காரைக்காலில் நடந்த கொலையை தமிழ்நாடு எனப் பொய் செய்தி பரப்பும் இந்து மக்கள் கட்சி

பரவிய செய்தி

தமிழ்நாட்டில் தன் மகளுடன் படிக்கும் சக மாணவன் அதிக மதிப்பெண் எடுத்த காரணத்திற்காக, மாணவியின் தாய் அந்த மாணவனுக்கு விஷம் கொடுத்துள்ளார். அச்சிறுவன் தற்போது இறந்துவிட்டான். திராவிட சித்தாந்தம் தமிழ்நாட்டினை அழுகிய நிலைக்கு கொண்டுவந்துள்ளது வேதனை அளிக்கிறது.

Twitter link 

மதிப்பீடு

விளக்கம்

இந்து மக்கள் கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் கடந்த செப்டம்பர் 4ம் தேதி, தமிழ்நாட்டில் ஒரு மாணவியின் தாயார் தன் மகளுடன் படிக்கும் சக மாணவன், தன் மகளை காட்டிலும் அதிக மதிப்பெண் எடுத்த காரணத்திற்காக, அம்மாணவனுக்கு விஷம் கொடுத்துள்ளார். அச்சிறுவன் தற்போது உயிருடன் இல்லை. திராவிட சித்தாந்தம் தமிழ்நாட்டினை அழுகிய நிலைக்கு கொண்டுவந்துள்ளது வேதனை அளிக்கிறது என டிவிட் செய்யப்பட்டுள்ளது. 

உண்மை என்ன ?

இச்சம்பவம் குறித்து இணையத்தில் தேடியபோது காரைக்காலில் நிகழ்ந்ததாக அறிய முடிகிறது. காரைக்கால் புதுச்சேரி யூனியன் பிரதேச பிராந்தியத்தை சேர்ந்தது.

புதுச்சேரி யூனியன் பிரதேச பிராந்தியங்களில் ஒன்றான காரைக்காலில் வசிக்கும் ராஜேந்திரன் – மாலதி என்பவர்களின் மகன் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறார். அதே பள்ளியில் பயிலும் மாணவி ஒருவரின் தாயார், தனது மகளைவிட அந்த மாணவன் அதிக மதிப்பெண் எடுத்ததற்காக கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

புதுச்சேரியில் 2021, மே மாதம் 7ம் தேதி என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆட்சி அமைத்தது. என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி முதலமைச்சராக உள்ளார். கூட்டணி கட்சியான பாஜகவை சேர்ந்த நமச்சிவாயம் மற்றும் சாய் ஜெ சரவணன் குமார் ஆகியோர் அமைச்சர்களாவும் உள்ளனர். 

புதுச்சேரி யூனியன் பிரதேசம் துணை நிலை ஆளுநரால் நிர்வகிக்கப்படுகிறது. மாநிலத்திலுள்ள ஆளுநரை காட்டிலும் யூனியன் பிரதேசத்திலுள்ள துணைநிலை ஆளுநர் கூடுதல் அதிகாரங்கள் கொண்டவராவார். புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். இதற்கு முன்னதாக இவர் தமிழ்நாடு பாஜகவின் மாநில தலைவராக இருந்துள்ளார்.

ஆக, பாஜக கூட்டணி ஆளும் புதுச்சேரியில் நிகழ்ந்த ஒன்றை தமிழ்நாடு எனவும், அதை திராவிட சித்தாந்தம் எனவும் அவதூறு பரப்பி வருகிறார்கள். இந்து முன்னணி கட்சி தொடர்ந்து இம்மாதிரியான பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது.

முடிவு 

நம் தேடலில், இந்து முன்னணி கட்சி டிவிட்டரில் பதிவிட்ட கொலை சம்பவம் தமிழ்நாட்டில் நிகழ்ந்தது அல்ல. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சார்ந்த காரைக்கால் என்பது அறிய வருகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader