கர்நாடகாவில் பாஜகவிற்கு வாக்களிக்குமாறு நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியதாகப் பரப்பப்படும் போலிச் செய்தி !

பரவிய செய்தி
கர்நாடகாவில் மாறிய களம், நடிகர் பிரகாஷ்ராஜ் காங்கிரஸ்ஸை எதிர்த்து கடுமையாக பிரச்சாரம்
மதிப்பீடு
விளக்கம்
கர்நாடகா சட்டமன்ற தேர்தல் நாளை (மே, 10ம் தேதி) நடைபெறவ உள்ள நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் எனக் கூறியதாக வீடியோ ஒன்றினை சமூக வலைத்தளங்களில் பாஜக ஆதரவாளர்கள் பரப்பி வருகின்றனர்.
A Message for Karnataka voters …. pic.twitter.com/8PLiTOd9S5
— Rishi Bagree (@rishibagree) May 5, 2023
அந்த வீடியோவில், உங்களது வாக்குகளைக் காங்கிரசுக்கு அளித்து வீணடிக்க வேண்டாம். நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் அல்ல. நான் தன்னிச்சையானவன். இந்த கேவலமான அரசியலை நான் கடுமையாகக் கண்டிக்கின்றேன் என நடிகர் பிரகாஷ் ராஜ் குறிப்பிடுகிறார்.
கன்னடர்கள் @பிரகாஷ்ராஜ் சொல்வதைக் கேட்க வேண்டும், #கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் முட்டாள் #காங்கிரஸ் கட்சிக்கு வாக்குகளை வீணாக்காதீர்கள். ஏதாவது கருத்து @DKShivakumar @siddaramaiah @INCKarnataka
என்னடா,பிரகாஷ்.. தொங்கிடுச்சா..
உன்னோட இழிபிறப்பு https://t.co/It1tCYklhh— anantham (@ananthamharshi) May 6, 2023
இதேபோல், பாஜகவைக் கடுமையாக விமர்சித்து வந்த பிரகாஷ் ராஜ், காங்கிரசுக்கு ஒட்டு போடாதீர்கள், பாஜகவிற்கு ஒட்டு போடுங்கள். பாஜக பற்றி நான் தவறாகப் புரிந்து கொண்டேன். அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக ஆட்சி நடத்துகிறார்கள் எனச் செய்தியாளர் ஒருவருக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாக ரங்கராஜ் அவர்களுடன் பேசக்கூடிய வீடியோ ஒன்றினையும் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
நடிகர் பிரகாஷ் ராஜ் காங்கிரஸ் கட்சி குறித்துப் பேசியதாகப் பரவும் வீடியோவின் கீப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடியதில், அவ்வீடியோ 2019ம் ஆண்டு பிரகாஷ் ராஜ் பேசியது என்பதை அறிய முடிந்தது.
பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது நண்பரும் நடிகருமான பிரகாஷ் ராஜ் தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக 2019ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலின்போது கர்நாடகா மாநிலம் மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார்.

அத்தேர்தலின் போது பிரகாஷ் ராஜ் காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட்டதாக, அவருடன் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரிஸ்வான் அர்ஷத் இருக்கும் புகைப்படம் ஒன்றினை காங்கிரஸ் கட்சியினர் பரப்பியுள்ளனர். மேலும், பிரகாஷ் ராஜுக்கு தங்களின் வாக்குகளைச் செலுத்தி வீணடிக்க வேண்டாம் என்றும் அப்புகைப்படத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
காங்கிரஸ் கட்சியின் இத்தகைய போக்கினை கண்டித்து பிரகாஷ் ராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் தேதி வீடியோ ஒன்றினைப் பதிவிட்டுள்ளார்.
FAKE NEWS by CONGRESS.. look at the dirty politics of this party. SHAME ON CONGRESS.. HAVE SENT THE COMPLAINT TO ELECTION COMMISSION WITH PROOF ..please spread and share to counter DIRTY POLITICS pic.twitter.com/4hjAibE2vg
— Prakash Raj (@prakashraaj) April 17, 2019
அதில், “மத்திய பெங்களூர் பகுதியில் காங்கிரஸ் கட்சி செய்துள்ள மோசமான அரசியலைப் பாருங்கள். ரிஸ்வானுடைய உதவியாளர் மசார் அகமது என்பவர், நானும் ரிஷ்வானும் ஒரு நிகழ்ச்சியில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தினை பதிவிட்டு, பிரகாஷ் ராஜ் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவிக்கிறார் எனத் தவறான தகவலைப் பரப்பி வருகிறார்.
