30,000 கோடி நஷ்டம் வரும் என்பதால் நாங்கள் டாஸ்மாக்கை மூட மாட்டோம் எனக் கனிமொழி கூறினாரா ?

பரவிய செய்தி

30,000 கோடி நஷ்டம் வந்துடும் அதனால் நாங்கள் டாஸ்மாக் கடைகளை மூட மாட்டோம் – எம்.பி கனிமொழி

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

கடந்த அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி ஆர்பாட்டம், கண்டனம் தெரிவித்து வந்த திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதை நடைமுறைப்படுத்தவில்லை, அதை கண்டுகொள்ளவில்லை என எதிர்ப்பு குரல்கள் எழுந்து வருகிறது.

இதற்கிடையில், பலமுறை டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த திமுக எம்.பி கனிமொழி தற்போது 30,000 கோடி நஷ்டம் வரும் அதனால் நாங்கள் டாஸ்மாக் கடைகளை மூட மாட்டோம் எனக் கூறுகிறார் என கனிமொழி பேசும் 14 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ? 

30,000 கோடி நஷ்டம் வரும் என்பதால் நாங்கள் டாஸ்மாக் கடைகளை மூட மாட்டோம் எனக் கனிமொழி பேசியதாக சமீபத்தில் எந்த செய்திகளும் வெளியாகவில்லை. வைரல் வீடியோவில் நியூஸ் 7 தமிழ் சேனலின் லோகோ இடம்பெற்று இருக்கிறது. ஆகையால், கனிமொழி டாஸ்மாக் கடைகள் குறித்து பேசியது குறித்து தேடுகையில், அது கடந்த 2016ம் ஆண்டு வெளியான செய்தி என அறிய முடிந்தது.

2016 பிப்ரவரி 5ம் தேதி நியூஸ் 7 செய்தியில் வெளியான முழுமையான வீடியோவில் கனிமொழி பேசுகையில், ”  30,000 கோடி நஷ்டம் வந்துடும் அதனால் நாங்கள் டாஸ்மாக் கடைகளை மூட மாட்டோம். டாஸ்மாக் கடைகளை கொண்டு வந்தது யாரு ? சில்லறை மது விற்பனை செய்யும் திட்டத்தை 2003ல் அம்மையார் ஜெயலலிதா தான் கொண்டு வந்தார் ” எனப் பேசி இருக்கிறார்.

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் எம்.பி கனிமொழி, ” அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. இந்தியாவிலேயே இளம் விதவைகள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது. டாஸ்மாக் கடைகளை மூடினால், 30 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படும் என்பதால் மூட மாட்டோம் என சட்டசபையில் கூறுகின்றனர் ” எனப் பேசியதாக தினமலர், ஒன் இந்தியா உள்ளிட்ட இணையதளங்களில் செய்தியாக வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க : எம்.பி கனிமொழி திறந்து வைத்த பேருந்து நிழற்குடை ரூ.1.54 கோடியா ?

மேலும் படிக்க : அரசு பள்ளி புத்தக பைகளில் ஜெ, இபிஎஸ் படம் மீது திமுக ஸ்டிக்கர் ஒட்டியதா ?

இதற்கு முன்பாக, திமுக எம்.பி கனிமொழி பற்றி பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு இருக்கின்றன. அவை குறித்து நாம் கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறோம்.

முடிவு : 

நம் தேடலில், 30,000 கோடி நஷ்டம் வந்துடும் அதனால் நாங்கள் டாஸ்மாக் கடைகளை மூட மாட்டோம் என திமுக எம்.பி கனிமொழி பேசியதாக பரவும் வீடியோ தவறானது. அது கடந்த 2016ல் இருந்த அதிமுக அரசு டாஸ்மாக் கடைகளை மூட மாட்டோம் எனக் கூறினார்கள் எனப் பேசியதை தவறாகப் பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader