரப்பப்படும் நியூஸ் கார்டில் 2019, மார்ச் 18 என்ற தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்தே, 2019ம் ஆண்டு நடந்த நிகழ்வை, தற்போது நடைபெற்றது போலப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
2019, மார்ச் 18ம் தேதி “திடீரென பதவி விலகினார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் சுரேஷ்” என்ற தலைப்பில் நியூஸ் 7 தமிழ் யூடியூப் பக்கத்தில் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அதில், “சொந்த பணிகளின் காரணமாக, கட்சி பணிகளில் ஈடுபட முடியாத காரணத்தால் பொருளாளர் பதவியிலிருந்து விலகுவதாக சுரேஷ் கூறியுள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் சுரேஷ் பதவி விலகியதாகத் தகவல் #KamalHaasan#MakkalNeedhiMaiam pic.twitter.com/E8bG9Dzj7B
— Kalaignar Seithigal (@Kalaignarnews) March 18, 2019
மேலும் படிக்க : தமிழக பாஜகவின் செயற்குழு உறுப்பினர் சௌதா மணி பரப்பிய வதந்திகளின் தொகுப்பு !
இதே தேதியில், ‘கலைஞர் செய்திகள்’ டிவிட்டர் பக்கத்தில் “விலகும் நிர்வாகிகள் : கலக்கத்தில் கமல்” என்ற தலைப்பில் நியூஸ் கார்டு பதிவிடப்பட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து பொருளாளர் சுரேஷ் மற்றும் செயற்குழு உறுப்பினர் சி.கே.குமரவேல் ராஜினாமா செய்ததாகப் பரவும் செய்தி 2019ம் ஆண்டு நடந்தது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.