எம்.பி கனிமொழி திறந்து வைத்த பேருந்து நிழற்குடை ரூ.1.54 கோடியா ?

பரவிய செய்தி
தூத்துக்குடியில் பயணிகள் நிழற்குடை ஒன்று சமீபத்தில் கனிமொழி மற்றும் கீதா ஜீவன் ஏற்பாட்டில் திறந்து வைக்கப்பட்டது. செலவு ஒரு கோடியே 54 லட்சம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகர ஷீட்டுக்கும், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ராடுக்கும் செஞ்ச செலவு ஒரு கோடியே 54 லட்சமாம்.
மதிப்பீடு
விளக்கம்
தூத்துக்குடி நகரில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிழற்குடை ஒன்றை எம்.பி கனிமொழி மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் இணைந்து திறந்து வைத்தனர். அந்த பேருந்து நிழற்குடை அருகே வைக்கப்பட்ட கல்வெட்டில், ” நவீன பேருந்து நிழற்குடை அமைத்தல் மதிப்பீடு ரூ.154 லட்சம் ” எனக் குறிப்பிட்டது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சாதாரண பேருந்து நிறுத்தத்திற்கு 1.54 கோடியா என எம்.பி கனிமொழியைக் குறிப்பிட்டு கண்டனங்கள் எழத் தொடங்கியது. இதன் உண்மைத்தன்மை குறித்து பதிவிடுமாறு வாசகர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
2021 செப்டம்பர் 5-ம் தேதி, ” தூத்துக்குடி மாநகரம் மில்லர்புரம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட புதிய பயணிகள் நிழற்குடையை கழக பாராளுமன்ற குழு துணைத் தலைவர் திருமிகு.கனிமொழி எம்பி., அவர்களுடன் திறந்து வைத்தபோது ” என அமைச்சர் கீதா ஜீவனின் ட்விட்டர் பக்கத்தில் பேருந்து நிழற்குடையை திறந்து வைக்கும் புகைப்படங்கள் பதிவாகி இருக்கிறது.
அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 1.54 கோடி மதிப்பில் பேருந்து நிழற்குடைகள் அமைக்கும் பணிக்கான ஒப்பந்த அனுமதியை பார்க்க முடிந்தது.
தூத்துக்குடி மாநகராட்சி இணையதளத்தில், ” 2020 மார்ச் 6-ம் தேதி இம்மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் சிட்டி பணியில் தூத்துக்குடி மாநகராட்சி construction of stainless steel bus shelter in Thoothukudi city Municipal corporation பணிக்காக ரூ.1,54,00,000 மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ள பணிக்கு 24.02.2020 அன்று வரப்பட்ட இரண்டு ஒப்பந்தப்புள்ளிகளின் தொழில்நுட்ப உறை 25.02.2020 அன்று திறக்கப்பட்டது ” எனக் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், தூத்துக்குடி மாநகராட்சி வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில், 1.54 கோடி மதிப்பில் 8 பேருந்து நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக இடம்பெற்று இருக்கிறது.
” சீர்மிகு நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பணியான பேருந்து நிறுத்துமிடம் தலா ரூ.19.25 இலட்சம் வீதம் 8 இடங்களுக்கான மொத்தத் தொகை ரூ.154 இலட்சம் மதிப்பீட்டில், நகரின் முக்கிய பகுதிகளான மிகவும் அவசியமான கீழ்கண்ட பேருந்து நிறுத்திமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது ” எனக் கூறப்பட்டுள்ளது.
ரூ.1.54 கோடி மதிப்பில் தூத்துக்குடி பகுதியில் 8 இடங்களில் பேருந்து நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், கல்வெட்டில் ரூ.154 லட்சம் என்றும், 8 பேருந்து நிறுத்துமிடங்கள் என குறிப்பிடாதது சர்ச்சையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், தூத்துக்குடியில் எம்.பி கனிமொழி மற்றும் கீதா ஜீவன் திறந்து வைத்த பேருந்து நிழற்குடை ரூ.1.54 கோடி என தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ரூ.1.54 கோடி மதிப்பில் 8 பேருந்து நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன என அறிய முடிகிறது.