இடஒதுக்கீடு மூலம் ஜாதி வெறி இன்னும் அதிகரிக்கிறது. ஜாதியை ஒழிக்க வேண்டுமென்றால் இடஒதுக்கீடு தேவையில்லை. அவரவர் தகுதிக்கு ஏற்ப வாழ்வில் மேலே வர வேண்டும். இதற்கு கடின உழைப்பு தேவை – கமல்ஹாசன்
மதிப்பீடு
விளக்கம்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ” இடஒதுக்கீடு மூலம் ஜாதி வெறி இன்னும் அதிகரிக்கிறது. ஜாதியை ஒழிக்க வேண்டுமென்றால் இடஒதுக்கீடு தேவையில்லை ” என செய்தித்தாள் ஒன்றின் படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கண்டனம் தெரிவித்து வருவதை பார்க்க முடிந்தது.
மார்ச் 23-ம் தேதி ” எனது மாப்பிள்ளையிடம் ஜாதி கேட்க மாட்டேன்: சொல்கிறார் கமல் ” எனும் தலைப்பில் இந்த செய்தியை வெளியிட்டது தினகரன் நாளிதழ். தினகரன் இணையதளத்திலும் அச்செய்தி வெளியாகி இருக்கிறது.
செய்தியில், புலியகுளம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் இடஒதுக்கீடு குறித்து கமல்ஹாசன் இப்படி பேசியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. புலியகுளம் பகுதியில் நடைபெற்ற கூட்டம் தொடர்பான வீடியோக்களை ஆராய்கையில் பரப்புரை வீடியோ ஒன்று கிடைத்தது.
29.24வது நிமிடத்தில், ” விண்ணப்பத்தில் இருந்து நீக்கி விட்டீர்களே சாதி போய்டுமா என கேட்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக போகும். அதுக்கு படிப்படியாக ஏறணும். அதில் ஒருபடி என் விண்ணப்பத்தில் சாதியை எடுக்குறேன். அடுத்தகட்டம், என் நண்பன் யார் என கேட்கமாட்டேன். எனக்கு மாப்பிள்ளையா வர போறவன் என்ன சாதினு கேட்கமாட்டேன். இது சத்தியம். அப்படிதான் சாதி ஒழியும். இடஒதுக்கீடு கொடுத்து விட்டால் மட்டும் போதாது. நீ என் சகோதரன் என சொல்ல வேண்டும். அதுதான் சாதியை போக்குவதற்கு உண்மையான வழி ” என்றே பேசி இருக்கிறார்.
19.25வது நிமிடத்தில் கமல்ஹாசன், ” இடஒதுக்கீட்டை இருக்கலாமா வேண்டாமா என்ற விவாதம் வேற நடந்துச்சு. அந்த விவாதத்தின் போது, எனக்கு பிடித்திருக்கோ, இல்லையோ, அவர்கள் சித்தாந்தத்தில் ஒன்றுபட்டவர்களோ இல்லையோ அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல், ஸ்டாலின் ஐயா பின்னாடி உட்கார்ந்து இருந்தேன். வேண்டும், இது(இடஒதுக்கீடு). கடைநிலை ஏழை, நீதி நிராகரிக்கப்பட்டவனுக்கு நீதி கிடைக்கும் வரை, 10 பேர் மிச்சம் இருந்தாலும் அவர்களும் கரையேறும் வரை இந்த இடஒதுக்கீடு இருக்கும் என குரல் கொடுத்தவன் நான் ” என பேசி இருக்கிறார்.
.
தினகரனில் வெளியான செய்தி குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி தலைவர் மயில்வாகனன் அவர்களை தொடர்பு கொண்டு பேசுகையில், ” இடஒதுக்கீடு ஜாதி வெறியை அதிகரிக்கிறது என அப்படி ஏதும் பேசவில்லை. எப்படி பரப்புகிறார்கள் எனத் தெரியவில்லை. அதிகபட்சமாக வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு பற்றி, வங்கியில் பணம் இருந்தால்தான் செக் கொடுக்க வேண்டும், இல்லையென்றால் பவுன்ஸ் ஆகி விடும் என்ற அர்த்தத்தில் பேசி இருக்கிறார். அதைத் தவிர, இப்படி எங்கும் பேசவில்லை ” என பதில் அளித்து இருந்தார்.
மார்ச் 15-ம் தேதி தந்திடிவி சேனலுக்கு இடஒதுக்கீடு குறித்து பேட்டி அளித்த கமல், ” இடஒதுக்கீடு இருக்க வேண்டும். இடஒதுக்கீடு கண்டுபிடித்தது ஒரு காரணத்திற்காக, அந்த காரணம் நீங்கும் வரை இருந்தே ஆக வேண்டும் ” எனக் கூறி இருக்கிறார். வன்னியர்கள் 10.5 இடஒதுக்கீடு குறித்து கேட்கையில், சாதிவாரியான கணக்கெடுப்பில் என்ன விழுக்காடு வருகிறதோ அதுதான் அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டியது. சாதிவாரியான கணக்கெடுப்பு முடித்து விட்டு செய்து இருந்தால் வரவேற்பதாகக் கூறி இருந்தார்.
.
புலியகுளம் பொதுக்கூட்டத்தில், இடஒதுக்கீடு மூலம் ஜாதி வெறி இன்னும் அதிகரிக்கிறது. ஜாதியை ஒழிக்க வேண்டுமென்றால் இடஒதுக்கீடு தேவையில்லை என கமல்ஹாசன் பேசவில்லை. மேலும், பொதுக்கூட்டம் மற்றும் ஊடக பேட்டிகளில் கமல்ஹாசன் இடஒதுக்கீடு வேண்டாம் எனக் கூறவில்லை, இருக்க வேண்டும் என்றே கூறி வருகிறார்.
.
ஒருவேளை கமல்ஹாசன் இப்படி பேசி இருந்தால், அதையே தலைப்பு செய்தியாக மாறி ஊடகங்களில் பல விவாதங்கள் நடைபெற்று இருக்கும். ஆனால், இதைப்பற்றி பிற செய்திகள் ஏதுமில்லை. ஏன், தினகரன் செய்தியில் கூட அந்த வார்த்தையை தலைப்பாக வைக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டியது அவசியம்.
முடிவு :
நம் தேடலில், இடஒதுக்கீடு மூலம் ஜாதி வெறி இன்னும் அதிகரிக்கிறது. ஜாதியை ஒழிக்க வேண்டுமென்றால் இடஒதுக்கீடு தேவையில்லை என புலியகுளம் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாக வெளியான செய்தி தவறானது என அறிய முடிகிறது.