காமராஜர், ஜானகிக்கு மெரினாவில் இடமளிக்க கருணாநிதி மறுத்தாரா ?

பரவிய செய்தி
முன்னாள் முதல்வர்கள் என்பதால் காமராஜர் மற்றும் எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மாள் ஆகியோருக்கு மெரினா கடற்கரையில் இடம் அளிக்க முடியாது என கருணாநிதி மறுத்து விட்டார் – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
மதிப்பீடு
விளக்கம்
தமிழக முதல்வர் பழனிசாமி எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் இறந்தபோது அவருக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு, மறைந்த முதல்வர்களுக்கு மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய இடமளிக்க முடியாது.

மறுநாள் காமராஜரின் உடல் கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அரசு மரியாதை அளிக்கும் விதத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்கப்பட்டது. அவரது உடல் இருந்த சிதைக்கு அவரது சகோதரியின் பேரன் கனகவேல் தீமூட்டினார். ஐயா காமராஜரின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் என அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் மற்றும் குடும்பத்தினர் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்படவில்லை. முன்னாள் முதலமைச்சர் எனக்கூறி அவருக்கு மெரினாவில் இடம் மறுக்கப்படவும் இல்லை.
ஜானகி ராமச்சந்திரன் :
1996ம் ஆண்டு மே 19-ம் தேதி எம்.ஜி.ஆரின் மனைவியும், 23 நாட்கள் தமிழகத்தின் முதல்வராகவும் இருந்த ஜானகி ராமச்சந்திரன் மறைந்தார். ஜானகி அம்மாளின் மறைவிற்கு சில நாட்களுக்கு முன்பாக மே 13-ம் தேதி கருணாநிதி தலைமையிலான புதிய அரசு பதவியேற்றது.
ஜானகி ராமச்சந்திரன் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் அளிக்க மறுத்ததோடு, ராமாவரம் தோட்டத்தில் அடக்கம் செய்து கொள்ளுங்கள் என கருணாநிதி கோப்பு வாயிலாக தெரிவித்ததாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார். ஆனால், அரசு ஆணைகளில் அப்படி எந்தவொரு கோப்பும் நமக்கு கிடைக்கவில்லை.
இது குறித்து கலைஞருக்கு மெரினாவில் இடம் கேட்டு வழக்கு நடத்திய வழக்கறிஞர் மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் அவர்களிடம் பேசினோம்:-
” எடப்பாடி பழனிசாமி அவர்கள் பொய் சொல்கிறார். அவர்கள் சொல்வது நீதிமன்ற ரெக்கார்டுக்கு எதிரானது. கலைஞருக்கு மெரினாவில் இடம் வேண்டுமென்று நடத்தப்பட்ட வழக்கில் அரசு தரப்பிலிருந்து ஜானகி ராமச்சந்திரனுக்கு கலைஞர் இடம் மறுத்தது போல் ஒரு உத்தரவை காண்பித்தார்கள். அதைக்கண்டு நீதியரசரும், நாங்களும் சிரித்தோம். ஏனென்றால் அந்த உத்தரவு அவர்கள் சொன்னதுபோல் இல்லை. ஜானகி அம்மாள் வாரிசுகள் யாரும் மெரினாவில் இடம் வேண்டுமென்று கோரிக்கை வைக்கவில்லை. ‘எம்.ஜி.ஆர். வீட்டு தோட்டத்தில் அரசுமுறைப்படி அடக்கம் செய்ய வேண்டும்’ என்றுதான் வாய்வழி கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்தக்கோரிக்கைக்கு கலைஞர் உடனே செவிசாய்த்து ‘அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யலாம்’ என்று உத்தரவிடுகிறார். இவ்வளவுதான் அந்த உத்தரவில் இருந்தது. எனவே ஜானகி அம்மாளுக்கு கலைஞர் இடம்தர மறுத்தார் என்று எடப்பாடி பழனிசாமி சொல்வது பொய்” என்று கூறினார்.
இது குறித்து எம்.ஜி.ஆரின் வளர்ப்பு குழந்தைகளில் ஒருவரான லதாவின் மகன் குமார் ராஜேந்திரனிடம் பேசினோம்:-
” ஜானகி அம்மாவின் உடலை எம்.ஜி.ஆர் தோட்டத்தில் அடக்கம் செய்ய வேண்டுமென்றுதான் ஆசைப்பட்டார்கள். என்னுடைய தாத்தா (ஜானகி அம்மாவின் தம்பி) நாராயணன் என்கிற மணி என்பவர், ‘ஜானகி அம்மாவை வெளியில் கொண்டு சென்று சாலையில் வாகன நெரிசல்கள் ஏற்படுத்தி கஷ்டபடுத்துவதை நாங்கள் விரும்பவில்லை அதனால் தோட்டத்தினுள்ளேயே அடக்கம் செய்ய விருப்பப்படுகிறோம்’ என்று ஜானகி அம்மாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த ஜெயலலிதாவிடமும், பின்னர் வந்த அப்போதைய முதல்வர் கலைஞரிடமும் தெரிவித்தார்.
பின்னர் அப்போதைய காஞ்சிபுரம் ஆட்சியராக இருந்த ராம் மோகன் ராவிடம் உரிய வழிமுறைகளை கலைஞர் அரசு கூறியது. தனியார் இடத்தில் அடக்கம் செய்வதற்கு ஆட்சியர் அனுமதி வேண்டும். எனவே அவரிடம் கடிதம் பெற்று அனுமதி வாங்கி எம்.ஜி.ஆர் தோட்டத்திலேயே அரசு மரியாதையுடன் ஜானகி அம்மாவின் உடலை அடக்கம் செய்தார்கள். மெரினாவில் ஜானகி அம்மாவுக்கு இடம் கொடுக்க வேண்டுமென்று ஜானகி அம்மா/எம்.ஜி.ஆர் குடும்பத்தின் சார்பில் யாரும் கேட்கவில்லை, ஆசைப்படவுமில்லை.
எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் இந்தப் பொய்யை கூறி வருகிறார். ஜானகி அம்மா தான் தங்களுடைய சொந்த இடத்தை அதிமுக கட்சி அலுவலகத்திற்கு கொடுத்தார்கள். அங்கே ஜானகி அம்மா படம் வைக்க வேண்டுமென்று பல வருடங்களாக கேட்கிறோம் அதை அவர்கள் செய்யவே இல்லை. எல்லா முதலமைச்சர்களுக்கும் செய்வது போல ஜானகி அம்மாவின் பிறந்த நாளையும், இறந்த நாளையும் அரசு விழாவாக எடுக்க வேண்டும் என்று கேட்கிறோம். அதையும் அதிமுக செய்யவில்லை. ஜானகி அம்மா முதல்வராக இருந்தபோது எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா அணியில் இருந்தார். அவர் இன்று ஜானகி அம்மாவுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கிறார். ஜெயலலிதா முதல்வரானபோது தலைமைச் செயலகத்தில் ஜானகி அம்மாவின் படத்தை வைக்கவில்லை. பின்னர் கலைஞர்தான் முதலமைச்சர் ஆன பிறகு ஜானகி அம்மாவின் படத்தை தலைமைச் செயலகத்தில் வைத்தார்” என்றார்.
முடிவு :
நம் தேடலில், முன்னாள் முதல்வர்கள் என்பதால் காமராஜர் மற்றும் ஜானகி ராமச்சந்திரனுக்கு மெரினாவில் இடமளிக்க கருணாநிதி மறுத்ததாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுவது தவறான தகவல் என அறிய முடிகிறது.