This article is from Feb 21, 2022

கர்நாடகா புர்கா போராட்டத்தில் பெண்களின் உடை அணிந்த 40% ஆண்களை காவல்துறை கைது செய்ததா?

பரவிய செய்தி

புர்கா போராளிகளை கைது செய்யத் தொடங்கியுள்ள கர்நாடக காவல்துறை, ஆச்சரியப்படும் வகையில் 40 சதவீத ஆண்கள், பெண்கள் உடையில் உள்ளனர்.

Facebook link 

மதிப்பீடு

விளக்கம்

பள்ளி, கல்லூரிகளில் புர்கா அணிய தடை விதிக்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை கர்நாடகா காவல்துறை கைது செய்யும் போது 40% பேர் பெண்களின் உடைகளை அணிந்து பங்கேற்றதாக ஓர் வீடியோ இந்திய அளவில் வைரலாகி வருகிறது. ஆண்கள் புர்கா அணிந்திருந்தார்களா என்ற கேள்வி உடன் அந்த வீடியோவை இந்து மக்கள் கட்சியும் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது.

Archive link 

கர்நாடகா காவல்துறை கைது செய்தவர்களில் பர்தா அணிந்த ஆண்கள் இருந்ததாக மற்றொரு வீடியோவும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?  

கர்நாடகா புர்கா போராட்டம் என வைரல் செய்யப்படும் வீடியோ தொடர்பாக கீ வார்த்தைகளை கொண்டுத் தேடுகையில், அந்த வீடியோவானது 2021 செப்டம்பர் மாதம் பெங்களூரில் தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது காவல்துறை தடியடி செய்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் போது எடுக்கப்பட்டது.

2021 செப்டம்பர் 15-ம் தேதி SahilOnline TV news எனும் சேனலில், போராட்டத்தில் மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதாக வெளியிட்ட வீடியோவில் 2 வது நிமிடத்தில் இருந்து வைரல் செய்யப்படும் காட்சி இடம்பெற்றுள்ளதை பார்க்கலாம்.

” பெங்களூரில் தேசியக் கல்விக் கொள்கையை(NEP) அமல்படுத்துவதற்கு எதிரான போராட்டத்தில் சுமார் 400 மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் பங்கேற்றனர். தடை உத்தரவை மீறி விதான் சவுதா பகுதிக்குள் நுழைய முயன்ற போது காவல்துறை தடியடி நடத்தியதால் போராட்டக்காரர்கள் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் ” என 2021 செப்டம்பர் 15-ம் தேதி டெக்கான் ஹெரால்டு செய்தியில் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க : கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து போலீஸ் மீது கல் வீசிய பாஜகவினர் கைதான வீடியோவா ? 

இதேபோல், பர்தா அணிந்த நபரை காவல்துறை பிடித்ததாக பரவும் மற்றொரு வீடியோவும் தவறானது. அது 2020-ல் ஆந்திராவில் மதுபாட்டில்களை கடத்திய நபரை பிடித்த போது எடுக்கப்பட்டது.

முடிவு : 

நம் தேடலில், கர்நாடகாவில் காவல்துறை புர்கா போராட்டக்காரர்களை கைது செய்யத் தொடங்கிய போது போராட்டத்தில் 40 சதவீத ஆண்கள், பெண்கள் உடையில் இருந்ததாக பரப்பப்படும் வீடியோ தவறானது. அந்த வீடியோ 2021-ல் பெங்களூரில் தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராக ஆண்கள், பெண்கள் என மாணவர்கள் பலர் போராடிய போது எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader