பாஜக 4ம் இடம் பிடித்த சல்லகெரே தொகுதி கர்நாடகாவில் இல்லையா ? அதற்கு அண்ணாமலை பொறுப்பாளரா ?

பரவிய செய்தி
கர்நாடகாவில் சல்லகெரே என்ற தொகுதியே இல்லை. – ஆர்மி ஆஃப் தீரன் அண்ணாமலை
மதிப்பீடு
விளக்கம்
கடந்த 10ம் தேதி கர்நாடகா சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று (மே,13ம் தேதி) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டியாகப் பார்க்கப்பட்ட இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று உள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவர் @annamalai_k பொறுப்பில் விடப்பட்ட சல்லகெரே சட்டப்பேரவை தொகுதியில் பாஜக நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது pic.twitter.com/ZySfRLRhIQ
— Surya Born To Win (@Surya_BornToWin) May 13, 2023
இந்நிலையில் திமுக ஆதரவாளர் சூர்யா என்பவர் சன் நியூசில் வந்த செய்தி ஒன்றின் புகைப்படத்தினை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்படத்தில், “சல்லகெரே சட்டப்பேரவை தொகுதியில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது பாஜக” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அதில் அண்ணாமலை பொறுப்பில் விடப்பட்ட சல்லகெரே சட்டப்பேரவை தொகுதியில் பாஜக 4வது இடத்திற்குத் தள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனையே அதிமுகவினரும் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு பாஜக தலைவர் @annamalai_k பொறுப்பில் விடப்பட்ட சல்லகெரே சட்டப்பேரவை தொகுதியில் பாஜக நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது pic.twitter.com/WJHLSzwvoc
— Vinayak Elango (@Vinayak14188891) May 13, 2023
‘ஆர்மி ஆஃப் தீரன் அண்ணாமலை’ என்னும் டிவிட்டர் பக்கம் இதற்கு மறுப்பு தெரிவித்து, கர்நாடகாவில் சல்லகெரே என்ற தொகுதியே இல்லை எனக் கூறியுள்ளனர்.
பொய்யான தகவல்களை பரப்பும் திமுக! திமுகவின் அழிவு எங்கள் அண்ணாமலை அண்ணா கையில் தான்! அந்த பயத்தில் கதறுகிறார்கள். pic.twitter.com/67ZI3zNdyW
— Army of Dheeran Annamalai (@annamalai_chap2) May 13, 2023
உண்மை என்ன ?
சல்லகெரே என்னும் சட்டமன்றத் தொகுதி கர்நாடகாவில் உள்ளதா? என்பது குறித்துத் தேடினோம். சித்ரதுர்கா என்னும் மாவட்டத்தில் மொத்தம் 6 தொகுதிகள் உள்ளன. அதில் சல்லகெரே என்ற தொகுதியும் ஒன்று என்பதைக் கர்நாடக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் அறிய முடிந்தது.
மேற்கொண்டு அத்தொகுதியில் பதிவான வாக்குகள் குறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் தேடினோம். அத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரகுமூர்த்தி என்பவர் 67,952 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அவரை தொடர்ந்து மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த ரவிஷ் குமார் 51,502 வாக்குகளுடன் இரண்டாமிடமும், மூன்றாவதாக சுயேச்சை வேட்பாளர் கே.டி.குமார் சாமி என்பவர் 29,148 வாக்குகளும், அவரை தொடர்ந்து நான்காவதாக பாஜக வேட்பாளர் அணில் குமார் 22,894 வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பதை காண முடிந்தது.
இவற்றிலிருந்து சல்லகெரே என்னும் சட்டமன்றத் தொகுதி கர்நாடக மாநிலத்தில் இருப்பதும், அதில் பதிவான வாக்கு எண்ணிக்கையில் பாஜக 4வது இடத்தில் இருப்பதும் உண்மை என்பதை அறிய முடிகிறது.
சல்லகெரே அண்ணாமலைக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியா ?
கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக சார்பில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பாளராகவும், ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் இணை பொறுப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்துதான் சல்லகெரே சட்டமன்றத் தொகுதி அண்ணாமலையின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டதாகப் பரப்பி வருகின்றனர். இது குறித்து இணையத்தில் தேடியதில், ‘தினமலர்’ 2023, ஏப்ரல் 18ம் தேதி “கர்நாடக சட்டசபை தேர்தலில், 86 தொகுதிகளின் பொறுப்பு அண்ணாமலையிடம் ஒப்படைப்பு” என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “பெங்களூரு (28), உத்தர கன்னடா (6), தாவணகெரே (7), ஷிவமொகா (7), உடுப்பி (5), சிக்கமகளூரு (5), கோலார் (6), மாண்டியா (7), ஹாசன் (7), தட்சிண கன்னடா (8) ஆகிய 10 மாவட்டங்களின் 86 தொகுதிகள் அண்ணாமலையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், 2023, ஏப்ரல் 29ம் தேதி சாணக்கியா யூடியூப் பக்கத்தில் “Operation 86 சாதிப்பாரா Annamalai” என்ற தலைப்பில் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அதிலும் அண்ணாமலையிடம் 10 மாவட்டங்களிலுள்ள 86 தொகுதிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.
அந்த 10 மாவட்டத்தில் சல்லகெரே சட்டமன்றத் தொகுதியுள்ள சித்ரதுர்கா என்னும் மாவட்டம் இடம்பெறவில்லை. ஆனால், அண்ணாமலைக்கு 86 தொகுதிகள் ஒப்படைக்கப்பட்டதாக பாஜகவின் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
மேலும் படிக்க : கர்நாடகாவில் அண்ணாமலை பிரச்சாரம் செய்த பூத்தில் 10 ஓட்டு மட்டும் விழுந்ததாகப் பரவும் போலி நியூஸ் கார்டு!
இதேபோல் அண்ணாமலை பிரச்சாரம் செய்த உத்தர கன்னடா மாவட்டம், கிட்டூர் தொகுதியின் ஒரு பூத்தில் பாஜகவிற்கு வெறும் 10 ஓட்டுகள் மட்டுமே பதிவாகியதாக ஒரு போலி நியூஸ் கார்டு பரவியது. அதன் உண்மைத் தன்மை குறித்தும் யூடர்ன் கட்டுரை வெளியிட்டுள்ளது. எனினும், இந்த தொகுதியும் கர்நாடகாவில் இல்லை என அண்ணாமலை ஆர்மி பக்கத்தில் தவறாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
முடிவு :
நம் தேடலில், சல்லகெரே என்ற தொகுதி கர்நாடகாவில் இல்லை என அண்ணாமலை ஆர்மி குறிப்பிட்டிருப்பது பொய். சித்ரதுர்கா என்னும் மாவட்டத்தில் அத்தொகுதி இடம்பெற்றுள்ளது. அந்த தொகுதியில் பாஜக 4ம் இடத்தையே பிடித்து உள்ளது.
அதேபோல், அண்ணாமலைக்கு ஒதுக்கப்பட்டதாக வெளியான 10 மாவட்டங்களில் சல்லகெரே தொகுதி இடம்பெறவில்லை என்பதையும் அறிய முடிகிறது.