மது போதையில் பிரியாணி கடை முன் ரகளையில் ஈடுபட்ட அர்ச்சகரின் பொய் புகார்.. அந்த பொய்யை பரப்பிய தினமலர் !

பரவிய செய்தி

காஞ்சிபுரம்:கோவில் குளத்தை மூடிவிட்டு, ‘கார் பார்க்கிங்’ அமைக்க எதிர்ப்பு தெரிவித்த, காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் அர்ச்சகருக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள். அவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பினர்- தினமலர் !

News Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

காஞ்சிபுரத்தில் கோயில் திருப்பணி தொடர்பாகவும், கோயில் இடத்தில் கார் பார்க்கிங் அமைப்பதை தட்டிக் கேட்டதற்காகவும் கொடூரமாகத் தாக்கப்பட்டதாக அர்ச்சகர் ஒருவர் பேசிய வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதை செய்தது திமுக குண்டர்கள் என மீடியான் செய்தித்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

News Link

தவறை தட்டிக்கேட்ட அர்ச்சகர் மீது தாக்குதல் எனத் தாமரை டிவி தனது யூட்யூப் தளத்தில் செய்தி  வெளியிட்டிருந்தது.

Youtube Link

கோயில் நிலத்தில் கார் பார்க்கிங் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மர்ம நபர்கள் என்னைத் தாக்கியுள்ளனர் எனச் சேஷாத்ரி பேசிய வீடியோவை ரங்கநாதன் நரசிம்மா டிவிட்டரில் வெளியிட்டு இருந்தார். மேலும், புகார் மனுவையும் பதிவிட்டு இருந்தார்.

Twitter Link | Archive Link

உண்மை என்ன ?

இச்சம்பவம் குறித்த உண்மையைக் கண்டறிய சிவகாஞ்சி காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு பேசியபோது, “மதுபோதையில் இருந்த உலகளந்த பெருமாள் கோயில் அர்ச்சகர் சேஷாத்திரி மற்றும் அவரது நண்பர் கார்த்திக் என்பவருக்கும் துப்புரவு பணியாளருக்கும் இடையே நடந்த மோதல் குறித்துக் குறிப்பிட்டார்.

காஞ்சிபுரம்-வாலாஜாபாத் சாலையில் உள்ள ஒரு மதுபான கடையில் சேஷாத்திரி மற்றும் அவரது நண்பர் கார்திக்கும் மது அருந்தி உள்ளனர். அதன்பின், காஞ்சிபுரம் டவுன் பேங்க் பகுதியில் உள்ள ராயல் பிரியாணி கடையில் சாப்பிடுவதற்காகத் தங்களது இன்னோவா வாகனத்தைக் கடை எதிரே நிறுத்தியுள்ளனர்.

அப்போது மாநகராட்சியின் குப்பை அள்ளும் வாகனம் அவர்களுடைய இன்னோவா வாகனத்தின் பக்கத்தில் நிறுத்தப்பட்டது. தங்களுடைய இன்னோவா வாகனத்தை எடுப்பதற்காகத் தொடர்ச்சியாக ஹார்ன் அடித்துள்ளனர். இதனால் சேஷாத்திரிக்கும் மாநகராட்சி வாகனத்தின் ஓட்டுனருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், அங்கே துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் சேஷாத்திரியை தாக்கியுள்ளார். இதனால் அவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், தான் மது போதையில் இருந்த உண்மையை மறைப்பதற்காக வேறொரு காரணத்தை சேஷாத்திரி கூறியுள்ளார்” என சிவகாஞ்சி காவல் நிலையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இந்த உண்மைக் குறித்து அர்ச்சகர் சேஷாத்ரி பேசும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சேஷாத்திரி தான் கூறிய பொய்யை ஒப்புக்கொண்டுள்ளார்.

முடிவு :

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் அர்ச்சகர் மது போதையில் தகராறில் ஈடுபட்டுவிட்டு, கோவில் குளத்தில் கார் பார்க்கிங் கட்ட போவதற்கு எதிர்த்து பேசியதால் தன்னை மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர் எனப் பொய்யான தகவலை கூறியிருப்பது தெரியவருகிறது.

Please complete the required fields.




Back to top button
loader