This article is from Sep 19, 2019

1989-ல் தேவிலால் ஹிந்தியில் பேசியதை கனிமொழி மொழிப் பெயர்த்தாரா ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு 1989ல் சென்னை கடற்கரையில் அன்றைய பிரதமர் வி.பி.சிங் கலந்து கொண்ட தேசிய முன்னணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அன்றைய துணை பிரதமர் தேவிலால் ஹிந்தியில் பேசினார். அவரது ஹிந்தி பேச்சை தமிழகத்தை சார்ந்த தலைவரின் மகள் தமிழில் மொழிபெயர்த்தார். அதுவேறு யாருமல்ல ஹிந்திக்கு எதிராக ரயிலே வராத தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த கருணாநிதியின் மகள் கனிமொழி

தலைவர் மகள் ஹிந்தி படித்தால் தமிழ் அழியாது.. தொண்டரின் மகள் ஹிந்தி படித்தால் தமிழ் அழிந்து விடும்.. அவ்வளவு தான் பகுத்தறிவு..

மதிப்பீடு

சுருக்கம்

அரசியல் சார்ந்த குற்றச்சாட்டினைக் கூறும் இப்பதிவில் இருக்கும் ஆதாரமற்ற தகவல்களை விரிவாக காண்போம்.

விளக்கம்

மிழகத்தில் சாமானிய மக்களும் ஹிந்தி மொழியை கற்க விடாமல் அரசியல்வாதிகள் செயல்படுவதாக சமீப குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் பரவுவதை காணலாம். அதில் ஒன்றாக, ஹிந்தியை தமிழகத்தில் நுழைய விடக்கூடாது எனக் கூறும் திமுக கட்சியின் எம்.பி கனிமொழி ஹிந்தி மொழியில் தலைவர்கள் பேசியதை மொழிப் பெயர்த்து கூறியுள்ளார் என்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் பதிவுகள் தற்பொழுது வைரலாகி வருகிறது.

Facebook link | Archived link 

1989ல் சென்னை கடற்கரையில் அன்றைய பிரதமர் வி.பி.சிங் கலந்து கொண்ட தேசிய முன்னணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அன்றைய துணை பிரதமர் தேவிலால் ஹிந்தியில் பேசினார். அவரது ஹிந்தி பேச்சை கருணாநிதியின் மகள் கனிமொழி தமிழில் மொழிப்பெயர்த்து கூறியதாக கருணாநிதி மற்றும் கனிமொழி இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ?

வைரலாகி வரும் கடந்தகால நிகழ்வு குறித்து ஆராய்ந்து பார்த்தோம். முதலில் பதிவுகளில் பயன்படுத்தி இருந்த புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் செய்து பார்க்கையில், நடிகர் சிவகுமார் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தினர் சந்தித்த புகைப்பட தொகுப்பு நமக்கு கிடைத்தன.

Fridaycinema என்ற ட்விட்டர் பக்கத்தில் கருணாநிதி குடும்பத்தினர் மற்றும் நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் 2017-ல் பதிவிடப்பட்டு உள்ளன. அதேபோல், filmibeat.com என்ற இணையதளத்திலும் நடிகர் சிவகுமாரின் பிறந்தநாள் சிறப்பு புகைப்பட தொகுப்பிலும் அதே புகைப்படங்கள் இடம்பெற்று இருக்கின்றனர்.

கருணாநிதி அமர்ந்து இருக்கும் பொழுது அருகில் கனிமொழி இருக்கும் புகைப்படத்தின் முழுமையான காட்சி இதோ. அதில், நடிகர் சிவகுமார் இருப்பதை காணலாம். அப்புகைப்படத்தையே பயன்படுத்தி உள்ளனர் என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ள முடிந்தது.

தேசிய முன்னணி கூட்டம் :

1989-ல் தமிழ்நாட்டில் தேசிய முன்னணி பொதுக்கூட்டம் நடைபெற்றதாக கூறப்படும் செய்தியை குறித்து தேடினோம். அதில், ” Seven party National Front formally launched in Madras ” என்ற தலைப்பில் இந்தியா டுடே தளத்தில் வெளியான செய்தி கிடைத்தது. 1988 அக்டோபர் மாதம் 15-ம் தேதியன்றே பொதுக்கூட்டம் குறித்த செய்தி வெளியாகி இருக்கிறது. மேலும், அத்தகைய செய்தியில் தலைவர்கள் கைகோர்த்து இருக்கும் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.

