கர்நாடகாவில் அல்லா-ஹூ-அக்பர் என கோசமிட்ட மாணவியின் புகைப்படங்கள் எனப் பரப்பப்படும் வதந்தி !

பரவிய செய்தி

மதிப்பீடு

விளக்கம்

கர்நாடகாவில் ஹிஜாப், காவித்துண்டு விவகாரம் தலைதூக்கிய நேரத்தில் மாண்டியா பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் புர்கா அணிந்து வந்த முஸ்லீம் மாணவி ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு செல்லும் வேளையில் காவித்துண்டு அணிந்து கொண்டு ” ஜெய் ஸ்ரீராம்” எனக் கோசமிட்டுக் கொண்டு இருந்த சில ஆண் மாணவர்களை பார்த்து ” அல்லா-ஹூ-அக்பர் ” என குரல் எழுப்பி கையை உயர்த்தி சென்றார். இந்த வீடியோ இந்திய அளவில் வைரலாகியது.

இந்நிலையில், அல்லா-ஹூ-அக்பர் என கோசமிட்ட பெண் கல்லூரிக்கு மட்டும் புர்கா அணிந்து வருவதாகவும், வெளியே செல்லும் போது புர்கா அணியாமல்  ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்து மாடர்னாக இருப்பதாகவும் சில புகைப்படங்கள் பரப்பப்பட்டு வருகிறது. மேலும், அந்த பெண் மாணவியே அல்ல, நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் பிற அரசியல் கட்சிகளுடன் இருப்பதாக சில புகைப்படங்களும் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

கர்நாடகாவில் அல்லா-ஹூ-அக்பர் என கோஷமிட்டு வைரலான முஸ்லீம் மாணவியின் பெயர் முஸ்கான் என செய்திகளில் வெளியாகின. வைரலான மாணவி பிப்ரவரி 9-ம் தேதி NDTV செய்திக்கு பேட்டி அளித்த போதும் முஸ்கான் என இடம்பெற்று இருக்கிறது.

வைரல் செய்யப்படும் புகைப்படம் குறித்து தேடுகையில், முதலில் உள்ள ஜீன்ஸ் அணிந்து இருக்கும் பெண் முஸ்கான் அல்ல, அவர் கர்நாடகாவைச் சேர்ந்த நஜ்மா நஷீர். அவரின் முகநூல் பக்கத்தில் பதிவான மற்றொரு புகைப்படத்துடன் வைரலான புகைப்படத்தில் இருக்கும் பெண் ஒத்து போவதை பார்க்க முடிந்தது.

நஜ்மா நஷீர் கல்லூரி மாணவி அல்ல, கர்நாடகாவின் ஜனதா தளம்(மதசார்பற்ற) கட்சியைச் சேர்ந்தவர். அவரது முகநூல் பக்கத்தில் இருந்து பழைய புகைப்படங்களையும், டிபி-யில் உள்ள புகைப்படத்தையும் எடுத்து வைரலான முஸ்லீம் மாணவி முஸ்கான் என வதந்தியைப் பரப்பி வருகிறார்கள்.

அடுத்ததாக, ஜீன்ஸ், டி-சர்ட் என மாடர்ன் உடையில் இருக்கும் பெண் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் மாடல் தான்யா ஜேனா என்ற பெண்ணின் புகைப்படத்தில் நஜ்மா நசீர் முகத்தை எடிட் செய்து தவறாக பரப்பி வருகின்றனர் என அறிய முடிந்தது.

முடிவு : 

நம் தேடலில், கர்நாடகாவில் காவித்துண்டு அணிந்த மாணவர்கள் ஜெய்ஸ்ரீராம் எனக் கோசமிட்ட போது அல்லா-ஹூ-அக்பர் என கோசமிட்டு  வைரலான முஸ்லீம் மாணவி எனப் பரப்பப்படும் புகைப்படங்கள் தவறானவை மற்றும் எடிட் செய்யப்பட்டவை.

வைரலான முஸ்லீம் மாணவி பெயர் முஸ்கான், வைரல் செய்யப்படும் புகைப்படங்களில் இருப்பது ஜனதா தளம்(மதசார்பற்ற) கட்சியைச் சேர்ந்த நஜ்மா நசீர். தவறான மற்றும் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களை வைத்து இந்திய அளவில் அப்பெண் குறித்து வதந்தியை பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button