கர்நாடகா வாக்காளர்களுக்கு பாஜக மது பாட்டில், கோழி வழங்கியதாகப் பரப்பப்படும் தெலுங்கான வீடியோ !

பரவிய செய்தி
கர்நாடகா தேர்தல் களத்தில், பாஜக வேட்பாளரின் வாக்கு கேட்கும் லட்சனத்தை பாருங்கள். இவர்கள் தான் ஊழல் ஒழிக்க பிறந்தவர்களாம். எங்கே அந்த அன்ணாமலையை காணவில்லை……?
மதிப்பீடு
விளக்கம்
கர்நாடகா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பசவராஜ் பொம்மை முதலமைச்சராக ஆட்சி செய்து வருகிறார். அவரது பதவிக் காலம் முடிய உள்ள நிலையில், வருகின்ற மே மாதம் 10ம் தேதி கர்நாடகா மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இத்தேர்தலுக்கு பாஜக கட்சியின் தேர்தல் இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.
#கர்நாடக தேர்தல் களத்தில் #பாஜக :@annamalai_k எங்க?
அந்த செருப்பை எடுங்க 👠👡#BJPFailsIndia #BJP4Karnataka pic.twitter.com/SdJBkWRibI— Adham Dx (@DxAdham) April 25, 2023
*கர்நாடகா தேர்தல் களத்தில், பாஜக வேட்பாளரின் வாக்கு கேட்கும் லட்சனத்தை பாருங்கள். இவர்கள் தான் ஊழல் ஒழிக்க பிறந்தவர்களாம்.*
*எங்கே அந்த அன்ணாமலையை காணவில்லை……?*😁 pic.twitter.com/8P7d9RFYgX
— EswaranSu (@SuEswaran) April 25, 2023
இந்நிலையில், கர்நாடகாவில் பாஜக வேட்பாளர் ஒருவர் மது பாட்டில் மற்றும் கோழியைக் கொடுத்து வாக்கு சேகரிப்பதாக வீடியோ ஒன்று திமுகவினரால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
பரவக் கூடிய வீடியோவில் உள்ள கடைகளின் விளம்பரங்கள் தெலுங்கில் உள்ளதைக் காண முடிகிறது. அதேபோல், வீடியோவின் ஒரு பகுதியில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகன் கே.டி.ராமாராவின் புகைப்படம் உள்ளது. மேலும், மதுபாட்டில் வழங்கும் அரசியல்வாதி அணிந்துள்ள துண்டு பாஜகவினர் வழக்கமாக அணியும் காவி நிறத்தில் இல்லாமல் ரோஸ் நிறத்தில் உள்ளது.
இதனை தொடர்ந்து பரவக்கூடிய வீடியோவின் கீப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடினோம். ‘ANI’ தனது டிவிட்டர் பக்கத்தில் 2022, அக்டோபர் 4ம் தேதி அந்த முழு வீடியோவினை பதிவிட்டுள்ளது.
#WATCH | TRS leader Rajanala Srihari distributes liquor bottles and chicken to locals ahead of Telangana CM KC Rao launching a national party tomorrow, in Warangal pic.twitter.com/4tfUsPgfNU
— ANI (@ANI) October 4, 2022
அதில், தெலங்கானா முதலமைச்சர் கே.சி.ராவ் தேசிய கட்சி தொடங்குவதை முன்னிட்டு, டி.ஆர்.எஸ் தலைவர் ராஜனாலா ஸ்ரீஹரி உள்ளூர் மக்களுக்கு மதுபாட்டில் மற்றும் கோழி வழங்கினார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த முழுமையான வீடியோவில் சந்திரசேகர ராவின் படமும் இருப்பதைக் காண முடிகிறது.
இது குறித்து “ABP, ஹிந்துஸ்தான் டைம்ஸ்” போன்ற இணையதளத்திலும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதில், விஜயதசமி அன்று தெலங்கானா முதல்வர் தேசிய அரசியலில் களமிறங்குவது குறித்து அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், டிஆர்எஸ் தலைவர் ராஜனாலா ஸ்ரீஹரி, உள்ளூர் மக்களுக்கு மதுபாட்டில்கள் மற்றும் கோழிகளை வழங்கினார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் நடந்த போதே பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனங்களை தெரிவித்தனர்.
சந்திரசேகர் ராவ் ‘தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி’ என்ற தனது கட்சியை, தேசிய கட்சியாக மாற்றும் நோக்கத்தில் ‘பாரத் ராஷ்டிரிய சமிதி’ எனப் பெயரை மாற்றம் செய்துள்ளார்.
மேலும் படிக்க : கர்நாடகாவில் அடித்து நொறுக்கப்பட்ட பாஜக பிரச்சார பேருந்து எனப் பரப்பப்படும் தெலுங்கானா வீடியோ!
இதேபோல், கர்நாடக தேர்தல் குறித்துப் பரப்பப்பட்ட பல்வேறு போலி செய்திகளின் உண்மைத் தன்மை குறித்தும் யூடர்ன் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க : உரி கவுடா, நஞ்சே கவுடா என மருது பாண்டியர்கள் படங்களைப் பயன்படுத்திய கர்நாடகா பாஜக !
முடிவு :
நம் தேடலில், கர்நாடகா தேர்தலில் பாஜகவினர் வாக்காளர்களுக்கு மது பாட்டில் மற்றும் கோழி கொடுத்ததாகப் பரவும் வீடியோ, 2022ல் தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ் தேசிய கட்சி தொடங்க இருந்ததை முன்னிட்டு அக்கட்சியினர் மக்களுக்கு மதுபாட்டில் அளிக்கும்போது எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.