நான் எந்த கட்சியிலும் இணையவில்லை. நான் சுயேச்சையானவன். காங்கிரஸ் மற்றும் ரிஸ்வானின் இத்தகைய செயலை கடுமையாகக் கண்டிக்கின்றேன். தேர்தல் ஆணையத்திடம் இது குறித்து புகார் அளிக்கவுள்ளேன். பொய் செய்திகளை நம்ப வேண்டாம் எனப் பேசியுள்ளார்.
Look at MAZHAR AHMED from congress SHAMELESSLY saying he just forwarded FAKE NEWS …TIME TO TEACH THEM ETHICS.. pic.twitter.com/KKRuDYdBna
— Prakash Raj (@prakashraaj) April 17, 2019
மேலும், மசார் அகமது என்பவருடன் தான் பேசக்கூடிய ஆடியோவினையும் வெளியிட்டுள்ளார். இது குறித்து ‘Deccan Herald’ இணையதளத்திலும் செய்திகள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, பிரகாஷ் ராஜ் குறித்து பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருவதாகவும், அவர் ஒரு சுயேச்சை வேட்பாளர் என்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரிஸ்வானும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Apparently, some fake news is being circulated about prakash raj's association with me. Request ppl not to fall for such rumours.
I hv fought this election on the agenda of development & I hv people's blessing with me.@prakashraaj is an independent candidate & I wish him luck.— Rizwan Arshad (@ArshadRizwan) April 17, 2019
இவற்றிலிருந்து பிரகாஷ் ராஜ் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் எனக் கூறியதாகப் பரவும் வீடியோ 2019ம் ஆண்டு எடுக்கப்பட்டது. மேலும் அதில் பாஜகவிற்கு வாக்களிக்க கூறி அவர் குறிப்பிடவில்லை என்பதையும் அறிய முடிகிறது.
அடுத்ததாகப் பரவக் கூடிய வீடியோவில், பத்திரிக்கையாளர் ரங்கராஜ்-க்கு அளித்த நேர்காணலில் பாஜக பற்றித் தான் தெரிந்து கொண்டதாகவும், பாஜகவிற்கு வாக்கு செலுத்துங்கள் என பிரகாஷ் ராஜ் கூறியதாக உள்ளது.
பிரகாஷ் ராஜ் தந்தி டிவியின் கேள்விக்கென்ன பதில் என்னும் நேர்காணல் நிகழ்ச்சிக்கு 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் தேதி நேர்காணல் ஒன்றினை அளித்துள்ளார். அதில், GST, கௌரி லங்கேஷ் கொலை, பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசியுள்ளார்.
கௌரி லங்கேஷ் கொலையினை மோடியின் ஆதரவாளர்கள் சிலர் கொண்டாடுகின்றனர். அதனை மௌனமாக மோடி வேடிக்கை பார்க்கிறார் என்று பேசியுள்ளார். எந்த ஒரு இடத்திலும் பாஜகவிற்கு ஆதரவாகவோ, பாஜகவிற்கு வாக்கு செலுத்துங்கள் என்றோ அவர் பேசவில்லை.
Its my request… Bring down #BJP4Karnataka .. ensure THE END of this jokers .. 🙏🏿🙏🏿🙏🏿 #ಬಿಜೆಪಿ_ಮುಕ್ತ_ಕರ್ನಾಟಕ ವನ್ನು ನಿಜವಾಗಿಸಿ .. ಈ ವಿದೂಶಕರನ್ನು ಮುಗಿಸಿ ..ಕರ್ನಾಟಕವನ್ನು ಕಾಪಾಡಿ 🙏🏿🙏🏿🙏🏿 #justasking #KarnatakaAssemblyElections2023
— Prakash Raj (@prakashraaj) May 8, 2023
2023 மே 8ம் தேதி நடிகர் பிரகாஷ் ராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ” கர்நாடகா பாஜகவை வீழ்த்துங்கள்.. இந்தக் கோமாளிகளின் முடிவை உறுதி செய்யுங்கள் ” எனப் பதிவிட்டு இருக்கிறார்.
முடிவு :
நம் தேடலில், கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு செலுத்தாமல், பாஜகவிற்கு வாக்கு செலுத்துமாறு நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அது, 2019ம் ஆண்டு அவர் காங்கிரசில் இணைந்துவிட்டதாகப் போலி செய்தியைக் காங்கிரஸ் கட்சியினர் பரப்பிய போது வெளியிட்ட வீடியோ. அதனை எடிட் செய்து பாஜகவினர் தற்போது பரப்பி வருகின்றனர்.
அதில் அவர் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு செலுத்த வேண்டாம் என்று மட்டுமே கூறியுள்ளார். பாஜகவிற்கு வாக்கு செலுத்துமாறு எந்தவொரு இடத்திலும் கூறவில்லை. மேலும், தற்போதைய 2023 தேர்தலில் பாஜகவிற்கு வாக்கு செலுத்த வேண்டாம் என்றே கூறியுள்ளார் என்பதையும் அறிய முடிகிறது.