2008-ல் முன்னாள் பிரதமர் வி.பி. சிங் மறைவிற்கு வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், ” திமுக மூன்றாம் முறையாக ஆட்சியை பிடித்த பொழுது 27.01.1989-ல் நடைபெற்ற பதவி பிரமாண நிகழ்ச்சிக்கு பிறகு மாலை மெரினா கடற்கரையில் நிகழ்ந்த வாக்காளருக்கு நன்றி கூறும் பொதுக்கூட்டத்தில் வி.பி. சிங் கலந்து கொண்டது ” குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், தேசிய முன்னணி பொதுக்கூட்டத்தில் துணைப் பிரதமராக இருந்த தேவி லால் பேச்சை கனிமொழி மொழிப்பெயர்த்தார் என்பதற்கும் ஆதாரங்கள் இல்லை. அதில், கனிமொழி கலந்து கொண்டார் என்பதற்கும் செய்திகளோ, புகைப்படங்களோ இல்லை.

கனிமொழி ஹிந்தி :

கருணாநிதிக்கு கனிமொழி ஹிந்தி மொழியை மொழிப்பெயர்த்து கூறியதாக கூறுகின்றனர். ஆனால், கனிமொழி ஹிந்தியில் பேசியதாக எங்காவது செய்திகள் உள்ளதா எனத் தேடினோம். அதில், 2019-ல் ஜனவரி மாதம் கனிமொழி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவை காண நேரிட்டது.

நான் இந்தியன், நான் ஹிந்தி பேசமாட்டேன் ” என விமான நிலையத்தில் ஹிந்தி மொழி தெரியாது என இளைஞர் ஒருவருக்கு அனுமதி தாமதப்படுத்திய சம்பவத்தை குறிப்பிட்டு பதிவிட்டு இருந்தார்.

மேலும், கனிமொழி ஹிந்தி பேச்சு என ஆங்கிலத்தில் தேடிய பொழுது DNA இணையதளத்தில் ” Can you speak to me in a language I understand’: Kanimozhi’s response to deputy RS chairman evokes mixed response ” என்ற தலைப்பில் வெளியான செய்தியை காண நேரிட்டது.

2019 ஜனவரியில் ராஜ்யசபா எம்பியாக இருந்த கனிமொழி பேசிய காணொளி இடம்பெற்று இருக்கிறது. அதில், 11.20 நிமிடத்தில் அவைத் தலைவர் ஹிந்தி மொழியில் பேசிய பொழுது ” Sir can you speak in a language I can understand? ” என ஆங்கிலத்தில் கூறிய பிறகு அவைத் தலைவர் ஆங்கிலத்தில் பேசி இருக்கிறார்.

2019 ஜூலை வெளியான செய்தியில், ” ஹிந்தியில் திட்டப் பெயர்களை வைத்தால் புரிந்து கொள்ள முடியவில்லை ” என கனிமொழி கூறியதாக குறிப்பிட்டு உள்ளனர். அதில், ” தூத்துக்குடி அருகே பிரதான் மந்திரி கிராம் சடக் யோஜனா என்ற பெயர் பலகை உள்ளது. இதற்கான அர்த்தம் எனக்கே புரியவில்லை என கூறியதாக வெளியாகி உள்ளது.

எனினும், கனிமொழிக்கு ஹிந்தி மொழி தெரியுமா, தெரியாதா என நம்மால் ஒரு யூகத்தின் அடிப்படையில் உறுதியாக கூற முடியாது.

கருணாநிதி முதல்வராக இருந்த சமயத்தில் NDTV ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கனிமொழியும் உடன் இருந்துள்ளார். அதில், கருணாநிதி தமிழில் பேசியதை ஆங்கிலத்தில் நெறியாளருக்கு எடுத்துக் கூறியுள்ளார்.

முடிவு :

நமக்கு கிடைத்த தகவல்களில் இருந்து, 1989-ல் நடந்த தேசிய முன்னனி பொதுக்கூட்டத்தில் தேவி லால் ஹிந்தியில் பேசியதை கனிமொழி மொழிப்பெயர்த்தார் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை.

அடுத்ததாக, கனிமொழி மற்றும் கருணாநிதி இருவரும் இருக்கும் பழைய புகைப்படம் நடிகர் சிவக்குமார் மற்றும் கருணாநிதி குடும்பத்தினர் சந்தித்து கொண்டு எடுத்துக் கொண்ட புகைப்படங்களே. அதை பயன்படுத்தி உள்ளனர்.

தனக்கு ஹிந்தி தெரியாது என்பது போன்ற பிம்பத்தையே கனிமொழி வெளிக்காட்டி வருகிறார். எனினும், கனிமொழிக்கு ஹிந்தி தெரியுமா, தெரியாதா என நம்மால் உறுதியாக கூற முடியாது.

ஆதரமில்லா பதிவுகளை கொண்டு சமூக வலைதளங்களில் அரசியல் சார்ந்த குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி உள்ளனர் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader