This article is from Nov 05, 2020

கிறிஸ்தவத்தை பரப்ப இந்து கோவில்கள் தடையாக உள்ளதாக கமல்ஹாசன் கூறினாரா ?

பரவிய செய்தி

அமெரிக்க கல்லூரி விழாவில் கமல்ஹாசன் பேசியதன் தமிழாக்கம்.. தமிழ்நாட்டில் பல வருடங்களாக கிறிஸ்தவம் மறைமுகமாக பரவி வர செய்துள்ளோம். ஆனால், அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பது இந்து கோவில்கள்.. இந்து கோவில்களை அழிப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்ட அமைப்பே இந்து அறநிலையத்துறை.. இதற்காக 60 சதவீதம் கிறிஸ்தவர்களை அறநிலையத்துறையில் பபணியில் அமர்த்தி துணை புரிந்தார் கலைஞர்.. !

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கிறிஸ்துவ மதத்தை தமிழகத்தில் பரப்புவது குறித்தும், இந்து கோவில்களில் கிறிஸ்தவர்களை பணி அமர்த்தியது குறித்தும் பேசியதாக ஓர் பதிவு சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக பரப்பப்பட்டு வருகிறது.

இதேபோல், நடிகர் கமல்ஹாசன் சில நொடிகள் பேசும் சிறு வீடியோ காட்சிகள் பலவற்றை ஒன்றிணைத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்க்கத் தீர்மானித்தோம்.

Facebook link | Archive link 

உண்மை என்ன ? 

கமல்ஹாசன் அமெரிக்கப் பல்கலைக்கழத்தில் பேசியதாக பரப்பப்படும் 25 நொடிகள் கொண்ட வீடியோ காட்சி அமெரிக்காவில் பேசியது அல்ல. 2010-ம் ஆண்டு ஐஐடி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுடன் உரையாடி இருக்கிறார். ” Kamal hassan at IIT Bombay – Avenues’2010 ” எனும் தலைப்பில் 1.21 மணி நேரம் நடைபெற்ற உரையாடல் வீடியோ யூட்யூப் சேனல் ஒன்றில் வெளியாகி இருக்கிறது.

மேற்காணும் வீடியோவில் இருந்தே, கமல்ஹாசன் கிறிஸ்டியன் ஆர்ட்ஸ் அன்ட் கம்யூனிகேசன் சென்டரில் பணியாற்றியது குறித்து பேசியது எடுக்கப்பட்டு உள்ளது. இதில், நான் ஒரு பகுத்தறிவாளனாக இருந்தும் கூட சம்பளத்திற்காக கிறிஸ்தவத்தை பரப்பும் நிறுவனத்தில் பணியாற்றி இருந்தேன் என்று மட்டுமே கூறி இருக்கிறார். ஆனால், வைரலாகும் பதிவுகளில் கூறியது போன்று கிறிஸ்தவத்தை மறைமுகமாக பரப்புவதாகவோ, இந்து கோவில்கள் தடையாக இருப்பதாகவோ அல்லது அறநிலையத்துறை குறித்தோ பேசவில்லை.

இந்த வீடியோவில் 40வது நிமிடத்தில் சென்னையை சேர்ந்த ஒருவர் கமல்ஹாசன் அவர்களிடம், ” அன்பே சிவம் படத்தில் மாதவன், தசாவதாரம் திரைப்படத்தில் அசின் ஆகியோர் கேட்ட கேள்வியை நானும் கேட்கிறேன். உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா ? ” எனக் கேட்ட கேள்விக்கு ” இல்லை ” என கமல் பதில் அளித்தார். அடுத்ததாக, நீங்கள் கிறிஸ்தவத்தைப் பரப்பினேன் எனக் கூறினீர்கள், இப்போதும் ? ” எனக் கேட்ட கேள்விக்கு ” நான் டைப்பர் கூட பயன்படுத்தி இருந்தேன்.. அதற்காக ” எனச் சிரித்து இருந்தார்.

கமல்ஹாசன் அமெரிக்காவில் பேசியதன் தமிழாக்கம் என்றே பதிவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கமல்ஹாசன் பேசிய 52 நிமிட வீடியோ ஒன்று கிடைத்தது. அதிலும், இந்து கோவில்கள் தடையாக இருப்பதாகவோ அல்லது கிறிஸ்தவத்தை மறைமுகமா பரப்புவதாகவோ எங்கும் கூறவில்லை.

கமல்ஹாசன் பிபிசி-க்கு பேட்டி அளித்த பழைய வீடியோவில் இருந்து சிறு காட்சிகளை எடுத்து இணைத்து பரப்பி இருக்கிறார்கள். இந்த வீடியோவில், மகாராஷ்டிராவில் மேடையிலேயே என்னுடைய கால் எலும்பு முறிந்த போது என்னால் நடனமாட முடியாது எனக் கூறினார்கள். ஆகையால், நான் கிறிஸ்டியன் ஆர்ட்ஸ் அன்ட் கம்யூனிகேசன் செண்டரில் வேலைபார்த்தேன். அது இயேசுவின் வார்த்தைகளை உலகம் எங்கும் பரப்புகின்ற பணி ” என 3-வது நிமிடத்தில் பேசி இருக்கிறார். அதைத் தவிர்த்து, பதிவுகளில் கூறியது போன்று ஏதும் கூறவில்லை.

கமல்ஹாசன் கிறிஸ்டியன் ஆர்ட்ஸ் அன்ட் கம்யூனிகேசன் சென்டரில் பணியாற்றியது குறித்து பல இடங்களில் வெளிப்படையாக பேசி இருக்கிறார். ஆனால், வைரல் செய்யப்படும் பதிவுகளில் கூறுவது போன்று கிறிஸ்தவத்தை மறைமுகமா பரப்புவதாகவோ, அதற்கு இந்து கோவில்கள் தடையாக இருப்பதாகவோ மற்றும் அறநிலையத்துறை குறித்தோ என்று எங்கும் கூறவில்லை. இதுபோன்ற கருத்தினை கமல்ஹாசன் பேசி இருந்தால் ஊடகங்கள் மட்டுமின்றி அவருக்கு எதிர் கருத்தைக் கொண்டவர்களும் வலுவான காரணம் கிடைத்ததாக விவாதமாக்கி இருப்பார்கள். ஆனால், சமூக வலைதளங்களில் மட்டுமே இவ்வாறான தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader