This article is from Jul 10, 2018

கமலை கிண்டல் செய்யும் தமிழிசை, ஹெச்.ராஜாவிற்கு இது தெரியுமா ?

பரவிய செய்தி

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கைக்கு கையில் கிடைக்கும் இமெயில் முகவரிக்கு எல்லாம் கமல் அழைப்பு விடுக்கிறார் என்று கமலை கிண்டல் செய்துள்ளார் தமிழிசை சௌந்தர்ராஜன்.

மதிப்பீடு

சுருக்கம்

செல்போன் எண்ணுடன் இணையத்தில் பதிவு செய்தால் மட்டுமே இமெயில் அனுப்பப்படும் என்று தமிழிசைக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது மக்கள் நீதி மய்யம்.

விளக்கம்

நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய “ மக்கள் நீதி மய்யம் ” கட்சிக்கு இணையதளம் மூலமாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களுக்கு கட்சியில் சேர்ந்ததற்கான தகவல் அவர்களின் இமெயில் முகவரிக்கு அனுப்பப்படும்.

இந்நிலையில், திருப்பூரில் நடைபெற்ற பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது, “ நடிகர்கள் 50 ஆண்டுகள் சினிமாத் துறையில் சம்பாதித்துள்ளனர். ஆனால், இன்று சினிமா துறை மோசமான நிலையில் உள்ளது. சினிமாவை காப்பாற்ற முடியாத இவர்கள் எப்படி மக்களை காப்பாற்றுவார்கள்..

உங்களுக்கு ஒரு செய்தி சொல்கிறேன், அதை கேட்டு ஆச்சரியப்பட்டு சிரிப்பீர்கள். கமல்ஹாசன் தனது கட்சிக்கு உறுப்பினர்களை சேர்ந்து வருகிறார். இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தில் நான் இணைந்து விட்டதாக எனக்கே இமெயில் அனுப்பியுள்ளார். அந்த இமெயிலில் நீங்களும், நானும் நாம் ஆனோம். உறுப்பினராக சேர்ந்தமைக்கு நன்றி. உங்களது உறுப்பினர் எண் இதுவே என்று குறிப்பிடப்பட்டுள்ளது:” என்று கூறியுள்ளார்.

மேலும், எனது இமெயில் ஐடி எப்படி இவர்களுக்கு கிடைத்தது. கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க கையில் கிடைக்கும் இமெயில் முகவரிக்கு எல்லாம் அழைப்பு அனுப்புகிறார் கமல் என்று கூறி இடைவிடாமல் சிரித்து கிண்டல் செய்து செய்தியாளர்களிடம் தனக்கு வந்த இமெயிலை காண்பித்து உள்ளார்.

தமிழிசை சௌந்தர்ராஜனின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மறுப்பு தெரிவித்த மக்கள் நீதி மய்யம், தங்கள் இணையதளத்தில் தமிழிசை சௌந்தர்ராஜன் செல்போன் எண், இமெயில் முகவரி உள்ளிட்ட விவரங்களை அளித்து பதிவு செய்த  ஆதாரத்தை வெளியிட்டுள்ளது.

இணையத்தில் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இமெயில் அனுப்பப்படும் என்றும், நீங்கள் காட்டியது போல் நாங்களும் படம் காட்ட விரும்பவில்லை, உலகமே உங்களை அழைத்து விசாரிக்க கூடாது அல்லவா !! என்றும் மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

மேலும் மக்கள் நீதி மய்யம் தனது ட்விட்டர் பக்கத்தில், “ ஆதலால் உங்கள் தொலைப்பேசி எண்ணிற்கு மட்டும் தற்போதைக்கு கரியை பூசியுள்ளோம். உங்களின் பழைய முதலாளிகளின் கோபத்திற்கு அஞ்சினால் செய்த பதிவை ரத்து செய்யவும் வழி இருக்கிறது. அதுவரை, பதிவு செய்தமைக்கு நன்றி ” என்று பதிவிடப்பட்டது.

தகுந்த ஆதாரங்களை அளித்து தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தது மக்கள் நீதி மய்யம். செல்போன் எண், மற்ற விவரங்கள் எல்லாம் எவ்வாறு பதியப்பட்டது என்று தெரியவில்லை. எனினும், தேவையின்றி பேசிய தமிழிசை சௌந்தர்ராஜனின் செல்போன் எண்ணிற்கு மட்டும் கரி பூசப்பட்டு விட்டது. இதை கிண்டல் செய்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ், கருத்துக்கள் அதிகம் பகிரப்படுகின்றன.

இதையறியாமல், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “ மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினர் சேர்க்கும் விதம் இதுதான் போல என்று கூறி, கீழே ஹெச்.ராஜா கமலின் கட்சியில் உறுப்பினராக சேர்ந்த இமெயில் முகவரியை பதிவிட்டு ” தாமாகவே வந்து சிக்கியுள்ளார்.

பெரியார் விவகாரத்தில் ஹெச்.ராஜா அட்மின் செயல்பட்டது போன்று கமல் விவகாரத்தில் தமிழிசை அவர்களின் அட்மினும் செயல்பட்டு விட்டார் போல என்று நெண்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

எனினும், கமலின் கட்சியில் இணையதளத்தில் உறுப்பினராக பதிவு செய்வதையும் நாம் அறிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும். உதாரணமாக, மய்யம் இணையதளத்திற்கு சென்று ” எங்களுடன் இணையுங்கள் ” என்பதை அழுத்தினால் உறுப்பினர் சேர்க்கை படிவத்திற்கு செல்லும். அதில், நமக்கு தெரிந்த நண்பர் ஒருவரின் பெயர், பிறந்த தேதி, இமெயில் முகவரி, மாவட்டம், தொகுதி, செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும். அதில் செல்போன் எண் இடத்தில் நமது எண்ணை கொடுத்தால் செல்போன் எண்ணிற்கு OTP எண் வரும். அதை பதிவிட்டால் உறுப்பினர் சேர்க்கை வெற்றியடைந்து விடுகிறது. அதனுடன் உறுப்பினர் எண்ணும் அளிக்கப்படுகிறது.

உறுப்பினர் எண் இருந்தாலும் அந்த நண்பரால் கட்சி உறுப்பினர் விவரங்களை பார்க்க இயலாது. எனினும், இமெயில் முகவரி பதிவு செய்யப்படுவதால் உறுப்பினராகிய தகவல் அந்த இமெயில் முகவரிக்கு சென்றுவிடும். இதன் மூலம் யார் வேண்டுமானாலும் அவர்களுக்கு தெரிந்தவரை மய்யம் கட்சியில் உறுப்பினராக சேர்க்க முடிகிறது. எனினும், ஒரு செல்போன் எண்ணை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடிகிறது.

மய்யம் இணையத்தில் வேறொருவர் தமிழிசையின் விவரங்களை கொடுத்து உறுப்பினராக்கி இருக்க அதிகம் வாய்ப்புள்ளது என்பதை அறிய முடிகிறது. எனினும், தமிழிசையின் உண்மையான இமெயில் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது.  ஆகையால் தான் அவரின் இமெயிலுக்கு தகவல் சென்றுள்ளது. ஆனால், அவரின் செல்போன் எண் அளிக்கப்பட்டதா என்பது குறித்து தெரியவில்லை.

இதையறியாமல் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்தும், குற்றம் சுமத்தியும் வருகின்றனர். ஒரு வேளை சமூக வலைத்தளத்தில் கூறுவது போன்று அட்மின்கள் செய்த வேலையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader