அமித்ஷாவின் காலில் விழுந்த கனிமொழி எனப் பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் !

பரவிய செய்தி
யோகி ஆதித்யநாத் காலில் ரஜினிகாந்த் விழுவது மட்டும் தான் தவறு. மற்றபடி…
மதிப்பீடு
விளக்கம்
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் உத்தரப்பிரதேச முதலமைச்சரான யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்த சம்பவம் பல்வேறு விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்களவை உறுப்பினரான கனிமொழி, ஒன்றிய உள்துறை அமைச்சரான அமித்ஷாவின் காலில் விழுவது போன்றும், அருகில் தமிழ்நாடு முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் நிற்பது போன்றும் உள்ள புகைப்படம் பாஜக ஆதரவாளர்களால் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
யோகி ஆதித்யநாத் காலில் ரஜினிகாந்த் விழுவது மட்டும் தான் தவறு. மற்றபடி… pic.twitter.com/UucYI58iGn
— Lion kalaivani Ravi Hindu Nadar … (@Kalaivaniravi6) August 27, 2023
யோகி ஆதித்யநாத் காலில் ரஜினிகாந்த் விழுவது மட்டும் தான் தவறு. மற்றபடி… pic.twitter.com/x98VRWrkrX
— Gajapathi Gajapathi (@GajapathiGajap4) August 28, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்தப் புகைப்படம் உண்மையானது அல்ல என்பதை அறிய முடிந்தது.
மேலும் உண்மையான புகைப்படத்துடன் தி ஹிந்து கடந்த 2015 ஜனவரி 06 அன்று “கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் கனிமொழி, ஸ்டாலினின் காலில் விழுவது போன்றும், அவர்கள் அருகே கலைஞர் கருணாநிதியும், ராஜாத்தி அம்மாளும் இருப்பது போன்றும் உள்ளது.
அதில், “மு.க.ஸ்டாலின் இன்று காலை கனிமொழியின் இல்லத்துக்குச் சென்றபோது, தனது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்டாலினிடம் கனிமொழி ஆசி பெற்றார். அவர் தனது பிறந்தநாளை தனது தந்தையும் திமுக தலைவருமான மு. கருணாநிதி, அவரது தாயார் ராஜாத்தி அம்மாள் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் உட்பட ஏராளமான கட்சித் தலைவர்களுடன் கொண்டாடினார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போன்று கடந்த 2015-இல் தினமலர் வெளியிட்டுள்ள கட்டுரையிலும் இந்தப் புகைப்படத்தைக் காணமுடிந்தது.
அடுத்ததாக, அமித்ஷாவின் புகைப்படம் குறித்து தேடுகையில், 2019ம் ஆண்டு டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில் அமித்ஷா மற்றும் நிதின் கட்கரி சந்தித்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
இதன் மூலம், கனிமொழி தன்னுடைய பிறந்தநாளுக்கு ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற புகைப்படத்தை, அமித்ஷாவின் காலில் விழுவது போன்று எடிட் செய்து பரப்பியுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க: போப் பிரான்சிஸ் உலகை ஆளும் இலுமினாட்டிகளின் காலில் விழுவதாகப் பரப்பப்படும் வதந்தி !
மேலும் படிக்க: இந்திரா காந்தி காலில் கருணாநிதி விழுந்ததாகப் பரவும் வீடியோ| உண்மை என்ன ?
முடிவு:
நம் தேடலில், அமித்ஷாவின் காலில் விழுந்த எம்.பி கனிமொழி எனப் பரவும் புகைப்படம் போலியானது என்பதையும், 2015ல் எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படத்தில், அவர் மு.க.ஸ்டாலினிடம் காலில் விழுந்து ஆசி வாங்குவதையும் காண முடிகிறது.