எம்.பி கனிமொழி சிங்கப்பூர் குடியுரிமைப் பெற்றதாக பாஜகவினர் பரப்பும் பொய்!

பரவிய செய்தி
சிங்கப்பூர்வாசிக்கு இந்தியாவில் என்ன வேலை ?
மதிப்பீடு
விளக்கம்
மக்களவையின் உறுப்பினரும், திமுகவின் துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி சிங்கப்பூர் குடியுரிமையைப் பெற்றவர். அவர் எப்படி இந்தியாவில் எம்.பி பதவி வகிக்கலாம் என்று சமூக வலைதளங்களில் பாஜகவினர் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
அப்பதிவில், “நாங்க சிங்கப்பூர் சிட்டிசன் அதனால் தான் என் மகன் அங்கப் படிக்கிறான்! உண்மையை உளறிய கனிமொழி!” என்று குறிப்பிடப்பட்டு, கனிமொழி நேர்காணலில் பேசியிருப்பது போன்றப் புகைப்படத்துடன் பகிரப்படுகின்றன. இதை தமிழ்நாடு பாஜகவின் செயற்குழு உறுப்பினர் சௌதாமணியும் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர் இந்தியாவில் எப்படி MP பதவி வகிக்கலாம் ?
உபி ஸ்….என்னடா இதெல்லாம்??? pic.twitter.com/KmQ5mvXJAv
— UmaGargi (@Umagarghi26) April 20, 2023
சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர் இந்தியாவில் எப்படி MP பதவி வகிக்கலாம் ?
உபி ஸ்….என்னடா இதெல்லாம்??? pic.twitter.com/4SaWRVBEkQ
— Senthilpandian K (@SenthilpandianK) April 20, 2023
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்கையில், 2023 ஏப்ரல் 14ம் தேதி DESAM NEWS எனும் யூடியூப் சேனலில் கனிமொழி குறித்த வீடியோவை பதிவிட்டு உள்ளனர். அதில், எம்.பி கனிமொழி இந்தியா டுடேவிற்கு அளித்த பேட்டி இடம்பெற்று இருக்கிறது.
அதுகுறித்து தேடுகையில், 2021 மே 12-ம் தேதிஅன்று கனிமொழி எம்.பி “இந்தியா டுடே” ஊடகத்திற்கு 2021 சட்டசபை தேர்தலுக்காக கொடுத்த பிரத்யேக நேர்காணல் வீடியோ அதன் யூடியூப் பக்கத்தில் கிடைத்தது.
அதில் ஊடகவியலார் ராகுல் கன்வால், கனிமொழியை நோக்கி “உங்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். தி.மு.க.வின் திறமையான தலைவராக அவர் வருவார் என்று நினைக்கிறீர்களா?” என்ற கேள்விக்கு, “என் கணவர் ஒரு சிங்கப்பூர் குடிமகன். என் மகனும் சிங்கப்பூர் குடிமகன் தான். என்னுடைய மகனின் குடியுரிமையை மாற்றும் எண்ணம் எனக்கு இல்லை. இப்போது அவர் 18 வயதைக் கடந்தவர் வேறு, எனவே இது அவர் விருப்பம். மேலும் அவர் அரசியலுக்கு வருவார் என்று நான் நினைக்கவில்லை.” என்று பதிலளித்து இருப்பார். இதன் மூலம் கனிமொழி சிங்கப்பூர் குடியுரிமை பெறவில்லை, அவரின் கணவர் மற்றும் மகன் மட்டுமே அங்கு குடியுரிமைப் பெற்றுள்ளனர் என்பதை அறிய முடிந்தது.
வெளிநாட்டு குடியுரிமைப் பெற்ற ஒருவர் இந்திய மக்களவை உறுப்பினராக பதவி வகிக்க முடியுமா ?
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி, இந்தியக் குடியுரிமையைப் பெற்ற ஒருவர், ஒரே நேரத்தில் வெளிநாட்டு குடியுரிமையையும் கொண்டிருப்பதை நமது சட்டம் அனுமதிப்பதில்லை. இதனை இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இணையத்திலிருந்து அறியலாம்.
மேலும் இந்திய தேர்தல் ஆணையம் தன்னுடைய இணையதளத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது: “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 84 (a) பிரிவின் படி, ஒரு நபர் இந்தியக் குடிமகனாக இல்லாவிட்டால், நாடாளுமன்றத்தில் ஒரு இடத்தை நிரப்ப தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தகுதியானவராக இருக்கமாட்டார் என்று கருதப்படுகிறது. அரசியலமைப்பின் பிரிவு 173 (a) இன் படி மாநில சட்டப் பேரவைகளுக்கும் இதே போன்றே விதி உள்ளது.
மாநிலங்களவையில் கனிமொழியின் பதவிகாலம் முடிவடைந்த பின்பு, 2019-இல் நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்றார். இதன் மூலம் மேலே குறிப்பிட்ட இந்திய தேர்தல் ஆணைய விதிகளின் படியே தன்னை வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து வெற்றி பெற்றுள்ளார். எனவே கனிமொழி இந்தியக் குடியுரிமையுடன் தான் உள்ளார் என்பதையும், சிங்கப்பூர் குடியுரிமையைப் பெறவில்லை என்பதையும் உறுதிபடுத்த முடிகிறது.
மேலும் படிக்க: 30,000 கோடி நஷ்டம் வரும் என்பதால் நாங்கள் டாஸ்மாக்கை மூட மாட்டோம் எனக் கனிமொழி கூறினாரா ?
மேலும் படிக்க: எம்.பி கனிமொழி கூறிய உண்மையான தகவலை பொய் என்ற பாஜகவின் சூர்யா !
இதற்கு முன்பாக, கனிமொழி தொடர்பாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட பதிவுகள் குறித்தும் பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறோம்.
மேலும் படிக்க: திமுக ஆட்சி வந்த உடன் சபரிமலைக்கு செல்வேன் என கனிமொழி கூறினாரா ?
முடிவு:
நம் தேடலில், திமுக எம்.பி கனிமொழி சிங்கப்பூர் குடியுரிமைப் பெற்றவர் என பாஜகவினரால் சமுக வலைதளங்களில் பரப்பப்படும் பதிவுகள் தவறானவை. கனிமொழி சிங்கப்பூர் குடியுரிமைப் பெற்றவர் அல்ல, அவருடைய கணவர் மற்றும் மகன் மட்டுமே சிங்கப்பூர் குடியுரிமைப் பெற்றவர்கள் என்பதை அறிய முடிகிறது.