கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கும் திமுகவிற்கும் சம்பந்தம் இல்லை என பாஜகவினர் பரப்பும் பொய் !

பரவிய செய்தி
கன்னியாகுமரியில் வானுயர திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும் என முடிவெடுத்து 15.04.1979 அடிக்கல் நாட்டியது எம்ஜிஆர். பின்னர் வழக்கம் போல் ஸ்டிக்கர் ஒட்டி கொண்டர் இன்னொருவர்
மதிப்பீடு
விளக்கம்
உலகப் பொதுமறையாகக் கருதப்படும் திருக்குறளை எழுதிய திருவள்ளுவருக்குக் கன்னியாகுமரியில் 133 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். தான் வள்ளுவருக்கு அமைக்க வேண்டும் என முடிவெடுத்து அடிக்கல் நாட்டினார். பின்னர் இதனை திமுக செய்ததாக ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது என பாஜக சிந்தனையாளர் பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
திருவள்ளூர் சிலைக்கு அச்சாரம் போட்டது அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் தமிழக முதல்வர் எம்ஜிஆர் கவர்னர் பிரபு தாஸ் பட்வாரி வருடம் 1979
என்னவோ கருணாநிதி திட்டம் மாதிரி இவ்வளவு நாள் 🔥 விட்டுட்டு இருந்துருக்கானுங்க அவங்க பிளான் இவரு வெறும் மேஸ்திரி தான் pic.twitter.com/NK7KAnq61M
— 🇮🇳 கட்டெறும்பு 🚩🛕 (@Kattaerumbu_bjp) May 30, 2023
மேலும் அவர் பதிவிட்டுள்ள விகடன் கட்டுரை 2013, ஜனவரி 15ம் தேதி அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பேசியது தொடர்பாக வெளியான செய்தியாகும். அதில், “கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை ஒன்றினை நிறுவ முடிவெடுத்து, எம்.ஜி.ஆர். முன்னிலையில் அப்போதைய இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாயால், 15.4.1979 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர், பாறையின் தன்மை போன்ற பல்வேறு அம்சங்களை விரிவாக ஆராய்ந்து ஓர் அறிக்கையினை சமர்ப்பிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டதும் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில்தான்” என்றுள்ளது.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதற்கும் திமுகவிற்கும் தொடர்பே இல்லை pic.twitter.com/HDX8S7w2Ud
— BUSHINDIA (@BUSHINDIA) June 1, 2020
மேலும், திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதற்கும் திமுகவிற்கும் சம்பந்தம் இல்லை எனப் பல பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் உள்ள படத்தில், 15.04.1979 அன்று இந்தியத் தலைமை அமைச்சர் (பிரதமர்) மொரார்ஜி தேசாய் திருவள்ளுவர் சிலை அமைப்பதற்காகவும், தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் திருவள்ளுவர் நினைவாலயம் அமைப்பதற்காகவும் அடிக்கல் நாட்ட உள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன ?
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எப்போது, யார் ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பது குறித்த தகவல்களைத் தேடினோம்.
இது தொடர்பாக ‘தி இந்து’ ஆங்கில இணையதளத்தில் 2010ம் ஆண்டு கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்குச் சிலை நிறுவும் யோசனை கலைஞரின் முதல் பதவிக்காலத்தின் இறுதிக்கட்டத்தில் முன்வைக்கப்பட்டது. அதன்படி, 1975, டிசம்பர் 31ம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குமரி முனையில் சிலை
முரசொலி 1-1-1976 https://t.co/UDfOHnOBU8 pic.twitter.com/xDf3zR1j6m
— மகிழ்நன் பாம (@Makizh_nan) June 2, 2023
அத்தீர்மானம் தொடர்பாக 1976, ஜனவரி 1ம் தேதி முரசொலி நாளிதழில், “பத்து லட்சம் ரூபாய் செலவில் முக்கடல் கூடும் குமரி முனையில் வள்ளுவர் சிலை” என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதிலும், “கன்னியாகுமரி முனையில் விவேகானந்தர் பாறைக்கு எதிரே உள்ள மற்றொரு பாறையில் 105 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை 10 லட்ச ரூபாய் செலவில் அரசின் சார்பில் வைக்கப்பட அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றுள்ளது.
ஆனால், இம்முடிவு செய்யப்பட்ட சில நாட்களில் திமுக அரசு கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதற்குப் பிறகு 1977ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். முதலமைச்சரானார்.
