காமராஜர் உடலை மெரீனாவில் புதைக்க மறுத்தாரா கருணாநிதி ?

பரவிய செய்தி

1975 ஆம் ஆண்டில் கர்மவீரர், கல்வித் தந்தை ஐயா காமராஜர் அவர்கள் மறைவின்போது அன்றைய முதல்வர் கருணாநிதியின் உத்தரவு. “ முதல்வராக மறைந்தால் மட்டுமே மெரீனா பீச்சில் நினைவிடம் ஒதுக்க முடியும் “ அதுமட்டுமின்றி, அவர் முன்னாள் முதல்வர். அவரை எல்லாம் மெரீனாவில் புதைக்க முடியாது. அவர் முதலமைச்சராக இருந்தப்போவா இறந்தார் ? வேண்டும் என்றால் பீரங்கி மரியாதை கொடுக்க சொல்கிறோம் என்று கருணாநிதி சொன்ன பதில்.

மதிப்பீடு

விளக்கம்

2018 ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் வயது மூப்பு காரணமாக பல நாட்கள் சிகிச்சைக்கு பிறகு இயற்கை எய்தினார்.

ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்த மு. கருணாநிதி அவர்களின் உடல் நாளை பொதுமக்களின் பார்வைக்காக சென்னை ராஜாஜி மஹாலில் வைக்கப்பட உள்ளது. அதன்பிறகு கலைஞரின் உடலை மெரீனாவில் அடக்கம் செய்ய தமிழக அரசு இடம் ஒதுக்கவில்லை. சட்டசிக்கல்கள் இருப்பதால் கிண்டி காந்தி மண்டபம் பகுதியில் இடம் அளிப்பதாக கூறியுள்ளனர்.

கலைஞரின் மரணத்துடன் ஐயா காமராஜரின் மரணம் பற்றியும் சில பொருந்தாத செய்திகள் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. ஐயா காமராஜரின் உடலை மெரீனாவில் அடக்கம் செய்ய அன்றைய முதல்வர் கலைஞர் அனுமதி அளிக்க மறுத்தார் என்ற குற்றச்சாட்டு உருவாகி உள்ளது.

” ஐயா கர்மவீரர் காமராஜர் 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி ( காந்தி அடிகளின் பிறந்தநாளில்) இயற்கை எய்தினார். அப்பொழுது அவரின் உடல் தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கும், பிற சம்பிரதாயங்கள் செய்யவும் திட்டமிட்டனர். ஆனால், அன்றைய முதல்வர் ஐயா காமராஜர் உடல் ராஜாஜி மஹாலில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க ஏற்பாடுகளை செய்தவர். மத்திய அரசு அனுமதி, சட்ட சிக்கல் என்று எதையும் ஏற்காமல் ஐயாவிற்கு தக்க இறுதி மரியாதை அளித்தே தீருவேன் என்று கூறியவர் கலைஞர் “. இந்த தகவல்கள் விகடனில் வெளியாகி உள்ளது.

” ஐயாவின் உடல் பொதுமக்கள் பார்வைக்கு மற்றும் தலைவர்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி மஹாலில் வைக்கப்பட்டு, ஈமச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளை முதல்வராக இருந்த கருணாநிதி அவர்களே செய்தார். 

மறுநாள் காமராஜரின் உடல் கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அரசு மரியாதை அளிக்கும் விதத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்கப்பட்டது. அவரது உடல் இருந்த சிதைக்கு அவரது சகோதரியின் பேரன் கனகவேல் தீமூட்டினார் ” என்று கர்மவீரர் காமராஜ் : வாழ்வும் தியாகமும் என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

காமராஜரின் உடல் புதைக்கப்படவில்லை. கிண்டியில் காந்தியின் பெயரில் உள்ள மண்டபத்திற்கு அருகிலேயே அவருக்கும் மண்டபம் கட்டப்பட்டது. காமராஜர் மண்டபம் கவனிப்பாரு அற்று இருந்த நிலையில் அவரின் பிறந்தநாள் அன்று கலைஞர் அவர்களே களத்தில் இறங்கி சுத்தம் செய்ய தொடங்கினார். அவ்விடத்தில் அணையா விளக்கு ஒன்றை ஏற்றி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாற்றில் இல்லாததை புதிதாக எழுதி ஊரை ஏமாற்றும் செயல் தேவையா ? ஒருவரை விமர்சிக்க சரியான காரணம் ஆயிரம் இருக்கும். அதை பேசுதல் அறிவுடைமை.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button