கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதால் பாகிஸ்தான் கொடியை ஏற்றியதாகப் பரப்பப்படும் வதந்தி !

பரவிய செய்தி
இந்தியாவில் இருந்து இந்தியாவின் சோற்றை தின்னும் இந்த நாய்கள் பாகிஸ்தானுக்கு வாலாட்டுது.. கேவலமான ஜென்மங்கள்..
மதிப்பீடு
விளக்கம்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்து முடிந்த கர்நாடகா தேர்தலின் வாக்குகள் கடந்த 13ம் தேதி எண்ணப்பட்டது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 224 தொகுதியில் 113 இடங்களில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. இதற்கு முன்னர் ஆளும் கட்சியாக இருந்த பாஜக 66 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களிலும், சுயேச்சை மற்றும் இதர கட்சிகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றன.
இந்நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியைக் கொண்டாடுபவர்கள் பாகிஸ்தான் கொடியை ஏற்றியதாக பாஜக கட்சியினர் புகைப்படம் மற்றும் வீடியோவினை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
மங்களூரில் வந்தேறி இஸ்லாமிய மதவெறி கும்பல் பாகிஸ்தான் கொடியை பறக்க விட்ட அவல நிலை இனி கொலைகாரன் திப்பு சுல்தான் பிள்ளைகளின் ராஜ்ஜியம் தான். pic.twitter.com/zA0q5y88De
— Krishna Raj (@Krishna1251982) May 13, 2023
Bhatkal. Soon after Congress victory in Karnataka… pic.twitter.com/JZzGWlc30V
— Amit Malviya (@amitmalviya) May 13, 2023
அந்த வீடியோவினை பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தேசிய தலைவர் அமித் மாளவியா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து “பட்கல். கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றவுடன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் தமிழ்நாடு பாஜக சிந்தனையாளர் பிரிவைச் சேர்ந்த கல்யாண் ராமன் டிவிட்டரில் “பாஜக மட்டுமின்றி கர்நாடக மக்களும் தேர்தலில் பாடம் கற்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Not only BJP learn lessons from elections people of Karnataka too pic.twitter.com/LbrCmFixkp
— Kalyan Raman (@KalyaanBJP_) May 14, 2023
உண்மை என்ன ?
அமித் மாளவியா தனது பதிவில் அப்பகுதி பட்கல் (Bhatkal) எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவின் கீப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடினோம். அது கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள பட்கல் என்னும் தொகுதி என்பதை உறுதி செய்ய முடிந்தது. அத்தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மங்கல் வைத்தியா (MANKAL VAIDYA) என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.
அந்த வீடியோவில் பிறை நிலா மற்றும் நட்சத்திரம் உள்ள பச்சை நிற கொடி ஒன்று உள்ளது. அதுமட்டுமின்றி ஓம் எனச் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட காவி நிற கொடி, டாக்டர்.அம்பேத்கரின் உருவம் பொறிக்கப்பட்ட நீல நிற கொடி, மங்கல் வைத்தியா உருவம் பொறிக்கப்பட்ட கொடி மற்றும் காங்கிரஸ் கட்சியின் கொடி ஆகியவை காணப்படுகிறது.
பாகிஸ்தான் கொடி என பாஜகவினர் கூறக்கூடிய பச்சை நிறக் கொடி குறித்துத் தேடியதில், அது இஸ்லாமிய மதத்தினர் பொதுவாகப் பயன்படுத்தக் கூடிய மதக் கொடி என்பதை அறிய முடிந்தது. பாகிஸ்தான் கொடியிலும் பிறை நிலா மற்றும் நட்சத்திரம் இருக்கும். ஆனால் அதன் இடது ஓரத்தில் வெள்ளை நிறம் இடம்பெற்றிருக்கும்.
மேற்கொண்டு இந்நிகழ்வு குறித்து ‘Vartha Bharati’ என்னும் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அச்செய்தியில் அப்பகுதி காவல் கண்காணிப்பாளர் விஷ்ணுவர்தன் கூறியிருப்பதாவது, “அது ஒரு மதக் கொடி. அது பாகிஸ்தான் கொடி அல்ல என்பதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். மேலும், வகுப்புவாத கலவரத்தை உருவாக்கக்கூடிய தவறான தகவல்களைப் பகிர வேண்டாம் என சமூக ஊடக பயனாளர்களிடம் கேட்டுக் கொள்கிறோம்”. காவல் கண்காணிப்பாளர் அளித்துள்ள விளக்கத்தின் மூலமும் அது பாகிஸ்தான் கொடி இல்லை என்பதை அறிய முடிகிறது.
இந்நிகழ்வில் எடுக்கப்பட்ட வேறுசில வீடியோக்களை ஆல்ட் நியூஸ் இணையதளத்தின் இணை நிறுவனர் முகமது சூபர் (Mohammed Zubair) தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவற்றிலும் காவி நிற இந்து மத கொடி மற்றும் பச்சை நிற இஸ்லாமியக் கொடி மட்டுமே உள்ளன. பாகிஸ்தான் கொடி எதிலும் இல்லை.
காங்கிரஸ் கட்சியினர் தங்களின் தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் போது, மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்து மற்றும் இஸ்லாமிய மத கொடிகளைக் கையில் ஏந்தியும், பட்கல் வளையம் என்னும் இடத்தில் கட்டியும் கொண்டாடியுள்ளனர். அதனைப் பாகிஸ்தான் கொடி என்றும், காவிக் கொடி இருந்த இடத்தில் இஸ்லாமியக் கொடியை ஏற்றியதாகவும் தவறான தகவலை பாஜகவினர் பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க : ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பாகிஸ்தான் கொடி என வலதுசாரிகள் பரப்பும் வதந்தி !
இதற்கு முன்னர் பாகிஸ்தான் கொடி பாரத் ஜோடோ யாத்திரையில் பயன்படுத்தப்பட்டது என்ற வதந்தியை வலதுசாரி ஆதரவாளர்கள் பரப்பினர். அதன் உண்மைத் தன்மை குறித்து யூடர்ன் கட்டுரை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க : மசூதியை இடித்த உ.பி அரசு.. பாகிஸ்தான் கொடியை ஏற்றியதால் இடித்ததாக பாஜகவினர் பரப்பும் வதந்தி !
முடிவு :
நம் தேடலில், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியினர் பாகிஸ்தான் கொடியை கையில் ஏந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக பரவும் தகவல் உண்மை அல்ல. அது இஸ்லாமியக் கொடி. மேலும் அவர்கள் காவி நிற கொடியையும் வைத்திருந்தனர் என்பதை அறிய முடிகிறது.