கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி என பிபிசி கருத்துக் கணிப்பு வெளியிட்டதாகப் பரப்பப்படும் போலிச் செய்தி !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வருகின்ற மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் போட்டியிட்டாலும், பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையேயான மும்முனை போட்டியாகவே தேர்தல் பார்க்கப்படுகிறது.
அம்மாநிலத்தில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள பாஜக, தங்களின் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் செயல்படுகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பணியாற்றி வருகின்றன.
*BBC Survey: BJP will return to power in Karnataka with massive majority, Surveys say Rulling Party will win 140+ seats in Karnataka polls*https://t.co/ZfaLkZ2unn
*Congress leaders have a war to fight among themselves before the battle with BJP— K.S.Sukumaranji (@Ksukumaran7) April 23, 2023
இந்நிலையில் கர்நாடகா தேர்தல் குறித்து பிபிசி நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பு பாஜகவிற்குச் சாதகமாக இருப்பதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பாஜக ஆதரவாளர்களால் பரப்பப்பட்டு வருகிறது. அதில், கர்நாடகா மாநிலத்தில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பாஜக 140 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெரும் என்று கூறியிருப்பதாகப் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
சமூக வலைத்தளங்களில் பரவக் கூடிய பதிவில் உள்ள லிங்கினை கிளிக் செய்து பார்க்கையில், அது பிபிசி இந்தி இணையதளத்தின் முகப்பு பக்கத்திற்கு அழைத்து செல்கிறது. அப்பக்கத்தில் கர்நாடக தேர்தல் குறித்து எந்த கருத்துக் கணிப்பும் இடம்பெறவில்லை.
மேற்கொண்டு இக்கருத்துக் கணிப்பு குறித்துத் தேடியதில், 2018ம் ஆண்டு கர்நாடகா சட்டமன்றத் தேர்தலின் போது பிபிசியின் பெயரைப் பயன்படுத்தி இதே போன்று பரப்பப்பட்ட செய்தி குறித்த தகவல் கிடைத்தது. அது பற்றி ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’, ‘தி குயின்ட்’, ‘தி வயர்’ எனப் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
A fake survey on Karnataka polls has been circulating on Whats App and claims to be from BBC News. We'd like to make absolutely clear that it's a #fake and does not come from the BBC. The BBC does not commission pre-election surveys in India. #fakenews
— BBC News India (@BBCIndia) May 7, 2018
மேலும் இது குறித்து பிபிசி தங்களது டிவிட்டர் பக்கத்திலும் 2018ம் ஆண்டு மே மாதம் மறுப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளது. அதில், கர்நாடக தேர்தல் குறித்து பிபிசி வெளியிட்டதாக ஒரு போலியான கருத்துக் கணிப்பு வாட்ஸ் ஆப்பில் பரவி வருகிறது. பிபிசி தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை இந்தியாவில் நடத்துவதில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
This fake survey on Karnataka polls has been circulating on Whats App and claims to be from BBC News. We'd like to make it absolutely clear that it is #fake and does not come from the BBC. The BBC does not commission pre-election surveys in India. #fakenews pic.twitter.com/67MQ8VWWFB
— BBC News Press Team (@BBCNewsPR) May 7, 2018
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை பிபிசி இந்தியாவில் வெளியிடுவதில்லை எனக் கூறியதிலிருந்து, கர்நாடகா தேர்தல் குறித்துப் பரவக்கூடிய தகவல் போலியானது என அறிய முடிகிறது.
மேலும் படிக்க : அதிமுக கூட்டணி முந்துவதாக வெளியான போலி கருத்துக் கணிப்பு.. மறுத்த டெமாக்ரசி டைம்ஸ் நெட்வொர்க் !
இதே போன்று 2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக பரவிய போலி கருத்துக் கணிப்புகள் குறித்து யூடர்ன் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க : நல்லாட்சி வழங்கிய அரசு அதிமுக என பரப்பப்படும் பழைய கருத்துக் கணிப்பு !
முடிவு :
நம் தேடலில், கர்நாடகா தேர்தல் குறித்து பிபிசி வெளியிட்டதாகப் பரவும் கருத்துக் கணிப்பு உண்மை அல்ல. இந்தியாவில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு எதையும் பிபிசி நடத்துவதில்லை என பிபிசி தரப்பில் 2018ம் ஆண்டே தெரிவிக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.