காமராஜர் உருவம் பொறித்த நாணயத்தை மோடி அரசு வெளியிட்டதா ?

பரவிய செய்தி
கல்வி கண் திறந்த வள்ளல் காமராசர்.. தமிழ்நாட்டிற்கு ஊழல் இல்லாத ஆட்சியை வழங்கிய உன்னத தலைவர்.. கர்மவீரர் கு.காமராஜ் அவர்கள் நினைவாக பிஜேபி மோடி அரசாங்கம் வெளியிட்டுள்ள நூறு ரூபாய் நாணயம். ஊடகங்கள் மறைத்த இந்த செய்தி உங்கள் பார்வைக்கு.
மதிப்பீடு
விளக்கம்
பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை மோடி தலைமையிலான மத்திய அரசு வெளியிட்டு உள்ளதாக இப்புகைப்படம் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது.
முகநூல் உள்ளிட்டவையில் கடந்த சில தினங்களாக காமராஜர் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், அதில் மோடி அவர்களை குறிப்பிடவில்லை. எனினும், கமெண்ட்களில் பிரதமர் மோடியை பாராட்டி, வாழ்த்துக் கூறி பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை என்ன ?
காமராஜர் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் குறித்து தேடுகையில், 2013-ம் ஆண்டு coins.gov1.in எனும் இணையதளத்தில் காமராஜர் நினைவு நாணயங்களின் தொகுப்பு என காமராஜர் உருவம் பொறித்த 100 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நாணயங்களின் புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தது.
” காமராஜரின் நூற்றாண்டு விழாவை நினைவுக்கூறும் விதமாக 2004-ல் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் வெள்ளி நாணய தொகுப்பை வெளியிட்டார் ” எனக் கூறப்பட்டுள்ளது.
2003-ம் ஆண்டுடன் நூற்றாண்டு கண்ட காமராஜர் அவர்களின் நினைவாக மத்திய அரசு 5 மற்றும் 100 ரூபாய் நாணயங்களின் வெளியீட்டின் போது அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் ஆற்றிய உரையானது 2004-ம் ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி குறிப்பிட்டு பிரதமர் அலுவலக இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், ஐயா காமராஜரின் நூற்றாண்டு நினைவாக மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு 2004-ல் வெளியிட்ட காமராஜர் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடியின் அரசு வெளியிட்டதாக தவறாகப் பரப்பி வருகிறார்கள்.