This article is from Sep 14, 2019

ராஜபக்சே இல்ல திருமணத்தில் எம்.பி கனிமொழி கலந்து கொண்டாரா ?

பரவிய செய்தி

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மகன் திருமண விழாவில் கலந்து கொண்ட திமுக தூத்துக்குடி எம்.பி கனிமொழி.

மதிப்பீடு

விளக்கம்

தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே இல்ல திருமணத்தில் கலந்து கொண்டதாக சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. கனிமொழி திருமண விழாவில் இருக்கும் புகைப்படங்கள் உடன் கூறப்படும் போலியான செய்திகளையும், அதனுடன் எழுப்பப்படும் கேள்விகளையும் விரிவாக காண்போம்.

திமுக எம்பி கனிமொழி இலங்கையில் ராஜபக்சேவின் இல்ல திருமணத்தில் இருப்பதாக உலாவும் புகைப்படத்தில் இலங்கை அதிபர் உடன் உணவு அருந்தும் புகைப்படங்கள் மற்றும் ராஜபக்சே குடும்பப் புகைப்படங்கள் என தனித் தனியாக இருக்கின்றன. இதைத் தவிர்த்து, மணமக்களுடன் கனிமொழி இருக்கும் புகைப்படம் ஒன்றும் முகநூலில் பகிரப்பட்டு வருகிறது.

ஆனால், கனிமொழி பங்கேற்றது ராஜபக்சே இல்ல திருமணத்தில் அல்ல. சமீபத்தில் இலங்கை கொழும்பு நகரில் இலங்கை அமைச்சரும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவருமான திரு.ரவூப் ஹக்கீம் அவர்களது மகளின் திருமண நிகழ்ச்சியில் எம்.பி கனிமொழி கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படமே ராஜபக்சே இல்ல திருமணம் என பகிரப்பட்டு வருகிறது.

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் மகள் திருமணத்தில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோருடன் கனிமொழி எம்.பி சந்தித்து பேசியுள்ளார்.

இலங்கையின் அமைச்சர் இல்ல விழாவில் கலந்து கொண்டது குறித்து எம்.பி கனிமொழியும் தன் ட்விட்டரில், ” நேற்று இலங்கை அமைச்சரும், ‘இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்’ கட்சித் தலைவருமான திரு. ரவூப் ஹக்கீம் அவர்களது மகளின் திருமண நிகழ்வில் ” என பதிவிட்டு இருக்கிறார். அதில், புகைப்படங்களும் இடம்பெற்று இருக்கின்றன.

கனிமொழி இலங்கை சென்ற நேரத்தில் இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே உடைய மகன் நமல் ராஜபக்சே உடைய திருமணமும் நிகழ்ந்து உள்ளன. அது தொடர்பான செய்திகளும், வீடியோவும் வெளியாகி இருக்கிறது. இரண்டு திருமணம் விழாவில் நிகழ்ந்த புகைப்படத்தை வைத்து தவறான செய்திகளை பகிர்ந்து வருகின்றனர்.

இலங்கை பயணம் :

எம்.பி கனிமொழி தனிப்பட்ட முறையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள தகவல் ஊடகச் செய்திகளில் வெளியாகி இருக்கிறது. அப்பயணத்தில் செப்டம்பர் 12-ம் தேதி இலங்கையில் உள்ள கொழும்பு நகரில் அந்நாட்டு அமைச்சர்களுடன் கனிமொழி எம்.பி சந்திப்பு நிகழ்ந்து உள்ளது. அத்தகைய சந்திப்பில், தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து பேசப்பட்டதாக பிபிசி உள்ளிட்ட செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

கனிமொழி மீது எழும் கேள்விகள் :

பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூகஊடகப்பிரிவு திருப்பூர் தெற்கு மாவட்டம் என்ற முகநூல் பக்கத்தில், ” இலங்கையில் கனிமொழி… ஈழத் தமிழர்களை படுகொலை செய்த இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே மகன் திருமணத்தில் கலந்து கொண்டாரா?… இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம் இல்லத் திருமணத்தில் கனிமொழி கலந்து கொண்டார் ” என இரு பதிவுகளை பதிவிட்டு உள்ளனர்.

இதைத் தவிர சில பதிவுகளில் லைக்கா நிறுவனத்திற்கும், ரஜினி இலங்கை செல்ல எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கனிமொழி இலங்கை சென்றது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என தொடர் கேள்விகளை எழுப்புகின்றனர். மேலும், தமிழக மீனவர்கள் தொடர்பாக இலங்கை பயணம் எனக் கூறி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளையும் எழுப்பி வருகின்றனர்.

முடிவு :

நம்முடைய தேடலில், இலங்கை கொழும்பு நகரில் ராஜபக்சே மகன் திருமண விழாவிற்கு கனிமொழி சென்றதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தியும், புகைப்படங்களும் தவறானவையே. இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம் மகள் திருமண விழாவில் கனிமொழி கலந்து கொண்டதே ராஜபக்சே இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டதாக தவறாக பகிரப்பட்டு வருகிறது.

இலங்கையில் திருமண விழாவில் கலந்து கொண்ட கனிமொழி மீது அரசியல் ஆதரவு பக்கங்களில் குற்றச்சாட்டு பதிவுகள் பகிரப்பட்டு வருகிறது. தூத்துக்குடி எம்பி கனிமொழியின் இலங்கை பயணம் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader