This article is from Apr 12, 2019

20 ஆண்டுகளில் கர்நாடகாவில் விவசாய நிலங்கள் அதிகரிப்பா ?

பரவிய செய்தி

கர்நாடகாவில் 20 வருடங்களுக்கு முன்பு 90,000 ஏக்கராக இருந்த விவசாய இடங்கள் இப்போது 26,50,000  ஏக்கராக உயர்ந்துள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

கர்நாடகாவில் 2000-ம் ஆண்டில் இருந்து 2,00,000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் தொழிற்சாலை, குடியிருப்பு பகுதிகள், உள்கட்டமைப்பு திட்டங்கள் போன்ற விவசாயம் சாராத பயன்பாட்டிற்கு மாறியுள்ளன.

விளக்கம்

தண்ணீர் பிரச்சனை, விவசாயி தற்கொலை, விவசாயம் செய்ய ஆள் பற்றாக்குறை போன்றவை தேசிய அளவிலான பிரச்சனை. அதற்கான தீர்வு நோக்கி செல்ல வேண்டிய கட்டாயத்தில் நாடே உள்ளது.

தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே தண்ணீர் பிரச்சனை தீராத ஒன்றாகவே இருக்கிறது. இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளில் கர்நாடகாவில்  விவசாய நிலப்பரப்பு பன்மடங்கு அதிகரித்து உள்ளதாக செய்திகள் தமிழில் பரவி வருகிறது.

முதலில், கர்நாடகாவில் உள்ள மொத்த விவசாய நிலங்களின் பரப்பளவு குறித்த தரவுகள் நம்மிடம் இல்லை. எனினும், கர்நாடகாவில் விவசாய பயன்பாட்டில் இருந்த நிலங்கள் பிற பயன்பாட்டிற்கு சென்ற தகவல் கிடைத்துள்ளது.

2000 ஆம் ஆண்டில் இருந்து விவசாய பயன்பாட்டில் இருந்த 2,00,000 ஹெக்டேர்  விவசாய நிலப்பரப்பு தொழிற்சாலை, குடியிருப்பு மற்றும் கட்டமைப்பு திட்டங்களின் பயன்பாட்டிற்கு மாறியுள்ளன. அதாவது, விவசாய நிலங்கள் விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்கு சென்றுள்ளது.

2000-2001 ஆம் ஆண்டில்  1.312 மில்லியன் ஹெக்டேர் அளவிற்கு விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்கு  இருந்த  மொத்த நிலங்கள் 2016-17-ல் 1.49 மில்லியன் ஹெக்டேர் அளவிற்கு  உயர்ந்துள்ளது என அம்மாநில அரசு தகவல் அளித்துள்ளது.

கர்நாடகாவில் விவசாய நிலங்கள் அதிகரிப்பு பற்றி வரும் செய்தியில் இடம்பெற்றுள்ள படமானது அம்மாநிலத்தை சேர்ந்தது அல்ல. அப்படம் எங்கு எடுக்கப்பட்டது என கூகுள் தேடலில் பார்க்கையில் இந்தோனேசியா விவசாய பகுதி என பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதை காண முடிந்தது.

மேலும், இதே படங்கள் நூற்றுக்கணக்கான இணையதளங்களில் விவசாயம் சார்ந்த புகைப்படங்கள் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அப்படத்தை இந்த செய்தியுடன் தவறாக இணைத்து உள்ளனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader