கர்நாடகாவில் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான நந்தி சிலைகள் கிடைத்தனவா ?

பரவிய செய்தி
கர்நாடக மாநிலத்தில் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான நந்தியின் சிலையை இன்று பூமியில் இருந்து கண்டெடுத்தனர். பகிருங்கள் அனைவரும் பார்த்து பரவசம் அடையட்டும்…!
மதிப்பீடு
விளக்கம்
சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தில் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான நந்தியின் சிலையை பூமியில் இருந்து கண்டெடுத்ததாக பெரிய அளவிலான இரு நந்தியின் சிலைகளை தோண்டி எடுக்கும் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
கர்நாடகாவில் தோண்டி எடுக்கப்பட்ட நந்தி சிலைகள் குறித்து தேடுகையில், ” 2019 ஜூலை 17-ம் தேதி கர்நாடகாவின் மைசூர் அருகே இரண்டு பிரம்மாண்டமான நந்தி சிலைகள் கிடைத்ததாக YOYO Kannada News எனும் யூடியூப் சேனலில் வெளியாகி இருக்கிறது.
மைசூரில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள அராசினகரே எனும் கிராமத்தில் நூற்றாண்டுகள் பழமையான நந்தி சிலைகள் கிடைத்ததாக நேரில் சென்று வீடியோ எடுத்து வெளியிட்ட யூடியூப் வீடியோக்கள் சிலவும் 2019-ல் வெளியாகி இருக்கிறது. தற்போது வைரல் செய்யப்படும் அதே பதிவும், புகைப்படங்களும் 2019-ல் வார்த்தை மாறாமல் பகிரப்பட்டு இருக்கிறது.
2019 ஜூலை 15-ம் தேதி வெளியான தி ஹிந்து ஆங்கில செய்தியில், ” தொல்பொருள், அருங்காட்சியங்கள் மற்றும் பாரம்பரியத் துறையின் அதிகாரிகள் குழு, தொல்பொருள் ஆய்வாளர் எம்.எல்.கவுடா மற்றும் பொறியாளர் சதீஷ் ஆகியோர் அந்த இடத்தை பார்வையிட்டனர். தி ஹிந்துவிடம் பேசிய திரு.கவுடா, சிலைகள் 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவையாக தோன்றுகிறது. இது விஜயநகர காலத்திற்கு பிந்தையது. அந்த காலக்கட்டத்தில் மென்மையான சோப்புக் கல்லில் செதுக்கப்பட்ட பெரும்பாலான சிற்பங்களுடன் இவை ஒத்திருப்பதாக கூறினார் ” என வெளியாகி இருக்கிறது.
மேலும், சிலைகள் ஒரே பாறையில் இருந்து செதுக்கப்பட்டுள்ளன. சிலைகள் முழுமையடையவில்லை. ஒன்று 60% நிறைவடைந்ததாகவும், மற்றொரு சுமார் 85% நிறைவடைந்ததாகவும் தெரிகிறது என தொல்பொருள் ஆய்வாளர் எம்.எல்.கவுடா கூறியதாக இடம்பெற்று இருக்கிறது.
மேலும் படிக்க : மகாராஷ்டிரா அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பல ஆயிரம் ஆண்டு பழமையான சிவலிங்கமா ?
இதேபோல், மஹாராஷ்டிரா மாநிலத்தில் கோவில் அருகே குழி தோண்டிய போது கிடைத்த 11-12ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவலிங்கத்தை அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் என தவறாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது.
முடிவு :
நம் தேடலில், கர்நாடகாவில் பெரிய அளவில் 2 நந்தி சிலைகள் பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது உண்மையே.
ஆனால், நந்தி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது சமீபத்தில் இல்லை, 2019 ஜூலை மாதம் எடுக்கப்பட்டது. மேலும், அந்த நந்தி சிலைகள் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையாவை அல்ல. தொல்பொருள் ஆய்வாளர் தகவலின்படி, அந்த சிலை16-17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.