எம்.பி கனிமொழி கூறிய உண்மையான தகவலை பொய் என்ற பாஜகவின் சூர்யா !

பரவிய செய்தி

நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி கனிமொழி கூறிய அப்பட்டமான பொய். உண்மையான ஒதுக்கீடுகள் : ஆந்திரா ₹7,032 கோடி, தமிழ்நாடு ₹3,865 கோடி, கர்நாடகா ₹6,091 கோடி, கேரளா ₹1,085 கோடி. ரயில்வே பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, வடக்கு மற்றும் தெற்கு மட்டுமல்ல.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

மக்களவையில் ரயில்வேதுறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக எம்.பி 2022-2023-ல் தெற்கு ரயில்வேயின் புதிய வழித்தடங்களுக்கு ரூ.59 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், வடக்கு ரயில்வேயின் புதிய வழித்தடங்களுக்கு ரூ.13,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. ஒரே தேசம் எனப் பேசும் நீங்கள் ரயில்வே நிதி ஒதுக்கீட்டில் வடக்கு, தெற்கு பாகுபாடு பார்க்கக்கூடாது ” எனப் பேசியது வைரலாகியது.

இந்நிலையில், ” நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி கனிமொழி கூறிய அப்பட்டமான பொய். உண்மையான ஒதுக்கீடுகள் : ஆந்திரா ₹7,032 கோடி, தமிழ்நாடு ₹3,865 கோடி, கர்நாடகா ₹6,091 கோடி, கேரளா ₹1,085 கோடி ” என தமிழக பாஜகவின் செய்தித் தொடர்பாளர் சூர்யா ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

உண்மை என்ன ?

பிப்ரவரி 3-ம் தேதி தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஏ.கே.அகர்வால் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது, ” தெற்கு ரயில்வே 2022-23 நிதியாண்டிற்கு ரூ.7,134.56 கோடி ஒதுக்கீடு, கூடுதல் பட்ஜெட் ஆதாரமாக ரூ.1,064.34 கோடி கிடைத்துள்ளது. மொத்த ஒதுக்கீட்டில் இரட்டிப்பு திட்டங்களுக்கு ரூ.1,445.85 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, கேஜ் மாற்றும் திட்டங்களுக்கு ரூ.346.80 கோடியும், புதிய வழித்தடங்களுக்கு ரூ.59 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது ” எனத் தெரிவித்து இருக்கிறார்.

2022-23 நிதியாண்டில் வடக்கு ரயில்வேயில் புதிய ரயில் வழித்தடங்களுக்கு ரூ.13,282 கோடியும், தெற்கு ரயில்வேயில் புதிய வழித்தடங்களுக்கு ரூ.59 கோடி மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை மேலே காணலாம். இதையே, எம்.பி கனிமொழியும் மக்களவையில் பேசி இருக்கிறார்.

2022 பிப்ரவரி 6-ம் தேதி மதுரை எம்.பி சு.வெங்கடேசன், ” கடந்த நான்கு ஆண்டுகளில் தெற்கு ரயில்வேயில் புதிய வழித்தடங்களுக்கு ரூ.308 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதே காலக்கட்டத்தில் வடக்கு ரயில்வேயில் புதிய வழித்தடங்களுக்கு சுமார் ரூ.31,௦௦௦ கோடி ஒதுக்கப்பட்டுள்ளது ” என அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

பாஜக சூர்யா கூறியது மாநில வாரியாக ஒதுக்கப்பட்ட நிதி. ” தமிழ்நாட்டிற்கு ரூ.3.865 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 3077 கி.மீ தொலைவு மற்றும் ரூ.28,307 கோடி செலவில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் 25 புதிய வழித்தடங்கள், கேஜ் மாற்றங்கள், இரட்டிப்பு திட்டங்கள் உள்ளிட்டவை அடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முடிவு : 

நம் தேடலில், 2022-2023-ல் தெற்கு ரயில்வேவின் புதிய வழித்தடங்களுக்கு ரூ.59 கோடியும், வடக்கு ரயில்வேவின் புதிய வழித்தடங்களுக்கு ரூ.13,200 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என எம்.பி கனிமொழி கூறியது சரியான தகவல்.

ஆனால், கனிமொழி கூறிய பொய் எனக் கூறி பாஜகவின் சூர்யா குறிப்பிட்ட ரூ.3,865 கோடியானது 2022-2023-ல் தமிழ்நாட்டில் ரயில்வேவிற்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதியாகும் என அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button