கமல் டார்ச் லைட்டால் தாக்கியதில் பெண் உதவியாளர் மருத்துவமனையில் அனுமதி என வதந்தி !

பரவிய செய்தி
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் கையில் இருந்த டார்ச்சை தூக்கி அடித்ததில் அவரது பெண் உதவியாளர் அடிபட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதி
மதிப்பீடு
விளக்கம்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் தன்னுடைய பிரச்சாரத்தின் போது கையில் இருந்து டார்ச்சை தூக்கி அடித்ததில் அவரது பெண் உதவியாளருக்கு அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக புதிய தலைமுறை, நியூஸ் 7 தமிழ், பாலிமர் பல முன்னணி தமிழ் செய்தி ஊடகங்களின் நியூஸ் கார்டு வைரல் செய்யப்பட்டு வருகிறது.
புதிய தலைமுறையின் செய்தியில், கமல் டார்ச் லைட்டை கீழே தூக்கிப் போடும் வீடியோவுடன் நியூஸ் டெம்ப்ளேட் ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து வாசகர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
புதுச்சேரியில் கமல் பிரச்சாரம் செய்த போது, மைக் சரியாக வேலை செய்யவில்லை. மைக்கை தட்டித்தட்டி பார்த்தும் வேலை செய்யாததால் கோபமடைந்த கமல்ஹாசன் கையில் வைத்திருந்த கட்சியின் சின்னமான டார்ச் லைட்டை எடுத்து கீழே தூக்கி வீசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. கட்சி ஊழியரையே கமல் தாக்கியதாக செய்திகள் சிலவற்றிலும் வெளியிட்டு இருந்தனர்.
ஆனால், கமல்ஹாசன் டார்ச் லைட்டால் தாக்கியதில் பெண் உதவியாளருக்கு அடிபட்டு மருத்துவமனையில் அனுமதி என எந்த செய்தியும் வெளியாகவில்லை. வைரல் செய்யப்படும் புதிய தலைமுறை, நியூஸ் 7 தமிழ், பாலிமர் உள்ளிட்ட நியூஸ் கார்டும் அந்தந்த நிறுவனத்தால் வெளியிடப்பட்டவை அல்ல.
இதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி தலைவர் மயில்வாகனன் என்பவரைத் தொடர்பு கொண்டு பேசுகையில், ” மைக் சரியாக வேலை செய்யவில்லை என அங்கிருந்த சீட் மீதே டார்ச் லைட்டை தூக்கி வீசினார். பெண் உதவியாளர் காயமடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறானது. அப்படி எந்தவொரு அதிகாரப்பூர்வ செய்தி கூட வெளியாகவில்லை ” எனத் தெரிவித்து இருந்தார்.
வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டில் காயமடைந்த நிலையில் இருக்கும் பெண்ணின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” alamy ” எனும் புகைப்பட விற்பனை தளத்தில் இடம்பெற்ற புகைப்படம் என அறிய முடிந்தது. அந்த புகைப்படங்களை பயன்படுத்தி போலியான நியூஸ் கார்டுகளை உருவாக்கி இருக்கிறார்கள்.
மேலும் படிக்க : இடஒதுக்கீடு மூலம் ஜாதிவெறி அதிகரிக்கிறது என கமல்ஹாசன் கூறினாரா ?
மைக் வேலை செய்யவில்லை என கமல்ஹாசன் டார்ச் லைட்டை தூக்கி வீசும் வீடியோவில் ஊழியர் மீது டார்ச் லைட் பட்டதா, இல்லையா என உறுதியாக தெரியவில்லை. யார் மீதும் படவில்லை என அக்கட்சியை சேர்ந்தவர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர். எனினும், பெண் உதவியாளர் தாக்கப்பட்டதாக பரப்பப்படும் நியூஸ் கார்டுகள் எடிட் செய்யப்பட்டவை.
முடிவு :
நம் தேடலில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கையில் இருந்த டார்ச்சை தூக்கி அடித்ததில் அவரது பெண் உதவியாளர் அடிபட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதி என பரப்பப்படும் பல செய்தி நிறுவனங்களின் நியூஸ் கார்டுகள் போலியானவை என அறிய முடிகிறது.