ஆட்டோ பின்னால் ‘ இந்துக்கள் தூங்குகிறார்கள் ‘ என ஃபோட்டோஷாப் வாசகம்.. மீண்டும் பொய் பரப்பும் சரவண பிரசாத் !

பரவிய செய்தி
ஆட்டோவின் பின்னால் கன்னடத்தில் எழுதிய வாசகம் இதோ தமிழில் “ஷ் சத்தம் போடாதீர்கள்! ஹிந்துக்கள் தூங்குகிறார்கள்..
மதிப்பீடு
விளக்கம்
நடந்து முடிந்த 2023 கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு முஸ்லீம்களின் ஓட்டு தான் காரணம் என்று பெரும்பான்மையாக ஒரு கருத்து நிலவி வருவதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் தற்போது கர்நாடகாவில் சாலையில் சென்று கொண்டிருக்கும் ஒரு ஆட்டோவில் “ஷ்..!! சத்தம் போடாதீர்கள்.. இந்துக்கள் தூங்குகிறார்கள்..” என்று எழுதப்பட்டிருப்பதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பாஜகவினரால் வைரலாகப் பரப்பப்படுகிறது.
ಕಟುಸತ್ಯ pic.twitter.com/OZBwi5wsoI
— ಜಾಗೃತಿ (@jagruti0804) July 11, 2023
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய, Foto forensics இணையதளம் மூலம் பரவி வரும் புகைபடத்தில் உள்ள பிழைகளை Error Level Analysis எனப்படும் ELA முறை மூலம் ஆய்வு செய்து பார்த்தோம்.
அப்போது இந்த புகைப்படத்தில் ஆட்டோவிற்கு பின்பு எழுதப்பட்டுள்ள கன்னட எழுத்துகள் (ಶಬ್ದ ಮಾಡಬೇಡಿ..!! ಹಿಂದೂ ಮಲಗಿದ್ದಾನೆ) எடிட் செய்யப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிந்தது. மேலும் அவற்றை Google Translation மூலம் தமிழில் மொழி பெயர்ப்பு செய்து பார்த்ததில் “ஷ்..!! சத்தம் போடாதீர்கள். இந்துக்கள் தூங்குகிறார்கள்.” என்ற பதில் கிடைத்தது.
மேலும் இது குறித்து மேலும் தேடியதில், பரவி வரும் புகைப்படத்தின் உண்மையான புகைப்படத்தை depositphotos என்ற இணையதள பக்கத்தில் காண முடிந்தது. மேலும் இந்த புகைப்படம் EugeneF என்பவரால் டெல்லி சாலையில் எடுக்கப்பட்டது என்பதற்கான ஆதாரமும் கிடைத்தது. எனவே இது கர்நாடகாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல.
இதன்மூலம் உண்மையான புகைப்படத்தில் ஆட்டோவிற்கு பின்னால் எந்த வாக்கியங்களும் எழுதப்படவில்லை. அதனை எடிட் செய்து தவறாக பரப்பி வருகின்றனர் என்பதை உறுதிபடுத்த முடிந்தது.
மேலும் படிக்க: கர்நாடகாவில் பாஜக 41 இடங்களில் வெறும் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாகப் பரப்பப்படும் பொய் !
மேலும் படிக்க: கர்நாடகாவில் காங்கிரசின் முஸ்லீம் வேட்பாளருக்கு போலி வாக்கு செலுத்தி வென்றதாகப் பரப்பப்படும் வதந்தி !
முடிவு:
நம் தேடலில், “சத்தம் போடாதீர்கள்! இந்துக்கள் தூங்குகிறார்கள்” என கர்நாடகாவில் ஆட்டோவில் எழுதப்பட்டிருப்பதாகப் பரவிவரும் புகைப்படம் போலியானது என்பதையும், உண்மையான புகைப்படத்தில் எந்த வாக்கியங்களும் இடம் பெறவில்லை என்பதையும் அறிய முடிகிறது.