This article is from Mar 26, 2021

10 ஆண்டுகளாகியும் கனிமொழி அடிக்கல் நாட்டிய மருத்துவமனை கட்டப்படவில்லையா ?

பரவிய செய்தி

கனிமொழியின் MP நிதி ரூ.75,00,000ல் ஆரம்பிக்கப்பட்டு 10 ஆண்டுகளாகியும் ஒற்றை அடி உயர சுவர் கூட எழும்பாத ஆரம்ப சுகாதார நிலையம் அம்மா கனி எங்கே அந்த 75,00,000.

மதிப்பீடு

விளக்கம்

மதுரையில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் 3 ஆண்டுகள் ஆகியும் தொடங்கவில்லை, அதற்காக வர வேண்டிய நிதியும் வரவில்லை என எதிர் கட்சிகள் மட்டுமின்றி சமூக வலைதளங்களில் நெட்டிசன்களும் ட்ரோல் செய்கின்றனர்.

இதற்கிடையில், ” அறிவிச்ச மூனு வருஷத்துல 1500 கோடியில் வரவேண்டிய எய்ம்ஸ் மருத்துவமணை எங்கேயென கேட்பவர்கள் நிதி ஒதுக்கி 75 லட்சத்தில் கட்டிமுடிக்க வேண்டிய இந்த மருத்துவமணை எங்கே ” என எம்.பி கனிமொழி அடிக்கல் நாட்டிய மருத்துமனைக்கு ஒதுக்கிய நிதி குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Archive link  

கடந்த பிப்ரவரி மாதமே IMK.info பக்கத்தில், இப்பதிவை வெளியிட்டு இருந்தனர். தற்போது மீண்டும் இப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து வாசகர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வைக்கப்பட்ட கல்வெட்டில் கோமான் தெரு, காயல்பட்டணம் எனப் பொறிக்கப்பட்டு இருக்கிறது. அதை வைத்து தேடுகையில், 2019 பிப்ரவரி 21ம் தேதியன்று எம்.பி கனிமொழி ட்விட்டர் பக்கத்தில், ” இன்று (21.02.2019) காயல்பட்டணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 75 லட்சம் நிதி வழங்கிய ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற போது ” எனப் பதிவிடப்பட்டுள்ளது.

Twitter link | Archive link

2019ல் பதிவிட்ட புகைப்படங்களில் அதே கல்வெட்டு புகைப்படம் இடம்பெற்று உள்ளதை பார்க்க முடிந்தது.

மருத்துவமனை குறித்து மேற்கொண்டு தேடுகையில், 2021 பிப்ரவரி 26-ம் தேதி எம்.பி கனிமொழியின் ட்விட்டரில், ” தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டணத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடத்தைத் திறந்து வைத்த போது ” எனப் பதிவிடப்பட்டுள்ளது.

Twitter link | Archive link 

2020 ஆகஸ்ட் 28-ம் தேதி வெளியான தினத்தந்தி செய்தியில், காயல்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டினார். தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை கனிமொழி எம்.பி பார்வையிட்டார் ” என வெளியாகி இருக்கிறது.

2021 பிப்ரவரி 27-ம் தேதி வெளியான தினத்தந்தி செய்தியில், ” காயல்பட்டினம் கோமான் தெரு மொட்டையார் பள்ளிவாசல் அருகே ரூ.75 லட்சம் மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்ட கனிமொழி எம்.பி 2  ஆண்டுகளுக்கு முன்பு தனது மாநிலங்களவை உறுப்பினர் நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்தார். தற்போது பணிகள் முடிந்து திறப்பு விழா நேற்று காலை 10 மணியளவில் கோமான் தெரு பள்ளிவாசல் அருகே நடைபெற்றது ” என வெளியாகி இருக்கிறது.

முடிவு :

நம் தேடலில், எம்.பி கனிமொழி காயல் பட்டணம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி 10 ஆண்டுகள் ஆகவில்லை. 2019ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டு 2021ல் பணிகள் நிறைவடைந்து மருத்துவமனை திறக்கப்பட்டு உள்ளது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader