கர்நாடகாவில் பழமையான புத்த விகாரை மீட்டதாகத் தவறான வீடியோவைப் பதிவிட்டு நீக்கிய நீலம் பண்பாட்டு மையம்

பரவிய செய்தி

கர்நாடகாவில் மிகப் பழமையான புத்த விகாரை மீட்ட பெளத்த அம்பேத்கரிய இயக்கத்தினர்.

மதிப்பீடு

விளக்கம்

நீலம் பண்பாட்டு மையம் தனது ட்விட்டர் பக்கத்தில், “வரலாற்றை மாற்றியமைப்போம். கர்நாடகாவில் பழைய புத்த விகாரை மீட்ட பௌத்த அம்பேத்கரிய இயக்கத்தினர். கொடியுடன் ஜெய்பீம் முழக்கம்! பெருமகிழ்ச்சி” என மேற்கோள்காட்டி வீடியோ ஒன்றை பதிவிட்டனர். இதனை தொடர்ந்து இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை என்ன?

2022 செப்டம்பர் 8ம் தேதி கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளேரகாளி(Ullerahali) கிராமத்தில் பூதாயம்மா(Bhootayamma) எனும் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழா முடியும்வரை அந்த கிராமத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தினர் கோவிலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவிழாவின் பொழுது தேரோட்டம் நடைபெற்றது. அந்த சமயத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த ஷோபம்மா(Shobamma) என்பவரின் 15 வயது மகன், சாமி சிலை இருக்கும் தேரின் கம்பத்தை தொட்டுள்ளார். இதனை கண்டு ஆத்திரம் அடைந்த ஆதிக்க சமூகத்தினர், சிறுவன் தேரின் கம்பத்தை தொட்டதற்காக அந்த தலித் குடும்பத்திற்கு 60,000 ரூபாய் அபராதம் விதித்தனர். அதனை அக்டோபர் 1ம் தேதிக்குள் செலுத்தும்படி உத்தரவிட்டுள்ளார்கள். இது பெரும் அதிர்வலையையும், கண்டனத்தையும் பெற்றது.

இந்நிலையில், உள்ளேரகாளி கிராமத்தில் நடந்த சாதிய வன்முறைக்கு எதிராக பல்வேறு அம்பேத்கரிய இயக்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக அம்பேத்கரிய இயக்கத்தை சேர்ந்த ஒருவர் கோவில் கோபுரத்தின் மீதி ஏறி நீல நிறக் கொடியை(அம்பேத்கரிய இயக்க கொடி) பறக்கவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பரப்பப்பட்டு வருகிறது. புத்த விகார் என வைரல் செய்யப்படும் வீடியோவும் இதுவும் ஒன்றாக இருந்தது.

இதுகுறித்து, சமூக வலைத்தளங்களில் தேடிய பொழுது போராட்டத்தில் ஈடுபட்ட அம்பேத்கரிய இயக்கங்களும் இந்த வீடியோவை தங்களது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டு உள்ளனர். ஆனால் அதில் எங்கும் இந்த கோவில் பழமையான புத்த விகார் எனக் குறிப்பிடவில்லை. மேலும், இந்த கோவில் சித்திரன்னா எனும் கடவுளைச் சார்ந்தது எனத் தெரியவருகிறது.

Twitter link | Archive link

இதற்கிடையில், நீலம் பண்பாட்டு மையம் இந்த வீடியோ பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது. இது குறித்து அவர்களிடம் கேட்ட போது, “அது புத்த விகார் இல்லை எனவும், அதனால் அந்த பதிவை நீக்கிவிட்டோம்” என கூறினர்.

முடிவு :

நம் தேடலில், கர்நாடகாவில் மிகப் பழமையான புத்த விகாரை மீட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோவில் இருக்கும் கோவில் பழமையான புத்த விகார் இல்லை. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோவிலின் மீது நீல நிறக் கொடியை ஏற்றிய வீடியோ தவறாகப் பரப்பப்பட்டு வருகிறது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader