கமல்ஹாசன் பாஜகவுடன் கூட்டணி வைப்பதாகக் கூறினாரா ?

பரவிய செய்தி
தமிழகத்தின் பன்முகத்தன்மையை ஏற்றுக் கொண்டால் பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் எந்த தயக்கமும் இல்லை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.
மதிப்பீடு
சுருக்கம்
ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் கருத்தரங்கில் பேசிய கமல்ஹாசன் யாரும் தீண்டத்தகாதவர் இல்லை என தெரிவித்தார். எனினும், நேரடியாக பிஜேபி உடனான கூட்டணி பற்றி தெளிவாக கூறாமல் மழுப்பலான பதிலையே அளித்தார்.
விளக்கம்
டெல்லியில் நடைபெற்ற ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் 16-ம் ஆண்டு தலைமைத்துவத்தின் சிகரம்(16th Hindustan times leadership summits) கருத்தரங்கில் இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது.
அக்டோபர் 5-ம் தேதி நடைபெற்ற இந்நேர்காணலில் தமிழகத்தின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசனிடம் ரஜினிகாந்த், ராகுல்காந்தி, மத்திய பிஜேபி தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளார்.
தன் நெருங்கிய நண்பரான நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் குறித்து கேள்வி எழுப்பிய போது அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன் ரஜினிகாந்தின் கட்சி கருவில் இருக்கும் குழந்தை எனக் கருத்து தெரிவித்தார். ஆனால், மக்கள் நீதி மய்யம் 8 மாதங்களை கடந்து மக்களுடன் கைக் கோர்த்து பயணிக்கிறது எனக் கூறினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பற்றிய கேள்விக்கு, ராகுல் காந்திக்கு இந்திய பிரதமராகும் வாய்ப்பும், தகுதியும் உள்ளதாக கூறினார். ராகுல் காந்தியை தாம் தேசியத் தலைவராக பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
பிஜேபி பற்றி தொகுப்பாளர் கேட்ட கேள்வி: உங்களின் அரசியல் மிகவும் வித்தியாசமான ஒன்று என கூறுனீர்கள். உங்கள் அரசியல் காவி அரசியல் இல்லை ?
கமல்ஹாசன் : இல்லை .
தொகுப்பாளர்: அப்படியென்றால் என்ன கூற வருகிறீர்கள்?
கமல்ஹாசன் : ஒரு நிறம் மட்டும் ஒரு கொடியை நிரப்பி விட நான் விரும்பவில்லை. நாம் தான் அதை முடிவு எடுத்தோம். நாம் தான் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு கொடியை வடிவமைத்தோம், நாட்டை வடிவமைத்தோம், அதுபோல் முன்பு எதுவும் இல்லை.
தொகுப்பாளர் : அதைப் பற்றி விரிவாக பேசலாம். ஒரு நிறம் நிரப்பவில்லை என சொன்னீர்கள். அப்படி என்றால் அரசியல் கட்சியான பிஜேபி உடன் கமல்ஹாசன் கூட்டணி அமைக்க மாட்டாரா ?
கமல்ஹாசன் : இல்லை. அதைப் பற்றி கட்சி வழியாக பார்த்தால் எனக்கு தெரியவில்லை. ஆனால், மக்கள் வழியாக பார்த்தால் நான் ஐயப்பன் கோவிலைப் பற்றி பேசினேன். அது ஆன்மீகம். எனக்கு ஆன்மீகவாதியாக இருக்கும் நண்பர்கள் பலரையும் தெரியும். எங்களது உரையாடல் சுமுகமானதாக இருக்கும். நாங்கள் ஒவ்வொரு வாக்கியத்திலும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துக் கொள்வதில்லை. எங்களுடைய எண்ணம் உலகம் முழுவதையும் சேர்க்க வேண்டியதை பற்றியதாக இருக்கும்.
முழு உலகிற்கு இந்தியா சிறு உதாரணம். உலகிற்கு இதற்கு முன் பல உதாரணங்கள் நம்மிடம் இருந்துள்ளன. நம்மால் அதை மறுபடியும் செய்ய முடியும்.
தொகுப்பாளர் : மன்னித்து விடுங்கள். நான் உங்களை கட்டாயப்படுத்துகிறேன். தற்சமயம் நீங்கள் ஒதுக்க தயாராக இல்லாத பிஜேபி உடன் கூட்டணி வைக்க சாத்தியம் உள்ளதா ?
கமல்ஹாசன் : என் DNA மரபணுவை சிதைக்க முடியாது அதை பொறுத்தவரை யாரும் தீண்டத்தகாதவர்கள் இல்லை. ஆனால், தமிழ்நாட்டின் மரபணுவை மாற்ற இயலாது. அது யார் கூட்டணி அமைக்க வந்தாலும் இந்தியா பெருமை கொள்ளும் பன்முகத்தன்மை வேண்டும்.
கமல்ஹாசன் பிஜேபி கட்சியுடன் நேரடியாக கூட்டணி வைப்பது குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை. அவர் அளித்த பதில் அனைத்து கட்சிக்கும் பொருந்துமாறு அமைந்துள்ளது.
கட்சிகளின் கூட்டணிகள் கள அரசியலுக்கு ஏற்றார் போல் மாறும் என்பதை தமிழக கட்சிகளின் முந்தைய கூட்டணி வரலாற்றின் மூலம் தெளிவாக அறியலாம்.