அதன் தொடர்ச்சியாக 1979ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கான அடிக்கல் நடும் விழாவில் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் கலந்து கொண்டார். அந்த அறிவிப்பினைதான் தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
அதன் பிறகு 1989ம் ஆண்டு கலைஞர் மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவி ஏற்றதும், வி.கணபதி என்பவரின் தலைமையில் வள்ளுவர் சிலை செதுக்கும் பணி (1990) தொடங்கப்பட்டது என தி இந்துவில் வெளியான வேறொரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிறகு மீண்டும் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு, 1991ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா முதலமைச்சரானார்.
மீண்டும் 1996 முதல் 2001ம் ஆண்டு வரை கலைஞரின் ஆட்சி நடந்தது. அந்த ஆட்சிக் காலத்தில் 1998-99ம் ஆண்டு நிதி அறிக்கை குறித்த உரையில் திருவள்ளுவர் சிலை தொடர்பான அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது.
அதில், திருவள்ளுவரின் நினைவாக மாநிலத்தின் தலைநகரில் ‘வள்ளுவர் கோட்டம்’ கட்டிய இந்த அரசு, 1975ம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் திருவள்ளுவர் சிலையை நிறுவ முடிவு செய்தது. பல்வேறு பின்னடைவுகளைத் தாண்டி 1990ம் ஆண்டு கட்டுமானப் பணிகளைத் தொடங்கும் விழா இந்த அரசால் நடத்தப்பட்டது. இப்பணிகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து 1999, டிசம்பர் 31 மற்றும் 2000, ஜனவரி 1 என இரண்டு நாள் விழாவாக வள்ளுவர் சிலை திறப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது. வள்ளுவர் சிலை குறித்து ‘நியூஸ் 7 தமிழ்’ வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் இச்சிலை அமைப்பதற்காக யார் யார் என்னென்ன செய்துள்ளனர் என்பதைக் குறிப்பிடும் கல்வெட்டு ஒன்று காண்பிக்கப்படுகிறது. இது கன்னியாகுமரி வள்ளுவர் சிலை அமைந்துள்ள இடத்தில் உள்ளது.
அக்கல்வெட்டில், “குமரி முனையில் வள்ளுவர் சிலை 1975ல் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் அமைச்சரவையில் முடிவெடுத்து அறிவித்தது. 1979ல் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் தலைமையில் பிரதமர் மொரார்ஜி தேசாய் அடிக்கல் நாட்டினார். பின்னர் 10 ஆண்டுகளுக்குப் பிறகு 1989ல் முதலமைச்சர் கலைஞர் வள்ளுவர் சிலைகளுக்கான பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். பின்னர் 7 ஆண்டுகளுக்குப் பிறகு கலைஞர் முதல்வரானதும் வள்ளுவர் சிலை வடிக்கும் பணி மீண்டும் தொடக்கம். நிறைவாக 31.12.1999, 1.1.2000 ஆகிய நாட்களில் வானுயர வள்ளுவர் சிலை திறப்பு விழா. முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி 1.1.2000 அன்று சிலையை திறந்து வைத்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த வீடியோவில் சிலை அமைப்பதற்கான பாறையின் தன்மை குறித்து ஆய்வு செய்ய 1981ம் ஆண்டு எம்.ஜி.ஆர். குழு ஒன்றை அமைத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
1975ம் ஆண்டு வள்ளுவர் சிலை அமைக்க அமைச்சரவை முடிவு செய்ததில் இருந்து 1996ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 2 ஆண்டுகள் மட்டுமே திமுக ஆட்சியிலிருந்துள்ளது. அதிகப்படியான காலம் ஆட்சியிலிருந்த அதிமுக சிலையைக் கட்டி முடிக்கவில்லை. மீண்டும் 1996ம் ஆண்டு கலைஞர் ஆட்சி பொறுப்பேற்றதும் சிலைக்கான பணிகள் தொடங்கப்பட்டு, 2000ல் சிலை திறக்கப்பட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்க எம்.ஜி.ஆர். ஆட்சியின் போது 1979ம் ஆண்டு அடிக்கல் நடப்பட்டது என்பது உண்மைதான். ஆனால், அதற்கான தீர்மானத்தை 1975ம் ஆண்டு கலைஞரின் அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சிலை வடிப்பதற்கான பணியும் கலைஞர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அதே போல் சிலைக்கான பணிகள் முடிவடைந்து, அதனைத் திறந்ததும் கலைஞரின் ஆட்சிக் காலத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சிலை திறப்பின் போது வைக்கப்பட்ட கல்வெட்டிலும் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது அடிக்கல் நடப்பட்டது என்பதையும் சேர்த்துத்தான் பதிவு செய்துள்ளனர் என்பதையும் காண முடிகிறது.